முதல் பக்கம் » கவிதை » கவிதை தொகுப்பு
கவிதை தொகுப்பு -

Tamil Poem - Tamil Kavithaigal

ஞானமடா நீயெனக்கு (4)

வித்யாசாகர்

அப்பா அப்பா என்றழைக்கும்
அந்த இனிய குரல்!
 
பை நிறைய சுமந்த
உன் -
புத்தகமாகத் தான்
முழுதும்
படிக்கமுடியாமலே
கனக்கிறாய்
எனக்குள்ளும் நீ!
 
படுக்கையில் -
தலையணை, மெத்தை
போர்வைக்குப் பின்னும்
உன் புதிய வருகையால்
ஏற்பட்ட சின்ன இடைவெளியை,
இருவரையும் சேர்த்து நீ
அனைத்துக் கொண்ட
இறுக்கத்தில் -
நீயாகவே; தீர்த்துக் கொண்டாய்!
 
காலையிலெழுந்ததும்
கடவுளை பார்ப்பது
நல்லதென்பதில்
எத்தனை உண்மை உள்ளதோ;
 
உன்னை பார்ப்பதில்
எத்தனை எத்தனை
பரவசமுள்ளதடா...
 
முத்தம் கொடு என்றால்
உதட்டை கன்னத்தை பிடித்துக்
கடிக்கவோ -
எச்சிலொழுக பார்த்து
சிரிக்கவோ மட்டுமே
தெரியுமுனக்கு;
 
அதைத் தாண்டி
முத்தமென்றால் இப்படியென
சொல்லாமலேயே -
வரிசையில் நிற்கிறோம்
நானும் -
உன் அம்மாவும்
உன் எச்சிலில் நனைந்த
அந்த - முத்தத்தின் அன்பிற்காய்!

நீ -
என்பதன் அர்த்தம்
உலகம்
வானம்
பூமி
கடல்
காற்று
தென்றல்
அருவி
மழை
மலர்வனம்
மெல்லிசை
பாடல்
கவிதை
புத்தகம்
வியப்பு 
பலம்
அதிர்ஷ்டம்
நிம்மதி
ஏதுமில்லை -
குழந்தை என்பதொன்று
பெரிது!!
 
பத்து மாதமெனும்
நீண்டதொரு
சுமப்பின் எல்லையில்
நீ வந்தாய்,
 
உன்வருகைக்குப் பின்
ஏதும் -
அத்தனை சுமையில்லை
உன் அழுகையை தவிர!
 
நீ பேசிய
சிரித்த
குறும்பு செய்த
நடக்க ஆரம்பித்த
பல்முளைத்த
என் வெப்பத்தில் உறங்கிய
எதையுமே
பதிவு செய்யவில்லை
நீ காண்பதற்கு;
 
ஆனால் -
நானில்லாத ஒரு
கணப் பொழுதில்
உனக்கு அத்தனையும்
புரிந்துபோகும் -
எனை நீ தேடும் அந்த தேடலில்!

கவிதை தொகுப்பு

Site Meter