
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் நாட்டிலேயே பொறுப்பு வகிப்போர்களில் இளம் முதல்வர் என்ற பெயரை தட்டி செல்லவிருக்கிறார் அகிலேஷ்சிங் யாதவ். இம்மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி பெருவாரியான 226 தொகுதிகளை கைப்பற்றி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்கிறது.
இந்த கட்சிக்கு தலைவர் பொறுப்பை உடல் நலம் காரணமாக மகனுக்கு கொடுத்து ஒதுங்கியே இருந்தார். தேர்தல் துவங்கியது முதல் முடியும் வரை அகிலேஷ்தான் மாநிலம் முழுவதும் மூலை, முடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார். இவரது கட்சி சின்னமான சைக்கிளில் பல இடங்களில் நடத்திய பேரணியில் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். நேதாஜி என்றழைக்கப்படும் முலாயம்சிங் மகன் என்ற பாசம் மக்கள் மத்தியில் அதிகம் இருந்தது. இதனை விட சுறு, சுறுப்பு, சிரித்த முகம், தொண்டர்களிடம் நெருங்கி பழகுதல், மேடையில் இருந்தபடியே ஏழைகளிடம் பாரபட்சம் இல்லாமல் நலம் விசாரிப்பது என இவரது ஸ்டைல் மக்ககளை வெகுவாகவே கவர்ந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். இதனால் அவருக்கான கவரேஜ்கள் பிரம்மாதமாக அமைந்திருக்கும்.
நடந்து முடிந்த தேர்தலில் ராகுலுக்கும், அகிலேஷுக்கும் இடையே தான் போட்டி பிரசாரமாக மாநிலம் முழுவதும் காணப்பட்டது. அகிலேஷ் உழைப்புக்கு பயனாக தேர்தல் முடிவுகள் சமாஜ்வாடி கட்சிக்கு முழு சாதகமாக அமைந்தது. மாயாவதி கட்சி மண்ணை கவ்வியது.
தேர்தல் முடிவுகள் வந்த நேரத்தில் கூட அனைத்து மீடியாக்களும் முலாயம்சிங்கை விட மகன் அகிலேஷின் பேட்டிக்கே முக்கியத்துவம் அளித்தது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டம் இன்று நடக்கிறது. இதில் சட்டமன்ற தலைவராக அகிலேஷ்சிங் தேர்வு செய்யப்படுவார் என இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. ஆனால் தந்தையும், மகனும், யார் தேர்வு செய்யப்படுவர் என்பதில் சற்று ஓப்பனாக பேசாமல் தந்தை, கட்சி முடிவு செய்யும் என்றும், முலாயம்சிங்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று மகனும் சொல்லி வருகின்றனர். அகிலேஷ் பொறுப்புக்கு வரட்டும், இது தான் சரியான தருணம் என்கின்றனர் இளைய தலைமுறையினர். இளம் எம்.எல்.ஏ.க்களும் இதனைத்தான் எதிர்பார்க்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் இக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மூலம் தெரிந்து விடும். அகிலேஷ் தேர்வு செய்யப்பட்டால் இது வரை இந்த இளம் வயதில்( 38 வயது ) முதல்வர் பொறுப்பை யாரும் ஏற்றதில்லை என்ற பெயரும், இளம் முதல்வர் என்ற பெயரும் இவருக்கு கிடைக்கும்.