குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்களும் சிகிச்சைகளும்
ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என மகாகவி பாரதியார், தமது கவிதையில் விளையாட்டின் முக்கியத்துவத்தைக் குழந்தைகள் புரிந்து கொள்ளும்படி எடுத்துரைத்துள்ளார். குழந்தைகள் என்றாலே விளையாடத்தான் செய்வார்கள். அது குழந்தைகளின் இயல்பு. அப்படி குழந்தைகள் விளையாடும்போது, அவர்களது எலும்பு மற்றும் மூட்டுகளில் காயம் ஏற்படுவதும் சகஜம் தான். இதுபோல் விளையாடும்போது ஏற்பட்ட பாதிப்பின் சிறிய பின்விளைவுதான் விளையாட்டுக் காயங்கள். குழந்தைகள் விளையாடும்போது ஏற்படும் விளையாட்டுக் காயங்களைப் பற்றியும் அதற்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்களுக்கும் பெரியோர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கும் என்ன வித்தியாசம்?
குழந்தைகளின் எலும்புகள் முழு வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதால், எளிதில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும். இதுபோல் ஏற்படும் எலும்பு முறிவை பிளாஸ்டர், ட்ராக்ஷன் மற்றும் மயக்க மருந்து கொடுத்து எலும்புகளை நேர்ப்படுத்தியும் சரி செய்யலாம். இவர்களுக்குத் திறந்தவழி அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.
உலோகப் பொருள்களைக் குறைவாகப் பயன்படுத்தியே எலும்பு முறிவைச் சரிப்படுத்த முடியும். ஆனால், அதேநேரம் விளையாட்டின்போது மூட்டில் முறிவு ஏற்பட்டு, ரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, ஆழமான காயங்கள் ஏற்பட்டால் உடனடி திறந்த வழி அறுவைச் சிகிச்சை முறையே மிகவும் அவசியமானது.
வளரும் குருத்தெலும்பு குழந்தைகளுக்கு அதிகம் உள்ளது. விளையாடும்போது ஏற்படும் காயத்தால் வளரும் குருத்தெலும்புக்குப் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது எலும்புகளில் ஊனம் ஏற்படும். க்ரீன் ஸ்டிக் எனப்படும் எலும்பு முறிவும் விளையாட்டின்போது ஏற்படும். இதனால் எலும்பின் ஒரு பக்கம் உடைந்தும் மறு பக்கம் வளைந்தும் இருக்கும்.
குழந்தைகளது மூட்டு நார்களின் இழுதிறன் அதிகமாக இருப்பதால், மூட்டு நார் கிழிதல் எளிதில் ஏற்படாது. மூட்டு நார்களில் பாதிப்பு ஏற்படும்போது நார் குருத்து எலும்புடன் சேரும் இடத்திலிருந்து சிறிதோ, முழுவதுமாகவோ இடம் பெயர்ந்துவிடும்.
பெற்றோர் கண்டறியும் முறை: ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வலி ஏற்படும் இடத்தைக் குறிப்பிட்டு சொல்லத் தெரியாது. அவர்கள் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பார்கள். அல்லது நொண்டி நொண்டி நடப்பார்கள். அடிபட்ட கை, கால்களை அசைக்க மறுப்பார்கள். தம் குழந்தைகளது அழுகையையும் வித்தியாசமான நடையையும் நன்கு கவனிக்கும் பெற்றோர் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதை யூகம் செய்து கொண்டு ஊர்ஜிதம் செய்து கொள்ள மருத்துவரை அணுக வேண்டும்.
அதிகம் பாதிக்கப்படும் எலும்புகள்: குழந்தைகளின் முழங்கை மூட்டு, கணுக்கை மூட்டு, முழங்கால் மூட்டு, கணுக்கால் மூட்டுகள் மற்றும் அவற்றை அமைக்கும் எலும்புகள் விளையாட்டு விபத்தினாலும் குழந்தைகள் கீழே விழுவதாலும் அதிக அளவில் பாதிக்கப்படும் எலும்புகள் ஆகும்.
காயங்களின் வகைகள்: விளையாடும்போது ஏற்படும் காயங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். 1. உடனடிக் காயங்கள். 2. நாள்பட்ட காயங்கள்.
உடனடிக் காயங்கள்: உடனடிக் காயங்கள் என்பது விளையாடும்போது ஏற்படும் காயத்தால் உடனடியாக ஏற்படும் பாதிப்புகளாகும். இவை கீழே கூறப்பட்டுள்ள பாதிப்புகளில் ஏதேனும் ஒன்றாகவோ, ஒன்றுக்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம்.
1. எலும்பு முறிவுகள் 2. எலும்பு நகர்தல் 3. மூட்டு நார் கிழிதல் மற்றும் அரைவட்டக் குருத்தெலும்பு எனப்படும் மெனிஸ்கையில் ஏற்படும் காயங்கள். 4. மூட்டுக்குள் ரத்தக் கோர்வை 5. தசைப்பிடிப்பு மற்றும் தசைச் சுளுக்கு 6. எலும்பு தன் இடத்திலிருந்து விரைவில் இடம் பெயர்தல்.
நாள்பட்ட காயங்கள்: நாள்பட்ட காயங்கள் என்பது விளையாடும்போது ஏற்படும் காயத்தால் சிறிது நாள்களுக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகளாகும். அதிகமாக மூட்டுகளை உபயோகிப்பதால் ஏற்படும் காயங்களும் நாள்பட்ட காயங்களாகும்.
மற்ற நாள்பட்ட காயங்கள்:-
1. மூட்டுக் குருத்தெலும்பில் ஏற்படும் காயங்கள்.
2. சிறிது சிறிதாக எலும்பு தன் இடத்திலிருந்து இடம் பெயர்தல்
3. அழுத்த எலும்பு முறிவுகள்.
அதிக உபயோகத்தால் ஏற்படும் காயங்கள்:-
இது விளையாட்டின்போது அடிக்கடி ஏற்பட்ட நாள்பட்ட காயங்களாகும். எலும்புகளுக்கு மிதமான அளவு பாதிப்பை ஏற்படுத்தி வலி தரும். முழங்கால் மூட்டு, முழங்கை மூட்டு, தோள்பட்டை மற்றும் முதுகெலும்புகளை அதிகமாக உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகளே ஆகும்.
அதிக உபயோகத்தால் ஏற்படும் காயங்களுக்கான காரணங்கள்:-
1. தவறான முறையில் விளையாட்டுப் பயிற்சி அளித்தல்.
2. குறைந்த நேரத்தில் அதிகப் பயிற்சி அளித்தல்.
3. சரியான மேற்பார்வை இல்லாத பயிற்சி முறைகள்.
4. வளர்ச்சி அதிகரித்தலின்போது தசை மற்றும் தசை நார்களின் வளர்ச்சிக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் இடையே உள்ள முரண்பாடுகள், தசை நார்களின் நீளத்துக்கும் எலும்புகளின் நீளத்துக்கும் அதிக வித்தியாசம் இருந்தால் எலும்புகள் மீது அழுத்தம் அதிகமாகி எலும்பு தன்னிடத்திலிருந்து இடம் பெயர்ந்து விடும்.
5. மாறுபட்ட உடற்கூறு அமைப்பு.
உதாரணமாக, தொடை எலும்பு முன்பக்கம் சாய்ந்து அமைந்திருத்தல், கால் எலும்புகளின் நீள அளவில் முரண்பாடு, டிபியா எனப்படும் கால் எலும்பின் கோணலான அமைப்பு, முழங்கால் மூட்டுச் சில் எலும்பு உயரமாக இருத்தல், பாதங்கள் வெளிப்புறமாக அமைந்திருத்தல்.
6. விளையாட்டில் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் பாதணிகள் சரியான அளவில் இல்லாததும் விளையாடும் இடம் சமதளம் இல்லாததும் ஓவர்யூஸ் காயம் ஏற்பட முக்கியக் காரணங்கள்.
7. உணவில் சத்துக் குறைபாடுகள்.
8. மன உளைச்சல்கள்.
சிகிச்சை முறைகள்:-
குழந்தைகளை நன்கு பரிசோதனை செய்தும் எக்ஸ்ரே மூலமும் ஓவர்சீஸ் காயங்களுக்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். காரணங்களைக் கண்டறிந்தபின்பு, அதற்குரிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும். விளையாட்டுக்குப் பின் தகுந்த ஓய்வு எடுத்தல் வேண்டும்.
ஓரளவுக்கு ஓய்வு எடுத்த பின்பு சிறிது சிறிதாக விளையாட ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் சுமாராக பத்து சதவீதம் விளையாட்டு நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்.
முழங்கால் மூட்டுக் காயங்களை ஏற்படுத்தும் விளையாட்டுகள்:-
கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாட்டுகளில் முழங்கால் மூட்டில் திருகு காயங்கள் ஏற்பட்டு முன் குறுக்குநார் கிழிந்துவிடும். இந்த விளையாட்டுகளில் அரைவட்டக் குருத்தெலும்பு மற்றும் நுனிக் குருத்தெலும்புக்கும் சேதம் ஏற்படலாம்.
விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்:-
குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதால் உடலுக்கும் மனத்துக்கும் நிறைய நன்மைகள் ஏற்படும். உடல் எடை சரியான அளவில் இருக்கும்.
தசைகளின் பலம் அதிகமாகும். குழு உணர்ச்சி ஏற்படும். எல்லோருடனும் ஒத்துப் போகும் தன்மை வரும். தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் குணங்கள் ஏற்படும். எனவே பெற்றோர்கள் தமது குழந்தைகளின் உணவு, உடை, படிப்பு, பாட்டு போன்றவற்றில் உடல் நலம் மற்றும் மன நலம் போன்ற நல்ல குணங்களை ஏற்படுத்தித் தரும் விளையாட்டிலும் அதிகக் கவனம் செலுத்தி தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்த ஓர் இளைஞர் சமூகம் உருவாவதற்கு வழி வகுக்க வேண்டும்.
பேட்டி
- கோடைகாலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சிறுநீர் பிரச்சினைகள்!
- உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!
- கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?
- மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மைகள்!
- மாதவிலக்குக்கு முன்பாக பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகள்!
- 'மசாஜ்' உடலுக்கு எவ்வாறு நலம் பயக்கிறது?
- குளிர் காலங்களில் அதிக பாதிப்பு ஏன்?
- சாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி?
- ரத்த அழுத்தம் என்றால் என்ன?
- பல் பிரச்சினைகள் வராமல் தடுக்க....!







