
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தற்போது பரீட்சை முடிந்து கோடை கால விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே மாணவர்கள் உடனே விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று துணை வேந்தர் ஏ.கே.சிங் உத்தரவிட்டார்.
துணைவேந்தரின் உத்தரவை ஏற்க மறுத்து சுமார் ஆயிரம் மாணவர்கள் அவரது அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். பிறகு அந்த அலுவலகத்தை சுற்றி முற்றுகையிட்டு அமர்ந்தனர்.
இதையடுத்து நேற்று மாலை போலீசார் பல்கலைக்கழகத்துக்குள் சென்று மாணவர்களுடன் பேச்சு நடத்தினர். அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
ஆத்திரமடைந்த மாணவர்கள் போலீசார் மீது சரமாரியாக கல்வீசினார்கள். பல்கலைக் கழகத்துக்குள் கலவரம் வெடித்தது. கட்டிடங்கள், வாகனங்களுக்கு மாணவர்கள் தீ வைத்தனர். போலீசாரின் 6 வாகனங்கள் எரிக்கப்பட்டன. பல்கலைக்கழகத்தை சுற்றி இருந்த கடைகளும் சூறையாடப்பட்டன. சுமார் 3 மணி நேரம் இந்த கலவரம் நீடித்தது.
கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்ட பிறகே கலவரம் ஒடுக்கப்பட்டு கட்டுக்குள் வந்தது. என்றாலும் பல்கலைக்கழக பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இந்த கலவரம் காரணமாக அலகாபாத் பல்கலைக் கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.