தொலைவிலிருக்கும் மலை
சிபிச்செல்வன்
தொலைவிலிருந்து மலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
எவ்வளவு தூரம்
எவ்வளது அழகு
மலையில் துயிலும் கனவு
நினைவில் தொடரும்
அம்மலையை
சதா பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அடிவாரத்தில் மேயும் கால்நடைகளின்
கழுத்து மணியோசை கேட்கும் தொலைவில்
அம்மலையை வியப்புடன் பார்த்தவாறே நிற்கிறேன்
மலைப் பாதையில்
புதர்களை விலக்கிக்கொண்டு
பறக்கும் மேகங்களில் நனைந்தவாறு
மலையேற்றம் சதா நடக்கிறது.
உச்சியைத் தொடும் இலக்கில் மூச்சிரைக்க
மலைப் பள்ளத்தாக்குகளில், ஒளிரும் மின்மினிப்
பூச்சிகளாக அசைந்துகொண்டிருக்கும் நகரம்,
இருள் சூழ்ந்த வானில் மினுக்கும் நட்சத்திரங்கள்.
அடைந்த தொலைவிலிருந்து
கடந்த தூரத்தையும்
கடக்க வேண்டிய எல்லைகளையும்
அம்மலை சதா கற்றுத் தருகிறது.