24 மே, 2013. வெள்ளிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 27 ஏப்ரல் 2012

உலகச்செய்திகள் : Latest World News

கோர்ட் அவமதிப்பு வழக்கில் கிலானிக்கு அடையாள தண்டனை: பதவி விலக தேவையில்லை

இஸ்லாமாபாத், ஏப். 27-
No need for Gilani to quit, says Pak Cabinet - World News Headlines in Tamil

கோர்ட் அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு அடையாள தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், அவர் பதவி விலகத் தேவையில்லை என்று மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, கடந்த 1990-களில் ஏராளமான ஊழல் வழக்குகளில் சிக்கினார். அவற்றில், சுவிட்சர்லாந்தில் தொடரப்பட்ட சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கும் ஒன்றாகும்.

ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு முஷரப் அதிபராக இருந்தபோது கொண்டு வந்த சட்டத்தால், ஆயிரக்கணக்கான ஊழல் வழக்குகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது. இதன்படி, சர்தாரி மீதான ஊழல் வழக்குகளும் கைவிடப்பட்டன.

ஆனால், முஷரப் கொண்டு வந்த இச்சட்டம் செல்லாது என்று கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்துமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்த பிரதமர் யூசுப் ராசா கிலானி முன்வரவில்லை. கோர்ட் கூறியபடி, சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை மீண்டும் நடத்தும்படி, சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதமும் எழுதவில்லை.

இதனால், கிலானி மீது சுப்ரீம் கோர்ட், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதை நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கு விசாரணைக்காக, இரண்டு தடவை சுப்ரீம் கோர்ட்டில் கிலானி ஆஜரானார். அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி, அவர் தாக்கல் செய்த மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் 26-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, கோர்ட்டில் ஆஜராவதற்காக, பிரதமர் கிலானி தன் வீட்டில் இருந்து காரில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தார். கோர்ட் வாசலில் அவரை வரவேற்க மந்திரிகளும், ஆதரவாளர்களும் திரண்டு இருந்தனர். தன் மகன் அப்துல் காதீர் கிலானி மற்றும் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக்குடன் கோர்ட் கட்டிடத்தை நோக்கி கிலானி நடந்தார். அப்போது, அவர் மீது ரோஜா இதழ்களை ஆதரவாளர்கள் தூவினர். கோர்ட்டுக்குள் நுழைவதற்கு முன்பு, ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார்.

கிலானி ஆஜரானதையொட்டி, அப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் கண்காணிப்பு பணி நடந்தது.

7 நீதிபதிகளும் கோர்ட்டுக்குள் நுழைந்தவுடன், கோர்ட்டு அறையின் மத்தியில் உள்ள கூண்டுக்கு கிலானி சென்றார். சிறப்பு பெஞ்சின் தலைவர் நீதிபதி நசிருல் முல்க், தீர்ப்பை வாசித்தார். சுப்ரீம் கோர்ட் உத்தரவை வேண்டுமென்றே மீறியதற்காக, பிரதமர் கிலானி மீதான கோர்ட் அவமதிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். எனவே, கோர்ட் கலையும்வரை அவர் நிற்க வேண்டும் என்று அடையாள தண்டனை விதித்தார்.

தீர்ப்பை அறிவித்தவுடன், நீதிபதிகள் 7 பேரும் கோர்ட் அறையை விட்டு வெளியேறினர். அத்துடன், கிலானி மீதான தண்டனையும் முடிவடைந்தது. தண்டனை அறிவிப்புக்கு பிறகு அவர் 30 வினாடிகள் மட்டுமே நின்றதால், அதுதான் அவர் அனுபவித்த தண்டனை ஆகும். கோர்ட் நடவடிக்கைகள் அனைத்தும் 10 நிமிடத்துக்குள் முடிந்து விட்டன.

கோர்ட்டை விட்டு வெளியே வந்த பிரதமர் கிலானி, 'நாங்கள் நீதி கேட்டோம். ஆனால் இந்த முடிவு முறையானதாக இல்லை' என்று கூறினார். இந்த தீர்ப்பு, அரசியல் சட்ட விரோதமானது என்று அட்டர்னி ஜெனரல் இர்பான் காதிர் தெரிவித்தார். இந்த தீர்ப்பை கண்டித்து, ஆளும் கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

தண்டிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிப்பது தொடர்பாக, அரசியல் சட்டத்தின் 63(1ஜி) சட்டப்பிரிவு கூறுகிறது. இதை சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்ட போதிலும், இந்த பிரிவை பிரயோகப்படுத்தவில்லை. இதுபற்றி நீதிபதி தனது உத்தரவில், 'கோர்ட்டு அவமதிப்பு குற்ற நிரூபணம், அரசியல் சட்டத்தின் 63(1ஜி) பிரிவின்படி, கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்' என்று கூறியுள்ளார்.

எனவே, பிரதமர் கிலானியின் பதவியை பறிப்பதற்கான நடவடிக்கையை தொடங்குவதற்கு இந்த கருத்து, பாதை அமைத்துக் கொடுத்திருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பதவி பறிப்பு நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பதற்கு பாராளுமன்ற சபாநாயகருக்கு 30 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அப்படி சபாநாயகர் முடிவு எடுத்தால், அதையொட்டி முடிவு எடுப்பதற்கு தேர்தல் கமிஷனுக்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. எனவே, இன்னும் 4 மாதங்களுக்கு கிலானி பதவியில் நீடிப்பதற்கு தடை ஏதும் இல்லை என்று தெரிகிறது.

இதற்கிடையே, தீர்ப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் மந்திரிசபையின் அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் கிலானி, கிரிமினல் வழக்கில் தண்டனை பெறவில்லை என்பதால், அவர் பதவி விலகத் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய பிரதமரும், மந்திரிசபையும் முடிவு செய்திருப்பதாக பிரதமரின் வக்கீல் அய்ட்ராஸ் அசன் தெரிவித்தார். அதே சமயத்தில், கிலானி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் டெரிக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான்கான் ஆகியோர் வற்புறுத்தி உள்ளனர்.


Site Meter