21 மே, 2013. செவ்வாய்க்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 27 ஏப்ரல் 2012

இந்தியச்செய்திகள் : Latest India News

உலக சாதனை படைத்த டெண்டுல்கருக்கு மேல்-சபை எம்.பி. பதவி

புதுடெல்லி, ஏப். 27-
Sachin set for political innings, becomes RS MP - India News Headlines in Tamil

அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தின்படி, 250 உறுப்பினர்களை கொண்ட டெல்லி மேல்-சபைக்கு 12 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்க முடியும்.

கலை, இலக்கியம், விஞ்ஞானம், விளையாட்டு, சமூக சேவை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் மேல்-சபைக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கருக்கு மத்திய அரசு தற்போது டெல்லி மேல்-சபை உறுப்பினர் பதவியை வழங்கி கவுரவித்து இருக்கிறது.

39 வயதான டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியவர். கடந்த மாதம் அவர் தனது நூறாவது சதத்தை பூர்த்தி செய்து வரலாற்று சாதனை படைத்தார்.

டெண்டுல்கரை மேல்-சபை எம்.பி.யாக நியமிக்க சிபாரிசு செய்து அதற்கான செய்திக் குறிப்பை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். உள்துறை அமைச்சகம் அதை ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு அனுப்பி வைத்தது.

அதை ஏற்று டெண்டுல்கரை மேல்-சபை எம்.பி.யாக நியமிப்பதற்கு ஜனாதிபதி நேற்று இரவு முறைப்படி ஒப்புதல் அளித்தார்.

டெண்டுல்கருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று சமீபத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசியல் கட்சிகளும், அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க ஆதரவு தெரிவித்தன.

இந்தநிலையில், அவருக்கு டெல்லி மேல்-சபை நியமன உறுப்பினர் பதவியை மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

முன்னதாக, டெண்டுல்கர் நேற்று காலை தனது மனைவி அஞ்சலியுடன் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது, கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்த்தி வரும் சாதனைகளுக்காக டெண்டுல்கருக்கு சோனியா காந்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை வைஜயந்திமாலா, பிரபல இந்தி நடிகைகள் ஹேமமாலினி, நர்கீஸ் தத், பிரபல இந்தி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், வங்காள மொழி இயக்குனர் மிருணாள் சென் போன்ற கலையுலக பிரமுகர்கள் சிலர் ஏற்கனவே மேல்-சபை உறுப்பினர்களாக பதவி வகித்து உள்ளனர். பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தற்போது மேல்-சபை உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆனால் விளையாட்டு துறையில் தீவிரமாக இருக்கும் ஒருவர் மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவை ஆகும். அந்த பெருமை டெண்டுல்கருக்கு கிடைத்து உள்ளது.

டெண்டுல்கர் டெல்லி மேல்-சபை எம்.பி.யாக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி மகிழ்ச்சி தெரிவித்தார். டெண்டுல்கர் மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டது விளையாட்டு துறைக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்று அவர் கூறினார்.

இதேபோல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் வரவேற்பு தெரிவித்து உள்ளது. விளையாட்டு துறைக்கு டெண்டுல்கர் ஆற்றியுள்ள சேவை அங்கீகரிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும், அவர் மேல்-சபை உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறினார்.

பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்; டெண்டுல்கர் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது குறித்து பெருமை கொள்வதாகவும், மேல்-சபை உறுப்பினராகவும் அவர் திறம்பட செயல்படுவார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

பிரபல இந்தி நடிகை ரேகா, தொழில் அதிபர் அனு ஆகா ஆகியோரின் பெயர்களும் மேல்-சபை எம்.பி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நடிகை ரேகா 1980-களில் இந்திப்பட உலகில் கொடிகட்டி பறந்தவர். 57 வயதான இவர் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

70 வயதான தொழில் அதிபர் அனு ஆகா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சிலில் உறுப்பினராக இருக்கிறார். மேலும் இவர் சமூக சேவகரும் ஆவார்.


Site Meter