22 மே, 2013. புதன்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 16 ஏப்ரல் 2012

உலகச்செய்திகள் : Latest World News

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டூழியம்: ஜெயிலை குண்டுவீசி தகர்த்து 400 கைதிகள் விடுவிப்பு

இஸ்லாமாபாத், ஏப். 16-
Militants attack Pakistan jail, free nearly 400: police - World News Headlines in Tamil

பாகிஸ்தானில் உள்ள சிறைச்சாலை மீது தலீபான் தீவிரவாதிகள் குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தி 400 கைதிகளை விடுவித்தனர். முன்னாள் அதிபர் முஷரப்பை கொல்ல முயன்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்த முக்கிய புள்ளியும் தப்பி ஓடி விட்டார்.

பாகிஸ்தானின் வடமேற்கே ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி பான்னூ நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு தீவிரவாதிகள் உள்ளிட்ட 944 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் தலீபான் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கில் கார் மற்றும் வேன்களில் வந்து இந்த சிறைச்சாலை முன்பு குவிந்தனர். பின்னர் திடீரென்று அவர்கள் ஜெயில் நுழைவு வாயில் மீது ராக்கெட் குண்டுகளையும், கையெறி குண்டுகளையும் வீசி தாக்கி கதவுகளை தகர்த்தனர்.

உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதிகளை தடுக்க முயன்றனர். தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளையும் வெடிக்கச்செய்தனர். இரு தரப்பினர் இடையே சுமார் 1 மணி நேரம் சண்டை நீடித்தது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

என்றாலும் தீவிரவாதிகளை தடுக்க முடியவில்லை. ஜெயிலின் உள்ளே புகுந்த தீவிரவாதிகள் பூட்டுகளை உடைத்து அங்கிருந்த தங்களுடைய இயக்கத்தை சேர்ந்த கைதிகளை விடுவித்தனர்.

இந்த தாக்குதல் நடந்தது இரவு நேரம் என்பதால் இருட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மற்ற கைதிகளும் கூட்டத்தோடு கூட்டமாக தப்பி ஓடினர்.

மொத்தம் சுமார் 400 கைதிகள் தப்பி ஓட்டம் பிடித்தனர். அருகில் இருக்கும் மலைப்பகுதிக்கு தீவிரவாதிகளும், கைதிகளும் சென்று இருக்கலாம் என கருத்தப்படுகிறது.

சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய பயங்கர குற்றவாளியான அட்னான் ரஷீத் என்பவனும் தப்பி விட்டான். இவன் முன்னாள் அதிபர் முஷரப்பை கொல்ல முயன்ற வழக்கில் கைதானவன்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், "ஜெயிலில் உள்ள 6 பிளாக்குகளில் தீவிரவாதிகள் புகுந்து அங்கிருந்த கைதிகளை விடுவித்தனர். 384 கைதிகள் தப்பி ஓடி இருக்கலாம். இதில் முஷரப் கொலை சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அட்னான் ரஷீத் ஒருவன். தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளோம். சில கைதிகளை மடக்கி பிடித்து விட்டோம்" என்று தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு போலீசாரும், ராணுவத்தினரும் விரைந்து சென்று முற்றுகையிட்டுள்ளனர். தப்பி ஓடிய கைதிகளை தேடுகிறார்கள்.

பாதுகாப்பு குளறுபடியே இந்த ஜெயில் தகர்ப்புக்கு காரணம் ஆகும். தலீபான்கள் மற்றும் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பினர் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். சிறைச்சாலைகளை உடைத்து கைதிகளையும் விடுவிப்பதில் ஈடுபடுகிறார்கள். தற்போது ஒரே நாளில் 400 கைதிகள் தப்பி ஓடி இருப்பது பாகிஸ்தான் அதிகாரிகளை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


Site Meter