அது என்ன ஏடாகூடமான பெயர், "கெட்டவன்". இப்படியொரு பெயர் வைக்க என்ன காரணம்?
"கெட்டவன் என்றால் ஒரு பெண்ணை நம்பிக் கெட்டவன்னு அர்த்தம். ஒரு ஆண் காதல் தோல்வி அடையறதுக்கும் ஒரு பெண் காதல் தோல்வி அடையறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அது என்ன வித்தியாசம்? அந்தப் பொண்ணு என்ன செய்வாள் அந்த ஆண் என்ன செய்வான். இதிலுள்ள யதார்த்தத்தைச் சொல்றவன் தான் "கெட்டவன்". பொதுவாக மத்தவங்க நான் பெண்களை தப்பாகவே காட்டுறேன்னு நினைச்சுக்கிறாங்க. ஆனா பெண்களை எனக்கு ரொம்பப்பசிடிக்கும். அதனாலதான் அவங்க என்னைக் காயப்படுத்தும் போது ரொம்ப வலிக்குது. அந்த வலியைத்தான் என்படத்துல காட்டுறேன்."
இந்தப் படத்தோட கதை நயன்தாராவின் கதைதான் என்று பேச்சு அடிபடுகிறதே, உண்மையா?
"அவங்களுக்கும் கெட்டவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நயன்தாரா என்னுடைய வாழ்க்கையில ஒரு அத்தியாயம். ஒரு லவ் எபிசோட். என் வாழ்க்கையில ஒரு காதல் அத்தியாயமா வந்து போன விஷயம். அதில் இருந்த சில வலிகள், சில நல்ல விஷயங்கள், நல்ல அனுபவங்கள் வேறு மாதிரியாக திரையில் இருக்கலாமே தவிர.... அதை எப்படிச் சொல்றது.... அதனோட ஈடுபாடோ அல்லது உடன்பாடோ இருக்கலாமே தவிர வேறு எதுவும் இல்ல. காதல் தோல்வி எனக்கு மட்டும் நடக்கலங்க. உலகத்துல இருக்கிற தொண்ணூறு சதவித ஆண்களுக்கும் நடக்கிற விஷயம். அதனால் இந்தக் கதையை என்னோட கதைதான் உன்னோட கதைதான்னு யார் வேண்டுமானாலும் சொல்லலாம்."
காதல் தோல்வி உங்களை ரொம்ப பாதிச்சிருச்சு போல?
"எனக்கு என்ன பிரச்னைன்னா, மத்தவங்க வெளியே இருந்து பார்க்கும்போது சிம்பு ஜாலியான பையன், அவனுக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க, அப்படி இப்படினு நினைக்கிறாங்க. நான் ஒண்ணு சொல்றேன். "மன்மதன்" படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஏறக்குறைய அந்தப் படத்தை நான் தான் டைரக்ட் பண்ணியிருக்கேன். "வல்லவன்" படத்தை டைரக்ட் பண்ணியிருக்கேன். இப்ப "கெட்டவன்" படத்துக்கும் கதை, திரைக்கதை எழுதி நடிக்கிறேன்.
இவ்வளவு வேலைக்கு நடுவுல ஊர் சுற்றிக்கிட்டு இருக்க முடியுமா? நாம கஷ்டப்பட்டு உழைச்சிட்டு வரும்போது நமக்கு ஆறுதலாக, அன்பாக யாராவது இருக்க மாட்டாங்களா என்ற ஏக்கம் தான் என்னை லவ் பண்ண வச்சதே. அந்த ஏக்கம்தான் என்னை ஒரு பெண்ணோடு சேர்த்து வச்சது. அது மட்டும் தான். அதுல ஒரு வலி வரும்போது என்னால தாங்கிக்க முடியல. அந்த உறவுல பிரிவு வரும்போது, பாதிப்பு வரும்போது தாங்கிக்க முடியல."
உங்களால நயன்தாராவை மறக்க முடியலை, அப்படித்தானே?
"அப்படித்தான் வச்சுக்குங்களேன். நான் மறந்துட்டேன்னு சொன்னாலும் நீங்க நம்பப் போறதில்லை. உங்களுக்கு சௌகர்யம்னா அப்படியே வச்சிக்குங்க".
நயன்தாராவைத் தமிழில் நடிக்க விடாமல் நீங்கள் தடுப்பதாக கிசுகிசுக்கள் வருகிறதே. அது உண்மையா?
"நான் கேள்விப்பட்டது என்னன்னா அவங்க நடிக்கக்கூடிய ஒரு படத்தோட தயாரிப்பாளர் படத்தோட பப்ளிசிட்டிக்காக வேண்டுமென்றே போலீஸ் பாதுகாப்பு கேட்டதாக என் காதுக்கு செய்தி வந்துச்சு. ஆனால், அவங்க எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்னு கேட்கவே இல்லைன்னும் நான் கேள்விப்பட்டேன். நான் அவங்க விஷயத்துல தலையிடுறதே இல்ல. இப்ப கூட ஃப்லிம்ஃபேர் விருது விழாவுக்கு நான் போக வேண்டியது. கடைசி நேரத்துல ஃப்ளைட்டுக்கு ஒரு மணி நேரம் இருக்கும் போதுதான் அவங்களும் அந்த விழாவுக்கு வர்றாங்கன்னு சொன்னாங்க. அதனால நான் அதுக்கு போகவே இல்ல. நான் அங்கே போனால் அவங்க பப்ளிசிட்டிக்காக யூஸ் பண்ணுவாங்க. தேவையேயில்லையே. அதனால நான் போகல. நானே பல விஷயங்களை தவிர்த்துவிடுறேன். ஒருத்தர் நம்மைப் பிடிக்கலைன்னு சொன்னால் நாம போயி அவங்களை என்ன பண்ண முடியும்."
"சிவாஜி" படத்தில் விவேக் "சின்ன பசங்க பஞ்ச் டயலாக் பேசுறாங்க, விடலைப்பசங்க விரல் ஆட்டி பேசுறாங்கனு" டயலாக் பேசியிருக்கிறாரே. உங்களைத்தான் சொல்றாரா?
"தொட்டால் பூ மலரும்" படத்தில் ஷக்தி (Shakthi) என்னை மாதிரி விரல் ஆட்டி நடிச்சிருக்காருன்னு என்கிட்ட சிலர் சொன்னாங்க. விரல் ஆட்டி ஸ்டைல் பண்ணணும்னா அதை சிம்புதான் (Simbu) பண்ணணும்னு தமிழ்ச்சினிமாவுல ஏதாவது அக்ரிமெண்ட் போட்டிருக்காங்களா என்ன? சினிமாங்கிறது ஒரு பொழுதுபோக்கு விஷயம். உங்க விருப்பப்படி நடிங்க என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். யாரு வேண்டுமானாலும் பஞ்ச் டயலாக் பேசலாம். ஆனால் யார் பேசினால் கைதட்டணும்னு மக்களுக்குத் தெரியும். இதையெல்லாம் மக்கள்கிட்ட விட்டுடணும். "சிவாஜி" படத்துல விவேக் (Vivek) "சின்ன பசங்க பஞ்ச் டயலாக் பேசுறாங்க, விடலைப்பசங்க விரல் ஆட்டி பேசுறாங்கன்னு சொல்வார். அதைப் பார்த்தப்ப கஷ்டமா இருந்துச்சு.
ரஜினி சார் படத்திலா இப்படியொரு டயலாக் வந்திருக்குன்னு கஷ்டமா இருந்துச்சு. இதே டயலாக்கை விவேக் வேற படத்துல சொன்னாருன்னா தப்பே இல்ல. ரஜினி சார் படத்துல வந்ததுதான் ரொம்ப காயப்படுத்திடுச்சு. ரஜினி சாரை பார்த்துதானே இன்னைக்கு எல்லோருமே இன்டஸ்ட்ரிக்கு வந்திருக்காங்க. நடிகருங்க எங்க எல்லோருக்கும் முன்னோடி. உங்க சாதனைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு லவ் பண்ணி, ஆசைப்பட்டு உங்க படத்தை எத்தனை தடவை முதல் நாள் முதல் ஷோ பார்த்திருப்போம். அப்படீன்னா என்ன வெறி இருக்கும்? எவ்வளவு ஆசை உள்ளே இருக்கும். உங்களை மாதிரி வரணும்னுதானே ஒவ்வொருத்தரும் பஞ்ச் டயலாக் பேசுறாங்க. ஒவ்வொருத்தரும் விரல் ஆட்டுறாங்க. அதை தப்புன்னு சொன்னா எத்தனை பேர் காயப்படுவாங்க. அது தலைவர் படத்துல வரலாமா? அவர் அந்த டயலாக்கை பேச விடலாமா? வேற படத்துல விவேக் பேசினாருன்னா அது காமெடி. தலைவர் படத்துல பேசினது காமெடி இல்ல, சிரியஸான விஷயம்.
எம்.ஜி.ஆர். (MGR), சிவாஜி (Sivaji), ரஜினி (Rajinikanth), கமல் (Kamal Haasan) இவங்க எல்லோரும்தான் நமக்கு முன்னோடிகள். இவங்களைப் பார்த்துதான் எல்லோரும் வளர்ந்து வர்றோம். நாளைக்கு விஜய் (Vijay) சாரை அஜித் (Ajith) சாரை பார்த்து ஒரு குரூப் வளர்ந்து வரும். அடுத்து விஷால் (Vishal), ஜெயம் ரவி (Jeyam Ravi), என்னைப் பார்த்து இன்னொரு குரூப் வளர்ந்து வரும். அவங்களை நாமதான் தட்டிக் கொடுத்து தூக்கி விடணும். தட்டி விடக்கூடாதுங்க. எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் போய் சிவாஜி பார்க்கிறேன். அந்த டயலாக் காயப்படுத்தினாலும் மொட்டை ரஜினி பண்ற ஸ்டைலுக்கு விசிலடிச்சு தூள் கிளப்பிட்டுதான் வர்றேன். நான் அந்தளவுக்கு தலைவரோட உண்மையான ரசிகன்."