23 மே, 2013. வியாழக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 21 மார்ச் 2012

இந்தியச்செய்திகள் : Latest India News

உ.பி.யில் ஆள் இல்லாத லெவல் கிராசிங்கில் ஜீப்-ரயில் மோதல்: 16 பேர் பரிதாப சாவு

லக்னோ, மார்ச். 21-
16 killed in UP level crossing mishap - India News Headlines in Tamil

உத்தரபிரதேசத்தில் ஆள் இல்லாத லெவல் கிராசிங்கை கடந்தபோது, ஜீப் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி நேரிட்ட கோர விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் உடலைப் பெற ஆஸ்பத்திரிக்கு சென்ற உறவினர்களுக்கு இந்த துயரம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், மதுரா-கஸ்கஞ்ச் இடையே மதுரா-கஸ்கஞ்ச் எக்ஸ்பிரஸ் ரெயில் ஓடுகிறது. இந்த ரெயில் நேற்று காலை 7.19 மணிக்கு கஸ்கஞ்ச் நோக்கி போய்க்கொண்டிருந்தபோது, மாய்டு ரெயில் நிலையம் அருகே வந்தது. அந்தப் பகுதியில் ஒரு ஆள் இல்லாத ரெயில்வே லெவல் கிராசிங் உள்ளது.

அந்த லெவல் கிராசிங்கை ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு ஜீப் கடக்க முயன்றது. அப்போது அந்த ஜீப் மீது மதுரா-கஸ்கஞ்ச் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் சுக்கு நூறாக நொறுங்கியது.

ஜீப்பில் பயணம் செய்த 20 பேரில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், உள்ளூர் மக்கள், ரெயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ரெயில் மோதி விபத்துக்குள்ளான ஜீப்பில் பயணம் செய்தவர்கள், சதியா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்தக் கோர விபத்து பற்றி போலீஸ் சூப்பிரண்டு சந்திரபிரகாஷ் கூறியதாவது:-

சதியா கிராமத்தில் முன்னேகான் (வயது 40) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஹத்ராஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் முன்னேகானின் உடலைப் பெற்றுக்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர், உறவினர் 20 பேர் ஜீப்பில், ஹத்ராஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தபோது, ஆள் இல்லாத லெவல் கிராசிங்கை கடந்தபோதுதான் ரெயில் மோதி இந்தக் கோர விபத்து நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரமும் இழப்பீடு வழங்குவதாக, நேற்று ரெயில்வே மந்திரியாக பதவி ஏற்ற முகுல் ராய் அறிவித்துள்ளார்.

இதே போன்று விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.ஒரு லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்குவதாக உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.

நாட்டில் 14 ஆயிரத்து 853 ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகள் உள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டில் ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்று சமீபத்தில் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இந்தக் கோர விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Site Meter