
'கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் வேலை செய்தால் வெற்றி உறுதி' என்று 'ரிசாட்-1' செயற்கைகோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய தமிழக பெண் விஞ்ஞானி என்.வளர்மதி கூறினார்.
பி.எஸ்.எல்.வி. சி-19 ராக்கெட் 'ரிசாட்-1' என்ற அதிநவீன செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை தொடர்ந்து, அந்த செயற்கைகோளின் திட்ட இயக்குனராக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி என்.வளர்மதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் அரியலூரில் பிறந்தேன். அங்குள்ள நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் எனது பள்ளி படிப்பை முடித்தேன். பின்னர், கோவை என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்தேன். அதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. படித்தேன்.
பின்னர், இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர்ந்தேன். முதலில், திட்ட மேலாளராக இருந்தேன். அதன்பின்னர், துணை திட்ட இயக்குனராக இருந்து, தற்போது திட்ட இயக்குனராக உயர்ந்துள்ளேன்.
இன்றைய நாளில் 'ரிசாட்-1' செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை இல்லாத வகையில் புதிய தொழில் னட்பத்தில் இந்த செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அனுப்பப்பட்ட செயற்கைகோள்கள் சூரிய வெளிச்சத்திலும், மேக மூட்டம் இல்லாதபோதுதான் தெளிவான படங்களை எடுத்து அனுப்பும். ஆனால், ரிசாட்-1 செயற்கைகோள் 24 மணி நேரமும் பகல்-இரவு காலத்தில் அனைத்து சீதோஷ்ண நிலையிலும் துல்லியமாக படங்களை எடுத்து அனுப்பும்.
மேலும், விவசாயிகளுக்கு உதவும் வகையில், மண்ணின் தரம், பயிர் பாதுகாப்பு குறித்த தகவல்களை முன்கூட்டியே அறிய உதவும். நிலநடுக்கம், பூகம்பம் போன்ற சமயங்களில் நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள உதவும்.
இன்றைய நிலையில் ஆணுக்கு பெண் சமமானவர்கள்தான். ஒவ்வொருவருக்கும் திறமை உள்ளது. கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் வேலை செய்தால் வெற்றி உறுதியாக கிடைக்கும். எனக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு வீட்டில் உள்ளவர்களும், உடன் பணியாற்றுபவர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இவ்வாறு விஞ்ஞானி என்.வளர்மதி கூறினார்.