வார ராசிபலன் 30.06.2009 முதல் 06.07.2009 வரை
மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் ராசிக்கு 2-ஆம் இடத்தில் ரிஷபத்தில் மாறுகிறார். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் அங்கு ஆட்சி பெறுகிறார். 4-ல் உள்ள சனியும் ஜென்மத்தில் உள்ள செவ்வாயும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால் உங்களுடைய முயற்சியும் உழைப்பும் பாலைவனத்தில் பெய்த மழைபோல- விழலுக்கு இறைத்த நீர் போல பயனற்றதாக இருக்கும். செவ்வாய் ராசிநாதன் என்பதால் உங்களுடைய பேருக்கும் புகழுக்கும் பொறாமையாளர்கள் இடையூறு ஏற்படுத்தலாம். என்றாலும் 5-க்குடைய சூரியன் சாரத்தில் செவ்வாயும் சுக்கிரனும் நிற்பதால், ''போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைத்தால் அக்கருத்தை சாற்றுவேன்; எவர் எதிர்த்தாலும் நில்லேன் அஞ்சேன்'' என்று கவியரசர் கண்ணதாசன் பாடிய மாதிரி, எவருக்காகவும் உங்கள் லட்சியத்தையும் கொள்கையையும் செயல்களையும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். 2-க்குடைய சுக்கிரன் ஆட்சி என்பதாலும் அவருக்கு 2-ல் சூரியனும் புதனும் அமர்வதாலும் பொருளாதாரத்தில் பற்றாக்குறைக்கோ நெருக்கடிக்கோ தட்டுப்பாட்டுக்கோ இடமில்லாத வகையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். 5-க்குடைய சூரியன் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால், நாம் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை; அதனால் நமக்கு எந்தக் கெடுதலும் வராது என்றும்; தெய்வம் நம்மைக் காப்பாற்றி வழி நடத்தி ஆபத்தில் கைகொடுத்துக் கரை சேர்க்கும் என்ற தன்னம்பிக்கையும் நிலவும்.
ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ராசியில் ஆட்சி பெற்று, யோகாதிபதியான சனியின் பார்வையைப் பெறுகிறார். அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கும் சௌகர்யங்களுக்கும் எந்தக் குறையும் இல்லை; எந்தக் குறையும் வராது. ரிஷப ராசிக்கு தர்மகர்மாதிபதி சனியும் 11-க்குடைய குருவும் பார்த்துக்கொள்வதே ஒரு சிறப்புதான். 2-ல் புதனும் ஆட்சி; சூரியனும் நட்பு. ஆகவே குடும்பம், பொருளாதாரம், வாக்கு, நாணயம் ஆகியவற்றிலும் நற்பலன்களே உண்டாகும். 7, 12-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் நிற்பதாலும் அவரைச் சனி பார்ப்பதாலும் (சனி- செவ்வாய் பரஸ்பர பார்வை) சிலருக்கு ஆரோக்கியக் குறைவினால் செலவு, சிலருக்கு மனைவி வகையில் செலவு, சிலருக்கு உடன்பிறந்தோர் வகையில் செலவும் விரயமும் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் அவை சுபவிரயம் ஆகும். தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் வீண்விரயம் அல்லது வெட்டிச் செலவாக ஏமாற்றம் தரும். அல்லது இழப்பாக அமையும். ரிஷப ராசிக்குச் சனி என்ன தான் ராஜயோகாதிபதியாக இருந்தாலும் அவர் 4-ல் அர்த்தாஷ்டமச் சனியாக பகை வீட்டில் இருப்பதால், உடல் நலத்தையும் செயல் தன்மையையும் தொழில், உத்தியோகத்தையும் கெடுக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. இருந்தாலும் இல்லாதவன் சாப்பிடாமல் இருந்தால் பட்டினி; இருப்பவன் சாப்பிடாமல் இருந்தால் விரதம் என்ற அடிப்படையில் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் தன் வீட்டில் ஆட்சியாக இருக்கிறார். அவரோடு 3-க்குடைய சூரியன் சேர்க்கையாக இருக்கிறார். மிதுன ராசிக்கு, 7, 10-க்குடைய குரு 9-ல் நின்று தர்மகர்மாதிபதி யோகம் பெற்றும் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் குரு, சனி நேர் பார்வையும் தர்மகர்மாதிபதி யோகத்திற்கு வலுவூட்டுகிறது. பேச்சில் இனிமை, குடும்பத்தில் குதூகலம், பொருளாதாரத்தில் சரளமான நிலைமை, வியாபாரத்தில் வளர்ச்சி, மனைவி, மக்கள் வகையில் மகிழ்ச்சி, புதுமுயற்சிகளில் வெற்றி ஆகிய எல்லா நன்மைகளையும் தடையில்லாமல் அனுபவிக்கலாம். அதேசமயம் 5-க்குடைய சுக்கிரனும் 6-க்குடைய செவ்வாயும் 12-ல் மறைவதால் மனதில் ஒரு நிறைவு மட்டும் ஏற்படாது. உப்புக் குறைந்தாலும் கூடினாலும் உணவு திருப்தியளிக்காதது போல ஏதோ ஒரு குறை தென்படும். அதுதான் 2-ல் நிற்கும் கேதுவும் 8-ல் நிற்கும் ராகுவும் செய்யும் பலன். 3-ஆம் இடத்து சனி தைரியத்தையும் நண்பர்களின் உதவியையும் சகோதரர்களின் சகாயத்தையும் எதிர்பார்த்தபடி கொடுப்பதால், எல்லாப் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் ''டேக் இட் ஈஸ\rquote ''யாக எடுத்துக் கொள்வீர்கள். வாரக்கடைசியில் புதன் வியாழன் சாரத்திற்கு மாறும்போது மனைவி- மக்கள் ஆதரவு, உதவி உங்கள் கவலையைப் போக்கி மகிழ்ச்சியைத் தரும்.
கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
செப்டம்பர் 26-ல் சனிப் பெயர்ச்சி வருகிறது. அது முதல் கடந்த ஏழரை வருடங்களாக உங்களை வாட்டி வதைத்த ஏழரைச்சனி முழுமையாக விலகிவிடும். அதன்பிறகு உங்கள் வாழ்க்கையில் புயல் ஓய்ந்து அமைதியும் ஆனந்தமும் நிரந்தரமாகும். அதற்குரிய அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பிக்கும். இந்த ஏழரைச்சனி எல்லாரையும் கஷ்டப்படுத்தவில்லை. ஒரு சிலருக்கு வாழ்வும் வசந்தமும் ஏற்படுத்திக் கொடுத்தது. ஒரு சிலருக்கு பதவியும் செல்வாக்கும் கொடுத்தது. ஒரு சிலருக்கு தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி, லட்சக்கணக்கான பணச் சேமிப்பு, லாபத்தையும் கொடுத்தது. அது அவரவருடைய லக்னத்தையும் தசாபுக்திகளையும் ஜாதக அமைப்பையும் பொறுத்தது. சிலருக்குத் திருமணம், மக்கட்பேறு, இடப்பெயர்ச்சி ஆகியவற்றையும் கொடுத்து, பொருளாதாரத்தில் நிறைவை ஏற்படுத்தாமல் ஏமாற்றியது. சிலருக்கு சொத்து, சுகம், காசு, பணம் ஆகியவற்றைக் கொடுத்து உயிர்க்குயிரான உற்ற நண்பர்களை பகைமையாக்கிப் பிரித்தது. ரத்தபந்த சொந்தங்களையும் இழக்க வைத்தது. இவையெல்லாம் கடந்த கால அனுபவங்களாக இருந்தாலும், இனி எதிர்காலம்- வருங்காலம் கஷ்டப்பட்டவர்களுக்கு ஆறுதலைத் தந்து தேறுதலையும் இனிய மாறுதலையும் தரும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிக்கு ஜென்மச்சனி சில ஏமாற்றங்களையும் தோல்விகளையும் இழப்புகளையும் நஷ்டங்களையும் தந்த போதிலும், குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதோடு செவ்வாயும் ரிஷப ராசியில் நின்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். அத்துடன் ராசிநாதன் சூரியன் 11-ல் பலம் பெறுகிறார். அந்த வீட்டுக்குடைய புதனும் ஆட்சியாக இருக்கிறார். ஆகவே தோல்வி என்பது வெற்றிக்கு அமைக்கும் படிக்கட்டாக நினைத்து புத்துணர்வு பெற்று செயல்படுவீர்கள். புலி பதுங்குவது பாய்வதற்காக என்பது மாதிரி, தோல்விகள் ஏற்பட்ட இடைக்காலத்தில், எதிர்வரும் காலத்தில் எப்படி வெற்றி பெறுவது என்று சிந்தித்து திட்டங்கள் வகுப்பீர்கள். தீவிர மந்திர ஆலோசனை செய்வீர்கள். ஜென்மச்சனியும் 10-ல் உள்ள செவ்வாயும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால் பதவி, தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் பலவிதமான சங்கடங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்க நேர்ந்தாலும், சிம்ம ராசியையும் சிம்ம ராசிநாதன் சூரியனையும் குரு பார்க்கிறார். சூரியனும் புதனும் 11-ஆம் இடம் ஜெய ஸ்தானத்தில் இருப்பதால் சிலந்திப் பூச்சி வலை பின்னும் போது கீழே விழுவது அல்லது இறங்கி மீண்டும் மீண்டும் விடாமுயற்சியோடு வலை பின்னி உட்காருவதுபோல் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்; சாதித்துக் காட்டுவீர்கள்.
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிக்கு அதிபதி புதன் 10-ல் ஆட்சியாக இருக்கிறார். அவரை 4, 7-க்குடைய குரு பார்க்கிறார். குரு பார்க்கக் கோடி நன்மை. 7-ஆம் இடம் என்பது 10-ஆம் இடத்துக்கு 10-ஆம் இடம். அதாவது தொழிலுக்குத் தொழில் இடம். எனவே தொழில், வாழ்க்கை, மனைவி (கணவன்) சுகம், பூமி, வீடு, வாகனம், கல்வி, திறமை, செயல்பாடு ஆகிய எல்லாமே சிறப்பாக அமையும். ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதால் செப்டம்பர் வரை விரயச் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். ஆறுக்குடைய சனியும் 8-க்குடைய செவ்வாயும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால் அந்த விரயமும் செலவும் பழைய தவணைக்கடன், வட்டிவாசி வகையிலும் ஏற்படலாம். அது உங்களுக்கு கவலையைத் தரலாம். ஆனாலும் 10-ல் சூரியன், புதன் நிற்பதால் தொழில் தொய்வில்லாமல் செயல்பட்டுக் கைகொடுக்கும். அதனால் பணப்புழக்கமும் தாராளமாக இருக்கும். அதுவும் உங்களுக்கு மன தைரியத்தையும் எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கையையும் தரும். கடனை அடைப்பதும் வட்டியைக் கட்டுவதும் விரயம்தான். என்றாலும் சுமை குறைகிறது என்பதால் சுபவிரயம் எனக் கருதலாம்.
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந்தாலும் ஆட்சி என்பதால் செயல்பாடு, செல்வாக்கு, கௌரவம், கீர்த்தி ஆகியவற்றுக்கு குறைவு ஏற்படாது. ராசிநாதன் 8-ல் மறைவதன் பலன் ஒரு முறைக்குப் பல முறை முயற்சிகளைச் செய்து ஒவ்வொரு காரியத்தையும் நிறைவேற்ற வேண்டும். வேகமாகப் போகும் வண்டியின் வேகத்தைக் குறைக்க ரோட்டில் ஸ்பீடு பிரேக்கர் அமைத்திருப்பது போல உங்கள் காரியங்களில்- செயல்களில் வேகத்தடை காணப்படும். ஜென்ம ராசியை 5-ல் நிற்கும் குருவும் 11-ல் நிற்கும் சனியும் பார்ப்பதால் எண்ணியது ஈடேறும். நினைத்தது நிறைவேறும். 2, 7-க்குடைய செவ்வாயும் 8-ல் மறைவதாலும் ராசிநாதன் சுக்கிரனோடு சேர்வதாலும் சில காரியங்களில் குடும்பத்தாரே தடையாகவும் எதிர்ப்பாகவும் ஒத்துழைக்க மறுக்கலாம். ஆனாலும் 9-ல் சூரியனும் புதனும் நிற்க, அவர்களையும் குரு பார்ப்பதால் அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் மனம் ஆணையிடும் வழியிலேயே செயல்பட்டு சாதித்துக் காட்டலாம். 10-ல் கேதுவும் 4-ல் ராகுவும் நிற்பதால், தொழில் வகையிலும் வேலை அல்லது உத்தியோகத்திலும் சங்கடங்களைச் சந்தித்து சமாளிக்க வேண்டும். சிலருக்கு தேக சுகத்தில் பாதிப்பும் சிலருக்கு கூட இருப்பவர்களின் பொறாமையும் குறுக்கீடாக அமைந்தாலும் அவற்றையும் போராடி ஜெயித்துவிடலாம்.
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் ஆட்சியாக அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். எனவே உங்கள் பெருமை, செல்வாக்கு, திறமை, செயல்பாடு ஆகியவற்றுக்கு குறையேதுமில்லை. என்றாலும் 7-ல் உள்ள செவ்வாயும் 10-ல் உள்ள சனியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால் தடை, தாமதம், குறுக்கீடுகளைச் சந்திக்க வேண்டும். 10-க்குடையவர் சூரியன் 8-ல் மறைவதோடு 8-ல் ஆட்சி பெற்ற புதனும் சேர்வதால், வெற்றி பெறுவோமா தோல்வியைச் சந்திப்போமா என்ற கவலையும் சந்தேகமும் ஏற்படும். அவர்களை குரு பார்ப்பதால் தொழில், சம்பாத்தியம் உங்களுக்கு கைகொடுக்கிறதோ காப்பாற்றுகிறதோ இல்லையோ- தொழிலைக் கட்டிக் காத்துக் காப்பாற்றுவீர்கள். சொந்தத் தொழில் நடத்துகிறவர்கள் தொழிலைக் காட்டிக் காட்டி கடனை வாங்கி வாங்கி சொந்தத் தேவைகளைப் பூர்த்தி பண்ணிக் கொண்டே வருவார்கள். சிலர் ஒருவரிடம் கடன் வாங்கி, இன்னொருவரிடம் அடைத்து அவருக்கு 3-ஆவது நபரிடம் வாங்கித் திருப்பிக் கொடுத்து நாணயத்தைக் காப்பாற்றி ரொட்டேஷன் செய்வார்கள். அதாவது கடையை இழுத்து மூடிவிடாமலும் வேறொருவருக்கு மாற்றி விடாமலும் எதிர்கால நம்பிக்கையோடு நாளும் பொழுதும் ஓடுகிறது- ஒரு நம்பிக்கையால்!
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 3-ல் இருந்தாலும் அந்த வீட்டுக்குடைய சனி பார்ப்பதால் தைரியம், எதிர்கால நம்பிக்கை ஆகியவற்றுக்கு குறைவில்லை. மேலும் குரு 9-ஆம் இடத்தையும் 9-க்குடைய சூரியனையும் பார்ப்பதாலும் 5-க்குடைய செவ்வாயின் சாரம் பெறுவதாலும் இந்த நேரம் வரை தெய்வமும் பிரார்த்தனையும் வழிபாடும்தான் உங்களை வழிநடத்தி வருகிறது. ''என் செயலால் ஆவதொன்றுமில்லை; இனித் தெய்வமே யாவும் உன் செயலேயென்று உணரப் பெற்றேன்'' என்று பட்டினத்தார் பாடியபடி தெய்வ நம்பிக்கைதான் உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. உற்றாரும் உறவினரும் மற்றும் நண்பர்களும், போற்றுமளவுக்கு உங்கள் காரியங்களைச் செயல்படுத்தி வருகிறீர்கள். அடுத்து 10-ஆம் இடத்திற்கு சனி வந்தால்- 10-ஆம் இடத்து சனி பதியைக் குலைக்கும் என்று சொல்லுவார்களே- என்னவாகும் ஏதுவாகும் எப்படி இருக்கும் என்ற சந்தேகமும் கவலையும் தோன்றினாலும், இதுவரை காப்பாற்றிய தெய்வம் இனி கைவிட்டுவிடுமா; தொடர்ந்து காப்பாற்றத் தான் செய்யும் என்ற நம்பிக்கையும் உதயமாகும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு ராகு- கேது பெயர்ச்சியும் உங்கள் நம்பிக்கையை வீணடிக்காமல் தெம்பூட்டி வழிநடத்திச் செல்லும்.
மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு 8-ல் இருக்கும் சனி சோதனைகளையும் வேதனைகளையும் தந்தாலும், அவரை குரு பார்ப்பதால் புயலுக்குப் பின் அமைதி; இருளுக்குப் பின் ஒளி; இரவுக்கு பின் பகல்; துன்பத்திற்குப் பிறகு இன்பம் என்ற அடிப்படையில் கெடுதலுக்குப் பின் நல்லதாக அமையும். மகர ராசிக்கு 5-ல் சுக்கிரனோடு சேர்ந்த செவ்வாய் சனியைப் பார்க்க, சனியும் செவ்வாயைப் பார்ப்பதால் சில சமயம் உங்கள் மீதே நம்பிக்கையில்லாமலும் எதிர்காலத்தைப் பற்றிய கற்பனை பயமும் கவலையும் ஏற்படலாம். என்றாலும் 2-ஆம் இடத்துக் குரு அவரை (சனி) பார்ப்பதாலும், சனி ராசிநாதன் என்பதாலும் சனி, செவ்வாயின் பார்வை தோஷம் விலகுகிறது. பொதுவாகவே சனி, செவ்வாய் சேர்ந்தாலும் பார்த்துக் கொண்டாலும் தீமையான பலன்கள் என்பது பொதுவிதி. என்றாலும் செவ்வாயோ சனியோ ராசிநாதனாகவோ லக்னநாதனாகவோ அமைந்துவிட்டால் தோஷம் இல்லை என்பதால் விதிவிலக்கு. அத்துடன் குரு பார்வை அல்லது சம்பந்தம் பெற்றாலும் பாவமன்னிப்பு கிடைத்த மாதிரி. அட்டமத்துச் சனியால் இதுவரை அதிகமாகக் கஷ்டப்பட்டவர்களும் நஷ்டப்பட்டவர்களும் சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாக போகிற போக்கில் எதிர்பாராத நன்மைகளையும் அனுபவிக்கலாம்.
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிக்கு 4-ல் சுக்கிரன் ஆட்சி பெற, அவரோடு செவ்வாயும் சேர்வதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. சுக்கிரன் 9-க்குடையவர். செவ்வாய் 10-க்குடையவர். அவர்கள் ரிஷபத்தில் சேர்ந்து 10-ஆம் இடத்தைப் பார்ப்பதும் சிறப்பு. அத்துடன் 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதும் சிறப்பு. 9-ஆம் இடம் தெய்வ அனுகூல ஸ்தானம். 10-ஆம் இடம் முயற்சி ஸ்தானம். எவ்வளவு முயற்சிகள் இருந்தாலும் அவை வெற்றி பெற தெய்வ அனுகூலமும் தேவை. வெறும் முயற்சி மட்டும் வெற்றியைத் தந்துவிடாது. பாஸ\rquoteட்டிவ்- நெகட்டிவ் இரண்டும் இருந்தால்தான் கரண்ட் சப்ளையாகும். ஜென்மத்தில் உள்ள குரு 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்ப்பதால் எண்ணியது ஈடேறும்; நினைத்தது நிறைவேறும். திருமணத்தடை விலகும்; மக்கள் பேறு பாக்கியம் உண்டாகும். கும்ப ராசிக்கு 9-க்குடைய சுக்கிரனும் 10-க்குடைய செவ்வாயும் சேர்வது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். மேலும் 9-ஆம் இடத்தை ராசிநாதன் சனியும் 2, 11-க்குடைய குருவும் பார்ப்பதால், உங்களுடைய தெய்வ நம்பிக்கையும் வழிபாடும் பிரார்த்தனையும் உங்களை வழிநடத்திச் செல்லும். வெற்றிக்குப் பாதை அமைக்கும். அதேசமயம் சனி விரயாதிபதியுமாவதால் சில செலவுகளும் விரயங்களும் ஏற்படலாம். அப்படி வரும்போது ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பதைக் கடைப்பிடிப்பது நல்லது.
மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிக்கு 12-ல் ராசிநாதன் குரு மறைகிறார். அதிலும் வக்ரமாக இருக்கிறார். அந்த வீட்டுக்குடைய சனியும் அவரைப் பார்க்கிறார். ஆகவே ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் வரவு வந்தாலும் அத்தனையும் செலவும் ஆகிவிடும். குருவி மாதிரி சிறுசேமிப்பு சேர்த்து வைத்தாலும், ஒரே நேரத்தில் பருந்து கொண்டு செல்வதுபோல ஆகும் செலவுகளை நினைத்துப் புலம்புவீர்கள். 5-ஆம் இடத்தில் உள்ள கேதுவும் 6-ஆம் இடத்தில் உள்ள சனியும்- விளையாட்டாக வாங்கிய கடன் மலைபோல வளர்ந்து பயமுறுத்தும். ஒரு சிலரின் பிள்ளைகள் சொத்துப் பிரச்சினையால் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டு மோதிக்கொள்வதால் யாரை வெறுப்பது, யாரை ஆதரிப்பது என்ற தர்மசங்கடமான நிலையும் ஏற்படும். உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி என்பது போல, ஒரு சிலர் மனைவி வகையிலும் மக்கள் வகையிலும் பிரச்சினைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு சிக்கலைத் தீர்க்க முடியாமல் சிரமப்படுவார்கள். 6-க்குடைய சூரியனும் 7-க்குடைய புதனும் சேர்ந்து 4-ஆம் இடத்தில் நிற்பதன் பலன் அதுதான். ஆனாலும் அவரை குரு பார்ப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மாதிரி பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.










