உயிர் பன்மயமாதல்
Bio- Diversity - Tamil Economics Articles

இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் உணவிற்காகவும், இதர வசதிக்காகவும் மற்றொரு உயிரினத்தைச் சார்ந்தே வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு வாழ்கின்ற உயிரினச் சூழலை, "உயிர்ச்சங்கிலி" என அழைப்பர். இதில் ஒவ்வோர் உயிரினத்திற்குத் தனித்தனி பங்குண்டு. இவற்றில் ஏதாவது ஓர் இனம் மட்டும் அழிந்தாலோ, அதிகமாகப் பெருகினாலோ அதற்கடுத்து உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்த உயிர்ச் சூழலும் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

மனித இனத்திற்குத் தேவையான உணவு, மருந்துப் பொருள்கள், எரிபொருள்கள், உடைகள், மரங்கள் போன்றவைகளை இயற்கை உயிர்பன்மயச் சூழல் (Bio - Diversity) வழங்குகின்றது. மேலும் பருவகால மாறுதலைக் கட்டுப்படுத்துதல், தண்ணீரைச் சுத்தமாக்குதல், மண் அழிவைப் புதுப்பித்தல், உணவுச் சுழற்சி, கழிவுகளை மறுசுழற்சி செய்தல், பயிர்களில் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்துதல் போன்று பல்வேறு வகைகளில் உதவுகின்றது. இதனுடைய பொருளாதாரப் பயன் ஒவ்வோர் ஆண்டிற்கும் சுமார் 33 டிரில்லியன் டாலராகும்.

சுமார் 30 வகையான பயிர்களிலிருந்து மனித இனத்திற்குத் தேவையான 90% உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது.

நாம் வீடு கட்டவும், தொழிற்சாலை அமைப்பதற்காகவும் வளமான விவசாய நிலங்களை அழிக்கின்றோம்.

நம்முடைய பொருளாதார வசதிக்காக இயற்கை வளங்கள் மீது தாக்குதல் நடத்துவதன் விளைவாக ஏற்கெனவே வாழ்ந்து வரும் உயிரினங்கள் உணவிற்காகவும், இடவசதிக்காகவும் வேண்டுமென்றோ அல்லது எதிர்பாராத விதமாகவோ இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு நம்முடன் இயற்கை வளங்களை அழித்து உணவிற்காகப் போட்டியிடும் நிலை ஏற்படுகின்றது.

நம்முடைய தொழிற்புரட்சியினால் ஏற்படும் கழிவுகளை பெருங்கடல்கள், ஆறுகள், ஏரிகள், நிலங்கள் போன்ற இடங்களில் கொட்டி நிரப்பிக் கொண்டு இருக்கின்றோம். இயற்கையானது ஒரு குறிப்பிட்ட வரையறை வரை இந்தக் கழிவுகளை மறு சுழற்சி செய்கின்றது. அதற்கு மேலும் சேரும் கழிவுக் குப்பைகள் இயற்கையால் மறு சுழற்சி செய்ய இயலாமல் மற்ற சிற்றுயிர்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்ற நிலை ஏற்படுகின்றது.

நாம் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களை வரைமுறையின்றி அதிக அளவிற்குச் சுரண்டி, அழித்துக் கொண்டே செல்வதால் இயற்கையானது தானாகவே புதுப்பிக்க இயலாமல் மொத்த வளங்களும் அழிந்து வேறு வளங்களைத் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு இயற்கை வளங்களையும் உயிரினங்களையும் அழிப்பதால் பருவகாலங்களில் மாறுதல் ஏற்பட்டு மழைப்பொழிவு போன்ற இயற்கை நிகழ்ச்சிகூட தவறுகின்ற சூழ்நிலை ஏற்படும்.

இயற்கை வளங்களில் தாவர வளர்ச்சியில் 40%, கடல் வாழ் வளத்தில் 30%, சுத்தமான நீரில் 10% எடுத்துக் கொள்கிறோம். இந்த விகிதத்தில் இவற்றைப் பயன்படுத்துவதால் இவை இதே வேகத்தில் புதுப்பிக்கப்படுமா? கடந்த காலங்களில் எவ்வளவு உயிரினங்கள் இருந்தன? எவ்வளவு நம்மால் அழிக்கப்பட்டுள்ளன?

இதுவரையில் நான்கைந்து முறைகள் உலகில் மொத்த உயிரினங்களும் அழிந்துள்ளன. கடைசியாக 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிறுகோள்கள் பூமியைத் தாக்கியதால் புவியில் வாழ்ந்து வந்த 85% மேல், முக்கியமாக டினோசரஸ் உள்பட, உயிரினங்கள் அழிந்து போயின. அதைவிட தற்போது உலக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தாவர இனங்கள், விலங்கினங்கள் அழியும் வேகம் அதிகமாக உள்ளது.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புறத்தாக்குதலினால் புவியில் ஏற்பட்ட உயிரினங்களின் பேரழிவு ஏற்பட்டது. மனித இனத்தின் பேராசையினால் இப்போது அதைவிட அதிக அளவு உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த அழிவிற்கு நாம் அனைவருமே காரணமானவர்களாவோம். உடனடியாக இந்த அழிவைத் தடுக்காதிருந்தால் நாம் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் நமக்குக் கிடைக்காமல் மனித இனமே அழியும் நிலை ஏற்படும்.

இயற்கை வளங்களை அழிப்பதை உடனே நிறுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களை மீண்டும் புதுப்பிக்கும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.

நிலையான இயற்கை வளங்களின் வளர்ச்சி ஏற்பட வனவிலங்கு சரணாலயம், மீன் சரணாலயம், பறவைகள் சரணாலயம், பாதுகாக்கப்பட்ட காடுகள் போன்று மேலும் அதிக அளவு ஏற்படுத்தி பாதுகாக்க வேண்டும். மரபணு மாற்றுப் பயிர்களினால் உயிர்பன்மயத்தில் என்ன விளைவு ஏற்படும் என ஆய்வு செய்து, அதனால் இப்போதைய உயிர்பன்மயத்தில் மாறுதல் இல்லாமல் இருக்க தக்க வழி செய்ய வேண்டும்.

இயற்கைச் சூழலில் கிடைப்பதற்கரிதான உயிரினங்களை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link
Site Meter