முதல் பக்கம் » சினிமா » திரைக்குப்பின்

Tamil Movie Celebrity Ajith, Bhagyaraj, Lal, Rajnikanth, Shakthi, Simbu, Vadivelu, Vishal, Jyothika, Namitha, Sangeetha, Trisha, Vethika, Ameer Sultan, Bharathiraja, G. Boopathi Pandiyan, P. Vasu, Shakthi Chidambaram, Dhina, Yuvan Shankar Raja, Tamil Movie Actor, Actress Interview

காதல் என்பது ஒரு பாடல் - சிம்பு

Simbu Tamil Celebrity LOVE IS A SONG - SIMBU
"காளை", "கெட்டவன்", "சிலம்பாட்டம்" என மூன்று படங்களை மூளையில் ஏற்றிக் கொண்டு, அந்த மூன்றிலும் பல கெட்-அப்களோடு, தடாலடியாக மிரட்டி வருகிறார் சிம்பு.

"கெட்டவன்", "காளை"- இதில் எந்தப் படம் முதலில் வருகிறது?

"காளை" படம்தான் முதலில் வரும். தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டிருக்கிறோம். இது ஆக்ஷன், காமெடி கலந்த படம். என்னோட கேரக்டர் வித்தியாசமா இருக்கும். ஆக்ஷன் படம் பண்ணி ரொம்ப நாளாச்சு. அதனால்தான் பண்றேன். டைரக்டர் தருண்கோபி (Dharun Gopi) இயக்கிய "திமிரு" படத்தின் கதையை முதல்ல என்கிட்டதான் சொன்னார்.

நான் அப்போ "வல்லவன்"ல பிஸியா இருந்ததால, பண்ண முடியல. காரணம் "திமிரு" ஸ்ரேயா ரெட்டி (Sreya Reddy) கேரக்டரும், "வல்லவன்" ரீமாசென் கேரக்டரும் ஒரே மாதிரி அமைஞ்சிருக்கும். அதனால பண்ணல. இப்போ ரெண்டு பேருக்கும் நேரம் கூடி வந்ததனால சந்தோஷமா பண்றோம்.

தருண்கோபி ஜாதி பின்னணியில இதன் கதையைச் சொல்லியிருக்கார்னு சொல்றாங்களே?

ஜாதி பின்னணியில பாரம்பரியம் மிக்க பெரிய குடும்பம்ங்கிற மாதிரி எடுத்திருக்கார். வேண்டுமென்றே ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுத்தோ, அல்லது தனிப்பட்ட வகையில் சில காட்சிகளைக் கதையில் புகுத்தியோ, படத்தை எடுக்கல. படத்துல லால் (Lal), சங்கீதா (Sangeetha), வேதிகான்னு (Vedika) நிறைய பேர் நடிக்கிறாங்க. லால்தான் வில்லன். படத்துல, சங்கீதாதான் எனக்கு அத்தைன்னு எனக்கும் தெரியாது. படம் பாக்கற ஆடியன்ஸ் யாருக்கும் தெரியாது.

சங்கீதான்னு ஒரு கேரக்டரை படத்துல காட்டும்போது, அவங்க ஏன் என்னை லவ் பண்ணமாட்டேங்கிறாங்கன்னு ரசிகர்கள் கலாட்டா பண்ணுவாங்க. அப்புறம் பாட்டிக்கிட்டே சொல்வேன். அவங்க சொல்லும் போதுதான் சங்கீதா எனக்கு அத்தைன்னே தெரியும். அத்தையாக சங்கீதா ஒரு கலக்கு கலக்கிருக்காங்க.

"பணக்காரன்" படத்துல ரஜினி, ஸ்ரீவித்யா மாதிரி நீங்களும், சங்கீதாவும் நடிச்சிருக்கீங்களா?

அப்படி எதையுமே நாங்க "காளை" படத்தின் கதையாகவோ, காட்சியாகவோ அமைக்கல. இது, பாட்டி பேரனுக்கிடையிலான பாசம், நேசம் சம்பந்தப்பட்ட கதை. அவங்களோட அட்டாச்மெண்ட் படத்துல தூக்கலா இருக்கும். எல்லாரும் நினைக்கிற மாதிரி இது, அத்தை-மருமகன் கதை இல்லை. டைரக்டர் மேல உள்ள நம்பிக்கையில இந்தப் படத்தைப் பண்ணியிருக்கேன். படம் காளையா வரும். ஆனா என் கேரக்டர் பேர் காளை இல்லை. ஜீவா! காளைக்கு உள்ள ஆக்ரோஷம், கோபம், அடங்காமல் இருப்பது ஆகிய குணாம்சங்கள் எனக்குள்ள இருக்கும். முதல் பாதி கதை நகரப் பின்னணியிலும், இரண்டாம் பாதி கதை கிராமத்துப் பின்னணியிலும் நகரும். பாட்டி கேரக்டரில் சிமா ரொம்பவும் செட் ஆகியிருக்காங்க.

"கெட்டவன்" படத்துல நிறைய கெட்-அப்களில் நடிக்கிறீர்களாமே? உங்களுக்கு கொம்பு முளைச்சிருக்குன்னு கூட சொல்றாங்களே?

நான்கு அல்லது ஐந்து கெட்-அப்ல வருவேன். எல்லாமே வித்தியாசமா இருக்கும். படத்துல மையமா ஒரு பரபரப்பு இருக்கணும். அது கதைக்குத் தேவைப்படுற விஷயம். ஒரு கெட்-அப்போட ஸ்டில்ஸ் மட்டும்தான் வெளியில வந்திருக்கு. மத்ததெல்லாம் "காளை" ரிலீஷூக்குப் பிறகுதான் வெளியிடப்படும். படத்துல என் பேரு "ஜான் ஆண்டனி".

சிகரெட்டை வைத்தெல்லாம் ஸ்டைல் பண்றீங்களாமே? அதுக்கு படப்பிடிப்பில் கைத்தட்டல் கிடைத்ததாமே?

சின்ன வயதிலிருந்தே ரஜினி (Rajini Kanth) சார் சிகரெட்டை தூக்கிப் போட்டுப் பிடிக்கிற காட்சிகளைப் பார்த்து ரசித்தவன் நான். அதுபோல, நானும் சிகரெட்ல ஏதாவது புது ஸ்டைல் பண்ணிப் பார்க்கணும்னு நினைச்சிட்டு இருப்பேன். இவ்வளவு நாள் கிடைக்காத ஒரு விஷயம் இப்ப டக்குன்னு கிடைச்சிருக்கு. டைட்டல் பார்க்கில் ஷூட்டிங் நடந்தபோது கூட்டம் அதிகமா இருந்தது. ஒரு காட்சியை எடுத்தப்போ சிகரெட்டை கரெக்டா ஸ்டைலா பிடிச்சி போட்டப்போ எல்லோரும் அதைப் பார்த்து கை தட்டினாங்க. அப்பதான், தோணுச்சு... என்னோட ஸ்டைலும் வொர்க்-அவுட் ஆயிடுச்சுன்னு. அந்த ஸ்டைல் படத்துல ஐந்தாறு இடத்துல வரும்.

கெட்டவனுக்காக சொந்தக் குரலில் பாடியிருக்கிறீர்களா?

அப்படத்துக்கு இசையமைக்கும் யுவன்சங்கர் ராஜா (Yuvan Sankar Raja) கொஞ்சம் பிஸியா இருக்கார். இன்னும் பாட்டை ரெடி பண்ணல. ஆனா... ஒரு பாட்டை பாடலாம்னு இருக்கேன். "காளை" படத்துக்காக "குட்டி பிசாசே..."ன்னு ஒரு பாட்டைப் பாடியிருக்கேன்.

"பொறுக்கி" படத்துக்குக் கூட அப்பாவோட சேர்ந்து ஒரு பாட்டை பாடியிருக்கீங்கதானே?

நான் தினா (Dhina) மியூசிக் பண்ற சில படங்களில் பாடியிருக்கேன். அவர் எனக்குப் பொருத்தமான பாடல்கள் அமைந்தால், உடனே கூப்பிடுவார். அது மாதிரி "பொறுக்கி" படத்துக்காக பாட கூப்பிட்டார். அப்பா தனியா ஒரு பாடலை பாடியிருக்கார். நானும் தனியாதான் பாடியிருக்கேன். என்கிட்ட உள்ள திறமையை வெளிப்படுத்துற வாய்ப்பு கிடைக்கும்போது சரியா பயன்படுத்திக்க வேண்டியதுதானே?

ஏன் எல்லா படத்திலேயும் ஸைக்கோ மாதிரியே நடிக்கிறீங்க?

பெரிய ஹீரோக்கள் யாருமே அதுமாதிரி பண்ணமாட்டாங்க. வித்தியாசமா ஏதாவது பண்ணனும். அந்த வித்தியாசத்தை நான் பண்ணும்போது ஏத்துக்கிறாங்க. அதனால தைரியமா பண்றேன். "கெட்டவன்" படத்துல வடிவேலுவும் நடிக்கிறார். படத்தோட ரெண்டாவது பாதியில ஒரு முக்கியமான கேரக்டர் வரும். அதை "ஸ்ருதி"ன்னு ஒரு பொண்ணு பண்றாங்க. தாத்தாவா நடிக்க "சோ" சாரை கேட்டிருக்கோம்.

நமீதாவுக்கு பதில் மந்திரா பேடி நடிக்கிறார் என்று ஒரு பேச்சு அடிபடுதே?

அதை இன்னும் கன்ஃபார்ம் பண்ணல. இப்போதைக்கு நமீதாதான் (Nameetha) பண்றாங்க. அவங்க ஃபேஷன் டிஸைனரா நடிக்கிறாங்க. இந்தப் படத்தில அவங்களுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் இருக்கும். என் கேரக்டரைப் பலப்படுத்தற மாதிரியான ஒரு கேரக்டர் அவங்களுக்கு. அப்புறம், "கெட்டவன்"ல அப்பாவோட "ராக்கால வேளையிலே..." பாட்டை ரீ-மிக்ஸ் பண்ணியிருக்கோம்.

ரீ-மேக் படம் பண்ற எண்ணம் இருக்கா?

ஆந்திராவிலும் என் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அடுத்த வருஷம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலயும் ஒரே நேரத்துல படம் பண்ற ஐடியா இருக்கு. அதுக்காக பேசிகிட்டு இருக்கோம். இன்னும் கொஞ்ச நாள்ல அதோட அறிவிப்பு வரும்.அதனால ரீ-மேக் படம் பண்ணினால் அங்கே உள்ள மார்க்கெட் அடிவாங்கும். அதனால் நேரடி படங்கள் மட்டும்தான் பண்ணுவேன்.

"கெட்டவன்" படத்துல "பஞ்ச்" டயலாக் நிறைய இருக்குதாமே?

ஆமா... படத்துல நிறைய "பஞ்ச்" இருக்கு. பஞ்ச் டயலாக் பேசணும் என்பதற்காக வைக்கல. காட்சிக்கு என்ன தேவையோ அதைப் பேசியிருக்கேன். அது "பஞ்ச்"சா வந்து விழுந்திருக்கு. ஹீரோயினுக்கு ஒரு கிஃப்ட் கொடுப்பேன். அப்போ அவர் கேட்பார்... "காதலை ஞாபகப்படுத்துறதுக்காகவா"ன்னு. அதுக்கு நான் சொல்வேன். "காதல் ஞாபகப்படுத்துற விஷயம் இல்லை. ஞாபகம் இருக்க வேண்டிய விஷயம்"ன்னு.

இரண்டாவது பாதியில, நெஞ்சு நிறைய வலியோட இருக்கிற மாதிரியான காட்சிகள் நிறைய இருக்கு. அப்போ வர்ற டயலாக் இப்படி வரும். கதாநாயகி என்னை "போடா... பொறுக்கின்னு சொல்லுவா. அதுக்கு நான் "போக்கிரின்னு சொல்லியிருந்தா போயிருப்பேன். யாரப் பார்த்து பொறுக்கின்னே" என்பேன்.

அதுமாதிரி, ஜாலியாக "கையை எடுறா"ன்னுவா. அதுக்கு "கையை எடு, காலை எடுங்கிற... என்னைப் பார்த்தா என்ன விஷால் (Vishal) பட வில்லன் மாதிரியா இருக்கு"ம்பேன். இதுமாதிரி படம் முழுக்க பல சுவாரசியமான, சின்ன சின்ன விஷயங்கள் இருக்கும்.

ஏன் காதல் தோல்வியைச் சந்திக்கிற, கேரக்டர்களிலேயே நடிக்கிறீங்க?

இப்போ என் வயசு இருபத்தி மூணு. என் வயசுல நான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விஷயங்களைதான் படமா எடுக்க முடியும். இருபத்தி ஏழு வயசுல எனக்கு கல்யாணம் ஆகியிருக்கும்போது, நான் புருஷன், பொண்டாட்டி உறவுகள் சம்பந்தமானப் படங்களை எடுப்பேன். ஏன்னா எதையுமே உணர்வுப்பூர்வமா உள்வாங்கி அனுபவிச்சிருந்தாதான் எதையுமே இயல்பா பண்ண முடியும். எல்லாம் நாம வளர வளர வாழ்க்கையில கத்துக் கொள்கிற விஷயங்கள்தானே!

அமீர் (Ameer) "பருத்தி வீரன்" படம் பண்ணினார்னா... அவர் வாழ்ந்த, பார்த்த மக்களை எடுத்திருக்கார். பாரதிராஜா (Barathi Raja) படம் எடுத்தார்ன்னா அவரோட அனுபவம் அப்படி. "ஒரு தலை ராகம்" அப்பா எடுத்தார்ன்னா அண்ணா யுனிவர்ஸிட்டியில அவர் பார்த்த விஷயங்கள், பாதித்த விஷயங்கள், அனுபவங்கள் எப்படியிருந்ததோ, படமும் அப்படியே இருந்தது. நான் ஒரு பெரிய டைரக்டர் என்பதை காட்டிக்கிறதுக்காக படம் டைரக்ட் பண்ணலை. அனுபவத்துல தோன்றதைப் படமா எடுத்து மக்களுக்கு கொடுக்குறேன். அவங்களும் வரவேற்கிறாங்களே!

பெண்களை மோசமா சித்தரிக்கிறார் சிம்பு என்று சில பெண்கள் சொல்கிறார்களே?

"மன்மதன்" படத்துல ஜோதிகாவை (Jothika) நல்ல குணாம்சங்கள் கொண்ட கேரக்டரா, ஜீன்ஸ் போட்ட மாடர்ன் பெண்ணா காட்டினேன். அது அவங்க மைண்ட்ல ஏறல. சுடிதார் போட்ட தப்பானப் பெண்ணைக் காட்டினேன். அது அவங்க மனசுல ஏறியிருக்கு. அப்போ, யாரோட பார்வை சரியில்லை? இன்னிக்கு நம்மளோட வாழ்க்கை முறை வளர்ச்சி அடைந்த அதே அளவுக்கு விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை குறைந்து போச்சு. விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படிகளில் ஏறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கு. கட்டுப்படுறது வேற, விட்டுக் கொடுக்கிறது வேற. இது தப்பா புரிஞ்சிக்கப்படுது.

"வல்லவன்" படத்துக்குப் பிறகு நடிப்பில் முழு கவனம் செலுத்தப் போறேன்னு சொன்னீங்க. ஆனா, மறுபடியும் "கெட்டவன்" மூலம் கதாசிரியராக களமிறங்கியிருக்கீங்களே?

அப்போ சொன்ன மாதிரியே நான் இப்போ டைரக்ட் பண்ணல. நந்து டைரக்ட் பண்றார். "பரதன் ஃபிலிம்ஸ்" தயாரிக்குது. டைரக்ஷன்னு இறங்கிட்டால் டென்ஷன் ஜாஸ்தியாகும். அதனால பண்ணல. ரெண்டாவது இந்தக் கதையை இப்போ பண்ணினால்தான் கரெக்டா இருக்கும்.

அதனாலதான் "காளை, கெட்டவன், சிலம்பாட்டம்" ஆகிய மூணு படத்தையும் ஒரே நேரத்துல மாத்தி மாத்திப் பண்ணிகிட்டிருக்கேன். இந்த மாதத்தோட "கெட்டவன்" முதல் பாதி முடியுது. இந்தப் படத்தை நாலு கேமரா வச்சு சூட் பண்றோம்.

நாலு நாளில் எடுக்க வேண்டியதை ரெண்டு நாள்ல முடிச்சிடுறோம். நிறைய ஷாட்ஸ் எடுக்கணும். மூணு, நாலு கேமரா என்பதால "லைட்" பார்த்து எடுக்க கஷ்டமாகவும் இருக்கு. "புலி வருது" படத்தில் பணிபுரிந்திருக்கிற ராஜசேகர்தான் இதுலயும் கேமராமேனா பண்றார். ஹீரோயினோட அண்ணன்கூட நான் சண்டை போடுற காட்சியைப் பதினைந்து கேமரா வச்சு எடுத்திருக்கோம். பதினைந்து ஷாட்டும் தனித் தனியாகவும், ஒரே ஃபிரேம்லயும் வரும். ஹீரோயின் அண்ணனா பாலாஜின்னு ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருக்கோம். ஸ்டன்ட் சிவாதான் ஃபைட் மாஸ்டர்".

"சிலம்பாட்டம்" என்ன மாதிரியான கதை?

சரவணன் டைரக்ட் பண்ணும் "சிலம்பாட்டம்" எல்லாமே கலந்த கமர்ஷியல் கதை. "காளை" ஆக்ஷன் படம், "கெட்டவன்" ஸைக்கோ ஸ்டைல் கலந்த முழுமையான காதல் கதை. சிலம்பாட்டத்துல நான் விச்சுன்ற அய்யர் கேரக்டர் பண்றேன். அதுக்காக கெட்-அப் மாத்தலாம்னு இருக்கேன். அது டபுள் ஆக்ஷன் சப்ஜெக்ட். இன்னொரு கேரக்டர் கெட்-அப் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

காமெடி படம் பண்ணும் எண்ணமிருக்கிறதா?

"சிலம்பாட்டம்" படத்துலேயே காமெடி இருக்கு. அதற்கடுத்து, பூபதிபாண்டியன் டைரக்ஷன்ல ஒரு படம் பண்றேன். அது காமெடி படம்.

ஹேர்ஸ்டைல் மூணு படத்துக்கும் மாறி மாறி வருமே? எப்படி சமாளிக்கிறீங்க?

"காளை" படத்துக்கு ஃபுல்லா ஜெல் போட்டு வழிச்சி சிவியிருக்கேன். "கெட்டவன்" படத்துக்கு ரெட் கலர் ஃப்ரண்ட் ஸ்டைல். பாடல்களுக்கு மட்டும் "காளை" ஹேர்ஸ்டைல். அதுமாதிரி, சிலம்பாட்டத்துக்கு ஹேர்ஸ்டைல் வேற மாதிரி இருக்கும்.

இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிப்பீங்களா?

ஹிந்தியில் அப்படி எடுக்கிறாங்க, சூப்பர் ஹிட்டும் ஆகுது. இங்கே ரசிகர்கள் ஒத்துக்கணும். கதையும் கரெக்டா அமையணும். ஒருத்தருக்கு ஒரு காட்சி அதிகமா போனாலும், இன்னொருத்தருக்கு ஒரு பாட்டு குறைஞ்சு போனாலும் ரசிகர்கள் ஒத்துக்க மாட்டாங்க. இப்போ அஜித் கட்-அவுட்டை விட த்ரிஷாவோட கட்-அவுட் அஞ்சு இஞ்ச் உயரமா வச்சிட்டாங்கன்னு பிரச்னை வரலியா? அதனால ரசிகர்கள் தயாரானால் அதுமாதிரி பண்ணலாம்.

பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவில்லையே ஏன்?

என்னைத் தேடி வர்றவங்க படத்துல நான் நடிக்கிறேன். எந்த டைரக்டர்கிட்டேயும் என்னை வச்சுப் படம் எடுங்கன்னு நான் சொன்னதில்லை. வாய்ப்பு வரட்டும்... பார்க்கலாம். இப்போ வர்ற இளைஞர்கள் ரொம்ப நல்லா பண்றாங்க. சந்தோஷமா இருக்கு.பி. வாசு (P.Vasu) ஸாரின் மகன் ஷக்தி (Shakthi) நடிச்ச "தொட்டால் பூ மலரும்" படத்தைப் பார்த்தேன். எனக்கு பிடிச்சிருந்தது. தைரியமா பண்ணியிருக்கார்.

என்னை மாதிரி கூட ஸ்டைல் பண்ணியிருக்கார்ன்னு சிலர் சொன்னாங்க. நான் கேட்கிறேன், சிம்பு (Simbu) மட்டும்தான் விரலைக் காட்டணும்னு என்ன அக்ரிமென்ட்டா போட்டிருக்கு? நான் அந்தப் படத்தை கைத்தட்டி விசில் அடித்து ரசித்துப் பார்த்தேன். பாக்யராஜ் (Bhakyaraj) ஸார் பையன்கூட நல்லா பண்றார்ன்னு கேள்விப்பட்டேன். ஜூனியர் சிவாஜிகூட நல்லா பண்றாராம். இதையெல்லாம் கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவங்க சினிமாவுக்கு வர்றது ஆரோக்யமான விஷயம். இது போன்ற இளைஞர்கள் நிறைய வரணும்.

உங்க அப்பாவும், பாக்யராஜும் அப்போ முன்னணியில் இருந்தவங்க? நீங்களும், சாந்தனுவும் இணைவீங்களா?

இப்பதானே அவர் வர்றார், வரட்டும். அப்புறம் பார்க்கலாம். அதுக்குள்ள ஏன் அவசரப்படுறீங்க?

உங்களது திருமணம் காதல் திருமணமாக இருக்குமோ?

ஆணுக்கும், பெண்ணுக்கும் துணை தேவை. அதனால்தான் காதல் வருகிறது. ஊர் சுத்துறதுக்காக மட்டும் யாரும் காதலிப்பதில்லை. நமக்குன்னு ஒருத்தரை ஏற்படுத்திக்கணும்னுதான் ஒரு ஆணும், பெண்ணும் நினைப்பாங்க. ஆண்களுக்காக காத்திருக்கிற பெண்களின் விகிதம் கம்மியாயிட்டே வருது. ஒரு ஆணை நேசித்து அவனுக்காகவே காத்திருக்கும் பெண் கடவுள் தந்த பரிசு மாதிரி. அப்படி ஓர் உறவு அமைஞ்சதுன்னா லவ் பண்ணுவேன். காதல் என்பது அருமையான ஒரு பாடல். சில சமயம் அதனுடைய வரிகள்தான் கேவலமா இருக்கு.

மேலும் திரைக்குப்பின்
Site Meter