மணிரத்னத்தின் ராவண் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐஸ்வர்யா ராய் நடித்து வருவதால் ரஜினியின் எந்திரன் படம் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலேயே பெரும் பட்ஜெட்டில் தயாராகும் எந்திரன் படப்பிடிப்பு 2008-ம் ஆண்டு துவங்கியது. ஆனால் இன்னும் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. 2007-ல் அறிவிக்கப்பட்டாலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2008-ல்தான் ஆரம்பித்தது. காரணம் ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட். அதற்காக பல மாதங்கள் காத்திருந்தனர். இரு பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட பிறகு, மீண்டும் ராவண் படத்துக்குப் போய்விட்டார் ஐஸ். அவர் இடம்பெறாத முக்கியமான காட்சிகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் எடுத்தனர். ராவண் படம் பிரச்சினைக்குள்ளான நேரத்தில் அந்தக் கால்ஷீட்டை எந்திரனுக்கு ஒதுக்கினார். இத்தனைக்கும் இந்தியாவிலேயே இதுவரை எந்த நடிகையும் வாங்காத சம்பளமாக ரூ 6 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளனர் இந்தப் படத்துக்காக ஐஸ்வர்யாராய்க்கு. இன்னும் ஒரு பாடல் காட்சி மற்றும் ரஜினி -ஐஸ் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளது. ஜூலையில் எந்திரன் படம் வெளியாகும் என ரஜினி கூறினார். ஆனால் ஐஸ்வர்யாவின் திடீர் கால்ஷீட் குளறுபடியால் திட்டமிட்டபடி படம் வருமா என்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. இந்த முறையும் மணிரத்னத்தின் ராவண் படம்தான் காரணம். இப்போதைக்கு அவரும் படிப்பிடிப்பை முடிப்பதாகத் தெரியவில்லை. ரஞ்சிதாவும் இந்த படத்தில் நடிப்பதால் அவரது பிரச்சினை வேறு அந்தப் படத்தை ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யாவுக்காக இப்போது எந்திரன் படக்குழுவினர் காத்துக் கொண்டுள்ளது. அவர் எப்போது கால்ஷீட் கொடுக்கிறாரோ அப்போதுதான் படப்பிடிப்பை துவங்க வேண்டிய நிலை. இதற்கிடையே, ராவண் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இனி எந்திரன் படிப்பிடிப்புக்கு வந்துவிடுவேன் என்றும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளாராம். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். இது இறுதிக்கட்டப் படப்பிடிப்பாம். எந்திரனை 3 டியில் உருவாக்கத் திட்டமிட்டிருந்தார் ஷங்கர். இப்போது மிகவும் தாமதமாகிவிட்டதால் 3 டி உருவாக்கம் சாத்தியமா என்பது தெரியவில்லை. படம் ஜூலையில் வெளியாகுமா அல்லது தீபாவளி வெளியீடா என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்காவது படம் வெளிவருமா?