பள்ளி திறந்தாச்சு! (

School Opening!

)
School Opening! - Tamil Katturaikal - General Articles

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு பழைய நண்பர்களைப் பார்த்த பரவசத்திலும், புது நண்பர்களைப் பார்த்த பரவசத்திலும், புது நண்பர்கள் கிடைத்த குதூகலத்திலும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விட்டனர். மே மாதம் முழுவதும் காலை நேரத்தை ஓய்வாகக் கழித்த பெற்றோர் ஜூன் பிறந்ததும் பரபரப்பாகி விட்டனர். நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும் வயதில் பிள்ளைகள் இருந்தால் அம்மாக்களுக்கு காலை நேரம் அவ்வளவாக கவலை தராது. எல்.கே.ஜி யிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் உள்ள வீட்டில் தான் பிரச்சினை.

உறங்கும் குழந்தையை விடியற்காலையில் சரியான நேரத்தில் தட்டி எழுப்பிப் பால் குடிக்க வைத்துவிட்டாலே பல அம்மாக்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ மாதிரி மகிழ்ச்சி கொள்கிறார்கள். காரணம், விடுமுறையில் குழந்தைகள் நினைத்த நேரத்தில் உறங்கி, தங்கள் விருப்பப்படி எழுந்து பழகியிருப்பார்கள். இந்தப் பழக்கத்தை உடனே மாற்ற முடியாது. அதே நேரத்தில் இந்தப் பழக்கம் பள்ளி திறந்த பிறகும் தொடரக் கூடாது. இரவு ஒன்பது மணிக்குள் உறங்கச் சென்று காலையில் ஐந்து அல்லது ஆறு மணிக்கு எழுந்திருக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்குச் சரியான அளவு உறக்கம் கிடைக்கும்.

இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிப்பது அல்லது தொலைக்காட்சி பார்ப்பது விடிந்தபின் மிகவும் தாமதமாக எழுந்திருப்பது போன்ற தவறான பழக்கங்களால் தலைவலி, கண் எரிச்சல், உடல்சோர்வு, ஆர்வமின்மை, கவனமின்மை முதலியவை உண்டாகும். மேலும் இவர்களுக்குச் சரியான நேரத்தில் பசிக்காது. சாப்பிடப் பிடிக்காது. இது சத்துக்குறை நோய்களுக்கு வழிவிடும்.

பல அம்மாக்கள் தங்கள் பணிச்சுமையைக் குறைக்கக் குழந்தைகளின் டிபன் பாக்ஸில் ஏதாவது ஓர் உணவை அடைத்து அனுப்பிவிடுகின்றனர். இது தவறு. நீங்கள் அளிக்கும் உணவுதான் குழந்தையின் கற்றல் ஆற்றலுக்கு அடிப்படை. பள்ளி செல்லும் குழந்தை அனைத்து ஊட்டச் சத்துகளும் அடங்கிய சரிவிகித உணவை உண்டால்தான் நாள் முழுவதும் உற்சாகமாகச் செயல்பட முடியும் வகுப்பில் நன்கு கவனம் செலுத்திப் பாடங்களைப் புரிந்து படிக்க முடியும். ஆகவே குழந்தைக்குக் கொடுத்தனுப்பும் உணவில் கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின் சத்துகள் அடங்கிய சாதம், பருப்பு, தயிர் கீரை போன்றவை முக்கியமாக இடம் பெற வேண்டும். அதற்காக தினமும் ஒரே மாதிரி உணவைத் தந்தால் குழந்தைக்குப் போரடித்துவிடும், பதிலாக, தினமும் வெவ்வேறு உணவுகளை விதம் விதமாகக் கொடுத்தனுப்பினால் விரும்பிச் சாப்பிடும்.

சில வீடுகளில் குழந்தை பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் இருக்கும்போதுதான் சிருடைகளைத் தேடிக் கொண்டிருப்பார்கள் அல்லது "அயர்ன்" செய்து கொண்டிருப்பார்கள். இது குழந்தைக்கும் சரி, பெற்றோருக்கும் சரி தேவையில்லாத பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தும் நேரமும் விரயமாகும். இதைத் தவிர்க்க குழந்தைக்குத் தேவையான சிருடைகளை முதல் நாளே தயார் செய்துவிட வேண்டும். குறைந்தது மூன்று ஜோடி சிருடைகள் கைவசமிருந்தால் நல்லது. தினமும் சுத்தமான சிருடைகளைச் சரியாக அணிந்து வரும் குழந்தைகளை ஆசிரியர்களுக்கும் ரொம்ப பிடிக்கும். இவர்களுக்கு வகுப்பில் தனி கவனம் கிடைப்பதற்கும் வாய்ப்புண்டு.

மறுநாள் பள்ளிக்கு எடுத்துச் செல்லவேண்டிய புத்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில், ரப்பர், படங்கள் போன்றவற்றை முதல் நாள் இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பு சரிபார்த்து புத்தகப் பையில் எடுத்து வைக்கும் நல்ல பழக்கத்தைக் குழந்தைக்குச் சிறுவயதிலிருந்தே கற்றுக் கொடுங்கள். பஸ் நிறுத்தத்திற்கு வந்தபிறகு வரலாற்றுப் பாடத்திற்கு "மேப்" கொண்டு வர மறந்து விட்டோமே என்று குழந்தை மீண்டும் வீட்டுக்கு ஓடி வருவது, வகுப்பில் ஓசிப் பேனா வாங்குவது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். பள்ளிப் பொருள்களை வாங்கும்போது முடிந்தவரை குழந்தையும் கடைக்கு அழைத்துச் செல்லுங்கள். குழந்தைக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்க குழந்தைக்கே வாய்ப்புக் கொடுங்கள். அப்போது தான் அப்பொருளின் மீது குழந்தைக்கு முழுமையான ஈடுபாடு ஏற்படும். பள்ளிக்கு அதை எடுத்துச் செல்ல மறக்காது. அதனைச் சரியாகப் பயன்படுத்தும் பத்திரப்படுத்தும்.

பள்ளியில் விளையாட்டும் கல்வியும் கலந்த சுகமான சூழல் அமைந்தால் குழந்தைகள் தாங்களே பள்ளிக்கு விரும்பிச் செல்வார்கள். மேலும் பள்ளியில் ஏற்படும் நல்ல நட்பும் பள்ளியை விரும்ப வைக்கும். அதற்கு மற்ற குழந்தைகளுடன் நட்புடன் பழக வேண்டிய அவசியத்தைப் பெற்றோர் குழந்தைக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். குழந்தைகள் என்றால் விளையாட்டுத்தனம் தூக்கலாக இருப்பது இயல்புதானே! ஆசிரியர்கள் என்னதான் கவனமாக இருந்தாலும் அவர்கள் கண்ணை மறைத்து விட்டு, அவர்களுக்குள் அடித்துக் கொள்வார்கள், தள்ளி விடுவார்கள், கிள்ளிவிடுவார்கள் இம்மாதிரியான சிறு சச்சரவுகளையெல்லாம் பெரிதுபடுத்திப் பெற்றோரிடம் புகார் கூறுவதைவிட பள்ளியிலேயே அவற்றுக்குத் தீர்வு காண்பது எப்படி என்பதை அம்மாக்கள் தங்கள் பள்ளி வாழ்க்கை அனுபவங்களைக் கதை போலக் கூறினால் குழந்தைகளிடம் நட்புக் பூக்கள் பூக்கும். நல்ல நட்பு, போகப்போக கல்வி கற்றலிலும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும்.

அடுத்து, குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களுடன் பயமின்றி பழகினால்தான் அவர்களுடைய கற்கும் ஆற்றல் விரைவில் பெருகும். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களைக் கண்டால் பயந்து ஒதுங்கிச் செல்வதுதான் நடைமுறை. இதை மாற்றுவது பெற்றோர் கையில்தான் உள்ளது. மாதம் ஒருமுறை உங்கள் குழந்தையின் வகுப்பாசிரியர், பாட ஆசிரியர், தலைமையாசிரியர் அல்லது பள்ளி முதல்வரைச் சந்தியுங்கள். பள்ளியில் அல்லது ஆசிரியர்களிடம் நீங்கள் காணும் குறைகளைச் சுட்டிக்காட்ட உங்களுக்கு உரிமை உண்டு. அதற்காக ஆசிரியர்களோடு சண்டை போடதீர்கள். போட்டால் இழப்பு உங்களுக்குதான் எந்த ஒரு நல்ல ஆசிரியருக்கும் நீங்கள் சண்டை போட்டபின்பு உங்கள் குழந்தையைப் பார்க்கும்போது அந்தச் சண்டைதான் நினைவுக்கு வரும். மாறாக, ஆசிரியர்களுடன் நீங்கள் நட்பை வளர்த்துக் கொண்டால் குழந்தையும் பயம் குறைந்து அவர்களோடு நட்புடன் பழகத் தொடங்கும். ஆசிரியர்களுக்கும் உங்கள் குழந்தை மீது தனி அக்கறை உருவாகும்.

இப்போது எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தை ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு நியாயமானதே. அதற்கான அடித்தளத்தை ஆரம்ப வகுப்புகளிலேயே அமைக்க வேண்டியதுதான் முக்கியம். முதலில் வகுப்பாசிரியரைச் சந்தித்து உங்கள் குழந்தையின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைப் பள்ளி திறந்தவுடனேயே கூறிவிடுங்கள். குழந்தையிடம் காணும் அசாதாரணத் திறமைகள், ஆர்வமாகப் படிக்கும் பாடங்கள், படிக்கச் சிரமப்படும் பகுதிகள் போன்றவற்றை முன்கூட்டியே எடுத்துச் சொல்லி, குழந்தையின் திறமைகள் மேம்படுவதற்கு எங்கெல்லாம் வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்கிற உங்கள் எதிர்பார்பைக் கூறுங்கள். காரணம், நான்கிலிருந்து பதினைந்து வயதிற்குள் குழந்தைக்குக் கிடைக்கும் வாய்ப்புகளும் அதைக் குழந்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமும்தான், அதன் தனித்திறமைகள் வளர்வதற்கும், பிற்காலத்தில் சாதனையாளராக உருவாவதற்கும் உதவுகின்றன என்பதை அறிவியல் ரீதியில் உறுதி செய்துள்ளனர். உங்கள் குழந்தைக்கு அவ்வாய்ப்புகள் சரியாக வழங்கப்படுகிறதா, நீங்கள் எதிர்பார்க்கின்ற வளர்ச்சி குழந்தையின் வயதிற்கேற்ப ஏற்படுகிறதா என்பதையும் கண்காணியுங்கள்.

தினமும் குழந்தையுடன் அமர்ந்து வகுப்பில் நடத்திய பாடங்கள், தரப்பட்டுள்ள வீட்டு வேலைகள், பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றைக் கேளுங்கள். குழந்தை ஆர்வமுடன் தானே புத்தகத்தை எடுத்துப் படிப்பதற்கு வீட்டுச் சூழல்களை ஒழுங்குபடுத்துங்கள்.

மாதம் ஒரு முறை படிப்பு, டியூசன், என்ற அழுத்தங்களை மறந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளியிடத்திற்குச் சென்று வாருங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் குழந்தை சாதாரணக் குழந்தையாக இருக்காது. வருங்காலச் சவால்களையெல்லாம் சமாளித்துச் சாதனை படைக்கும் வெற்றிக் குழந்தையாக உருவாகும்.

நன்றி: தினமணி

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link
Site Meter