கூடுமானவரை என்கவுன்டரை தவிர்க்குமாறு போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டினார். அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசியதாவது:-
எதிர்க்கட்சித் துணைத் தலைவர், சாலை விபத்துகள் பற்றிய சில விவரங்களை இங்கே தெரிவித்தார். உண்மை நிலவரத்தை, உண்மையான புள்ளி விவரங்களை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சத்து 19 ஆயிரத்து 713 ஆக இருந்தது.
ஆனால் 2011-ல் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 48 லட்சத்து 61 ஆயிரத்து 695 ஆக உள்ளது. ஆக, வாகனங்களின் எண்ணிக்கை கூடி இருக்கிறது. அதே சமயத்தில், 2010-ல் விபத்துக்களின் எண்ணிக்கை 64,996; ஆனால், 2011-ல் 65,873. அப்படி பார்க்கின்றபோது இறந்தவர்களின் எண்ணிக்கை 2010-ல் சதவீதப்படி 0.11 சதவீதம்; ஆனால், 2011-ல் இறந்தவர்களின் எண்ணிக்கை 0.10 சதவீதம். அதாவது, வாகனங்களின் எண்ணிக்கை கூடி இருக்கிறது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுதான் உண்மையான புள்ளிவிவரம்.
மேலும், என்கவுன்டர் மரணங்களைப் பற்றி சில விவரங்களை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காவல்துறையினர் பல கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்துவரும் கொடும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கைது செய்ய முற்படும்போது, அவர்கள் காவல் துறையினரைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயலுகின்றனர்.
கொடும் குற்றவாளிகள் தலைமறைவாக இருந்து கொண்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களின் உயிர், உடைமைகளின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன் காவல் துறையினர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிடாமல் குறைந்தபட்ச பலத்தை உபயோகித்து கைது செய்கின்றனர்.
சில சமயங்களில் குற்றவாளிகள் காவல் துறையினரின் உயிருக்கு ஆபத்து விளைக்கும் வகையில் கொடிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு, தப்பிச் செல்ல முயற்சி செய்யும்போது காவல் துறையினர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட நேரிடுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, 2006 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நடந்த 6 மோதல்களில் 6 குற்றவாளிகளும், 2007 ஆம் ஆண்டு நடந்த 3 மோதல்களில் 4 குற்றவாளிகளும், 2008 ஆம் ஆண்டு நடந்த 6 மோதல்களில் 7 குற்றவாளிகளும், 2009 ஆம் ஆண்டு நடந்த 4 மோதல்களில் 4 குற்றவாளிகளும், 2010 ஆம் ஆண்டு நடந்த 6 மோதல்களில் 8 குற்றவாளிகளும் இறந்துள்ளனர்.
தற்காப்பு உரிமையைப் பற்றி விளக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 96ல் தற்காப்பிற்காக செய்யப்படும் எந்தச் செயலும் குற்றமாகாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பிரிவு 97ல் ஒரு நபருக்கு தன்னுடைய உயிரையும், மற்ற எவரின் உயிரையும் காப்பாற்றுவதற்கு தற்காப்பு உரிமை உள்ளது என்றும் விளக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நபர் தாக்கும்போது அவர் தாக்குவதினால் மரணம் நிகழக்கூடும் என்ற நியாயமான அச்சம் ஏற்பட்டால் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு தாக்கும் நபருக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்குக்கூட தற்காப்பு உரிமையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 100ல் வரையறை செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினர் கொடிய குற்றவாளிகளைக் கைது செய்யும் சூழ்நிலை அவ்வப்போது எழுவதால் அச்சமயங்களில் இக்குற்றவாளிகள் காவல் துறையினரைத் தாக்கி அவர்களது உயிருக்கோ, அருகிலுள்ள மற்றவரின் உயிருக்கோ ஆபத்து விளைவிக்கும் சூழ்நிலையில், காவல் துறையினர் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்த நேரிடுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், சில தருணங்களில், துப்பாக்கிப் பிரயோகம்கூட செய்ய வேண்டியது ஏற்பட்டுவிடுகிறது. இருப்பினும் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது, கூடுமானவரையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதைத் தவிர்த்து, குறைந்தபட்ச பலத்தை உபயோகித்து எதிரிகளைக் கைது செய்ய தேவையான அறிவுரைகளை அரசு காவல் துறையினருக்கு வழங்கி உள்ளது.
ஒரு குற்றவாளிக்கு தண்டனை அளிக்க வேண்டியது நீதிமன்றமே. அந்த அதிகாரத்தை காவல் துறையினர் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, எதிரிகளைப் பிடித்து வைத்து சுட்டுக்கொல்வது என்பது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சட்டங்களுக்கு உட்பட்டு தற்காப்பு உரிமையை மட்டுமே பயன்படுத்தலாம்.
இவ்வாறான தருணங்களில்கூட குற்றவியல் முறைச் சட்டம் பிரிவு 176-ன்கீழ் தற்பொழுது நீதிமன்ற நடுவர் விசாரணை மேற்கொள்கிறார். மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிவுரைக்கேற்ப தனி மருத்துவர் இல்லாமல் மருத்துவர் குழுவை வைத்து பிரேதப் பரிசோதனை செய்வது, பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்தல், மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை அளித்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.