முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

என்று தணியும்?

எம். மரக்காணு

பரிச்சயமாகி விட்டன
என் பெண்மைக்கு ...

மனிதக் குப்பைகளுக்கு நடுவில்
முதுகு தொடும் மூச்சின் உஷ்ணங்கள்

இருக்கை தாண்டி சேலை தாண்டி
நெஞ்சு தடவ நீளும் கைகள்

ஊன் கண்ட நாயாய்
விரட்டித் தொடரும் பார்வைகள்

சாக்கடைத் துளிகளாய் காதுதொடும்
இந்திய முதுகெலும்புகளின் வசனங்கள்

பாலையில் பூ தேடும் முயற்சியாய்த்
தொடரும் என் தேடல்கள்

இமை விலக்கிப் புறப்பட்டுப் பரவும்
என் பார்வைகள் உணரும்
கனிவு தொலைத்த கண்கள்

இவைகளுக்கு நடுவில்
நன்றியோடு நோக்குகிறேன்...

வியர்வை பொங்கிப் பரவும்
என் உடல் பூட்டிய ஆடைகளை

தனிமை சிதைக்கும்
என் சகோதரனின் துணையை

நகை பற்றிய ஆண் பற்றிய
விமர்சனங்களோடு தொடரும் தோழியர்களை

விருப்பமில்லாமல் ஆசைப்படுகிறேன்
இவைகளுக்குள் சிறைபட

அகதிகளுக்கு முகாம் போல்
இந்தச் சிறைகளின் நிழல்கள்
பாதுகாப்பாய் உணரப்படுகின்றன என்னால்

வைகறைத் தென்றல்
அந்திக் கதிரவன்

மழைநேர நனைதல்
தித்திக்கும் தனிமை

அஃறிணைகளுக்கும் எளிதாகிப் போன இவைகளை
அடைய முடியாத் தாபங்கள்...

சமுதாய நியதிகளின்
நோக்கங்களின் மீதான சந்தேகங்கள்

இயல்புக்கு மாறான
மிகவும் நியாயமான
என் உணர்வுகளின் மீறல்கள்

தோரணைச் செடிகளின்
வடிவம் மீறிய வளர்ச்சிபோல்
வெட்டப்படுகின்றன என்னாலேயே

செடிகளுக்கு வலிக்கிறதோ என்னவோ
வலிக்கிறது எனக்கு

புதுக் கவிதை

Site Meter