முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

காட்டுக் கழுதை

புகழேந்தி

கானகத்தே கழுதையொன்று
துள்ளி விளையாடி
மேடு பள்ளம் தாண்டி
குதித்து கும்மாளமிட்டு
கண்ணில் கண்ட காய்
கனிகளை கடித்து துப்பி
காட்டாற்றில் படுத்து உருண்டு
சுற்றத்தாருடன் கூடி குலாவி
சுதந்திரமாய் வாழ்ந்து வந்தது
முன்பிறப்பின் பயனோ
என்னவோ வண்ணான்
ஒருவனிடம் வசமாய்
மாட்டிகொண்டது
உருண்டு பார்த்தது முரண்டு பிடித்தது
மூலையில் கட்டினான் கயிற்றில்
சட்டியில் கஞ்சியும்
தொட்டியில் அக்கஞ்சியின்
தண்ணீ­ரையும் பார்த்தவுடன்
கண்களில் கண்ணீ­ர் வந்தது
இறுதியில் வேறு வழியில்லாமல்
வண்ணானின் வழிக்கு வந்தது
கறை படிந்த மனிதர்களின் அழுக்கு
படிந்த துணிகளை சுமந்தது
நகர வாழ்க்கையும் நகர
தொடங்கியது நரகமாய்
மெல்ல அசை போட்டது
உணவையும் உலக நடப்பையும்
குனிந்த முதுகும் நிமிர்ந்தது
சுந்தர காட்டில் சுதந்திர
மனிதனாய் வாழ்ந்தபொழுது
நாகரிகமும் வளர்ந்தது
நிமிர்ந்த முதுகும் வளைந்தது
சுமைதாங்கியான மனிதர்களை
நினைத்து தன்னிலை மறந்தது
மனதில் சுமைகள் பொதிந்து
முதுகில் பொதியை சுமந்து
குடும்ப வாழ்க்கையை சுமக்கும்
மனிதனின் நிலை நிலையில்லாதது
மாலையை கழுத்தில் சுமந்தவுடன்
மடியில் கணவனை சுமந்து
கருவறையில் சுமக்க தொடங்கி
கல்லறை வரை சுமையாகவும்
சுமைதங்கியாகவும் உள்ள
மனிதன் கழுதையைவிட
கவலை கொள்ளத்தக்கவன்
சிலருக்கு சுமைகளே சுகங்களாகவும்
பலருக்கு அந்த சுகங்களே
சுமைகளாகவும் உள்ளது

புதுக் கவிதை

Site Meter