ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோர் ஜூன் 3-ந் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் நேற்று டெல்லி அருகே உள்ள குர்கானில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, அன்னா ஹசாரே கூறியதாவது:-
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டெல்லியில் ஜூன் 3-ந் தேதி நாங்கள் கூட்டாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்போம். ஊழலுக்கு எதிராக வலுவான ஜன லோக்பால் மசோதா குறித்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த பாடுபடுவேன்.
சக்திவாய்ந்த ஜன லோக்பால் மசோதாவை உருவாக்க மத்திய அரசு பயப்படுகிறது. ஏனென்றால், அத்தகைய மசோதா வந்தால், பாதிக்கு மேற்பட்ட மத்திய மந்திரிகள் ஜெயிலுக்கு போய் விடுவார்கள்.
நான் மே 1-ந் தேதியில் இருந்து மராட்டிய மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்வேன். சீரடியில் இந்த பயணத்தை தொடங்குவேன். அம்மாநிலத்தில், லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி பிரசாரம் செய்வேன்.
மாநில முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் இதர கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவேன். அவர்கள் சொல்லும் கருத்துகள் பற்றி பொதுமக்களிடையே எடுத்துச் சொல்வேன்.
எனது ஊழல் எதிர்ப்பு இயக்கம், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை நீடிக்கும். இந்த இயக்கத்தில் அரசியல்வாதிகளை சேர்ப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது:-
டெல்லியில், ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்கப்போகிறோம். இப்போதுள்ள மத்திய அரசு, காமன்வெல்த் போட்டி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் உள்ளிட்ட ஊழல்களில் சிக்கித்தவிக்கிறது. எனவே, இனியும் இந்த அரசு பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை.
ஊழலுக்கு எதிரான இயக்கத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் மற்றும் காந்தியவாதிகள், சமூக ஆர்வலர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.