ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு விதித்த புதிய நிபந்தனைகளை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை, ஜூலை. 30-
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு விதித்த புதிய நிபந்தனைகளை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கென்று புதிய விதிமுறைகளை வகுத்து அவற்றை சுற்றறிக்கையாக போக்குவரத்து கமிசனர் வெளியிட்டார். இந்த பள்ளி ஆயிரம் சதுரஅடி அளவு கொண்டதாக இருக்க வேண்டும்; ரூ.3.50 லட்சம் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்திருக்க வேண்டும்; டிரைவிங் சொல்லித் தரும்போது பொது சாலைகளை பயன்படுத்தக் கூடாது போன்ற பல நிபந்தனைகள் அதில் கூறப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய வாகன ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். எனவே அந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அந்த சங்கம் மேல்முறையீடு செய்தது. இந்த நிபந்தனைகளை கடைபிடிக்க முயன்றால் பள்ளிகளை மூடத்தான் வேண்டும். இவ்வளவு அளவு கொண்ட கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தால் அதிக செலவு ஏற்படும் என்று அதில் கூறி இருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.பானுமதி, பி.ராஜேந்திரன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
புதிய விதிமுறைகளை விதிப்பதற்கு போக்குவரத்து கமிசனருக்கு அதிகாரம் உள்ளது. வாகன ஓட்டிகளின் திறனை அதிகரிக்கும் விதத்திலும், வாகன பெருக்கம் ஏற்படும் இந்த சூழ்நிலையில் விபத்துகளை குறைக்கும் நோக்கத்திலும்தான் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. சாலை பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் பொதுமக்களின் நலன் உள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளும்போது தனிநபர்களின் நலனை கருத்தில் கொள்ளத் தேவையில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற மனுதாரர் தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களுக்கு 31.12.10 வரை காலஅவகாசம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Join KOODAL!Become a member of koodal tamil community. New Registrations Click Here. Join Tamil Koodal & get your web in Tamil. |
|
|








