சமீபத்தில் வெளியான படங்களில் களவாணியும், மதராசப்பட்டினமும்தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவ்விரு படங்கள் மட்டுமே விற்றவர்களுக்கும், வாங்கியவர்களுக்கும் லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது. லாப சதவீதத்தை அதிகரிக்கும் விதமாக மதராசப்பட்டினம் டீம் திரையரங்குக்கு சென்று ரசிகர்களை நேரடியாக சந்திக்க உள்ளது. படத்தின் கதாநாயகன் ஆர்யா, கதாநாயகி எமி ஜாக்சன், இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் படத்தை தமிழகத்தில் விநியோகித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் என அனைவரும் இந்த விளம்பர பயணத்தில் கலந்து கொள்கிறார்கள். கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் மதராசப்பட்டினம் ஓடும் திரையரங்குகளில் இவர்கள் ரசிகர்களை சந்திப்பார்கள். எப்படியோ ஊர் ஊரா சுத்தி மதராசபட்டனத்தை மலையேத்துனா சரிதான்!
காசி, என் மனவானில், சாது மிரண்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை காவ்யா மாதவன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நிஷால் குவைத்தில் பணியாற்றி வந்தார். இதனால் திருமணத்துக்கு பிறகு நிஷாலும், காவ்யா மாதவனும் குவைத் சென்று குடும்பம் நடத்தினர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவரை பிரிந்து காவ்யா மாதவன் மீண்டும் கேரளா வந்தார். சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். இந்த நிலையில் தன்னையும், தனது குடும்பத்தினர் பற்றியும் காவ்யா மாதவன் அவதூறாக பேசி வருகிறார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி காவ்யா மாதவனுக்கு நிஷால் வக்கீல் நோட்டீசு அனுப்பினார். கணவர் நோட்டீசு அனுப்பிய நிலையில் காவ்யா மாதவன் விவகாரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார். மேலும் எர்ணாகுளம் முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவையும் அவர் தாக்கல் செய்தார். அதில் நிஷால் சந்திராவும், அவருடைய குடும்பத்தினரும் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தினர். குவைத்தில் தனிக்குடித்தனம் நடத்தியபோதும் இந்த கொடுமை தொடர்ந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். கல்யாணத் தேதியோட, டைவர்ஸ் தேதியையும் முடிவு பண்ணிட்டுத்தான் கல்யாணமே பண்ணுவாங்க போல!
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு, அதன் தலைவர் சரத்குமார் தலைமையில் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய பலரும் நடிகர்கள் இலங்கைக்கு செல்லலாம், செல்லக்கூடாது என்ற இருவித கருத்துக்களையும் தெவித்தனர். குறிப்பாக பொதுச்செயலாளர் ராதாரவி இலங்கை படப்படிப்பில் கலந்து கொண்ட அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இறுதியாக, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை பிரச்சினையை அறிவோம். அங்குள்ள தமிழர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறோம். ஆனாலும் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அங்கு செல்லும் நடிகர், நடிகைகளை சில அமைப்புகளும், தனிப்பட்டவர்களும் மிரட்டும் போக்கு இருந்து வருகிறது. திரைப்பட கலைஞர்கள் இலங்கை செல்லலாமா வேண்டாமா என்பது குறித்து திரைப்படத்துறை அமைப்புகள் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழுதான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவை நடிகர் சங்கம் ஏற்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து சங்கத் தலைவர் சரத்குமார் கூறும்போது, திரைப்பட கலைஞர்கள் எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு இலங்கை செல்லலாம், செல்லக்கூடாது என்று கூட்டு நடவடிக்கை குழு விரைவில் கூடி முடிவு செய்யும். தனிப்பட்ட நபர்களோ, அமைப்போ கலைஞர்களை மிரட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. திரைப்பட கலைஞர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதையும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று மிக்கவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார். திரைப்படங்களின் லாப நஷ்டத்தில் நடிகர்களுக்கு தொடர்பில்லை. அவர்கள் தொழிலாளர்கள் மட்டுமே. எனவே யாரும் நடிகர்களிடம் நஷ்ட ஈடு கேட்கக் கூடாது. நடிகர் சங்க உறுப்பினரான பிறகே திரைப்படங்களில் நடிக்க வேண்டும். உறுப்பினர் ஆகாதவர்கள் ஆகஸ்ட் 15க்குள் உறுப்பினராக வேண்டும். இலங்கை படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர் வாழ்வு பணிகள் தாமதமாக நடக்கிறது. அவதிப்படும் எங்கள் சகோதர, சகோதரியான இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க துரித நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. நடிகர்கள், தொழிலாளர்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீடுகட்டிக் கொள்ள நிலம் ஒதுக்க கொள்கை அளவில் அரசாணை வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு பொதுக்குழு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறது. கூட்டத்தில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், விஜயகுமார், வாகை சந்திரசேகர், கருணாஸ், கஞ்சா கருப்பு, சரவணன், ராஜேஷ், அருண் விஜய், நடிகைகள் ராதிகா, பூர்ணிமா, நளினி, சீதா, ஸ்ரீப்ரியா, மனோரமா, சரண்யா, மும்தாஜ், லதா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கே.ஆர்.செல்வராஜ் வரவேற்றார். முடிவில் சார்லி நன்றி கூறினார். அசின் தலைய இனிமேலாவது உருட்டமாட்டாங்களே.....
17 வயதில் நட்புக்காக படத்தின் மூலம் கதையாசிரியரான ஜோதி கிருஷ்ணா, தனது 20 வயதில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலே ஏ.ஆர்.ரஹ்மான் என பெரிய கூட்டணியோடு வந்து ஒரு தரமான படத்தை கொடுத்தவர் தற்போது ஊலலலா (ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா) படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கும் ஜோதி கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மூத்த மகன் என்பது அனைவரும் அறிந்ததே. தனது இரண்டு படங்களை தனது தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்கிய ஜோதி கிருஷ்ணா, ஊ ல ல லா படத்தை புதிய தயாரிப்பாளரான டி.கலைச்செல்வம் தயாரிப்பில் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் பாடல்களை வெளியிட்டார். ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா என்றுதான் இதுவரை கூறிவருகிறார்கள். ஆனால் விரைவில் ஜோதி கிருஷ்ணாவின் தந்தை ஏ.எம்.ரத்னம் என்று கூறவேண்டும். அப்படிப்பட்ட வெற்றியை நீ இப்படத்தின் மூலம் பெற வேண்டும் என்று இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் வாழ்த்தினார். கே.எஸ்.ரவிகுமார் பேசியது உண்மைதான் என்றாலும், ஜோதி கிருஷ்ணாவின் படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, இலியானா, ஸ்ரேயா என அனைத்து கதாநாயகிகளும் இன்று பெரிய இடத்திற்கு சென்று விட்டார்கள். இதனால் இவரை பெண் ராசி இயக்குனர் என்றே சொல்லலாம், என்று விழாவிற்கு வந்திருந்த பெரும்பாலான விஐபிக்கள் ஜோதி கிருஷ்ணாவிற்கு புது பட்டத்தையே கொடுத்துவிட்டார்கள். என் மகனை நான் லண்டனில் படிக்க வைத்தேன், அப்போது அவனை அங்கேயே நீ யாரிடமாவது உதவி இயக்குனராக வேலை செய், பிறகு நாம் ஹாலிவுட் படமே எடுக்கலாம் என்றேன். ஆனால், அவன் தமிழ் சினிமாவின் மேல் உள்ள காதலால் தமிழ்ப் படங்கள் எடுக்கிறான். பாரதிராஜா சார் இவனை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறேன் என்றார். அப்போதெல்லம் நடிக்க மறுத்தவன் இன்று நடிக்க சம்மதித்து, இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறான். கண்டிப்பாக இந்த முறை கதாநாயகனாகவும், இயக்குனராகவும் வெற்றியைப் பெறுவான் என்று தன் மகனை வாழ்த்தினார் ஏ.எம்.ரத்னம். விழாவில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் முரளிதரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், இயக்குனர்கள் கே.ஆர், தரணி, பேரரசு, தயாரிப்பாளர்கள் ஹென்றி, சேலம் சந்திரசேகரன், சிவா, சுவாமிநாதன், ஏ.எம்.ரத்னம், நடிகர்கள் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, பட்டிமன்றம் ராஜா, சிட்டிபாபு, நடிகைள் கீர்த்தி சாவ்லா, ப்ரீத்தி பண்டாரி, இசை அமைப்பாளர் சேகர் சந்திரா, குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் இயக்கத்தினர் தன்னை மிரட்டுவதாக நடிகர் கருணாஸ் கொடுத்த புகார் கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல, உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் கருணாஸின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு- தமிழக சிரிப்பு நடிகர் கருணாஸ் என்பவர் தன்னை நாம் தமிழர் இயக்கத்தினர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்களைக் கைது செய்யக்கோரியும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆகவே இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை நாம் தமிழர் இயக்கம் தெரிவிக்கின்றது. கொழும்பில் உள்ள சூரியன் எப்.எம்.ஆனது அங்குள்ள திமிந்தா டி.சில்வா என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தம்பியான ரய்னர் சில்வா என்பவரும் பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும். சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் இதன் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும் 3 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியை இம்மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்தது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து பலரை அழைத்த பொழுது அனைவரும் கலந்து கொள்ள மறுத்து விட்டனர். ஆனால் 10 லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு கலந்து கொள்ள சம்மதித்தவர் காமெடி நடிகர் கருணாஸ் ஆவார். இது தொடர்பாக அவருக்கு முன்பணம் 5 லட்சம் கொடுக்கப்பட்டு மீதத் தொகை நிகழ்ச்சி முடிந்த பின் வழங்கப்படுவதாக இருந்தது. இந் நிகழ்ச்சி தொடர்பாக அங்குள்ள வானொலியிலும் செய்தித்தாள்களிலும் கருணாஸ், அவரது மனைவியும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் புகழ் பாடகியுமான கிரேஸ் கருணாஸ், அங்காடித்தெரு சிரிப்பு நடிகர் பாண்டி ஆகியோர் கலந்து கொள்வது குறித்து விளம்பரமும் வந்தது. கருப்பு ஜூலை நினைவு தினம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் தீராத வேதனையை அளித்தது. இதன் தொடர்ச்சியாக தம்மைத் தமிழராய் உணர்ந்த அனைவரும் இதனை எதிர்த்தனர். இது தொடர்பாக நடிகர் கருணாஸ் அவர்களை தொலைபேசியில் அணுகி சில உணர்வாளர்கள் கேட்டதற்கு, தான் கோவிலுக்கு செல்ல இருப்பதாக சிலரிடமும், தான் நடிகன் எனக்கு ஜாதி, மதம், இல்லை எனக்கு அரசியல் தேவை இல்லை என்று சிலரிடமும், பணம் வாங்கி விட்டேன் இனி மறுக்க முடியாது என்று சிலரிடமும், தான் ஈழத்தமிழர்களுக்கு படிக்க உதவி செய்கின்றேன் என்று சிலரிடமும் முன்னுக்குப்பின் முரணான முறையில் பேசி இருக்கின்றார். ஆனால் தான் கொழும்பு செல்வது உறுதி என்றும் கூறி இருக்கின்றார். சிங்களனின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் அவர் பங்கு பெற இருப்பது குறித்து அனைவரிடமும் தீராத வேதனையைத் தந்தது. அவருடன் செல்வதாக இருந்த அங்காடித்தெரு நடிகர் பாண்டி மட்டும் தமிழ் உணர்வாளார்களின் வேண்டுகோளை ஏற்று கொழும்பு செல்லும் நிகழ்ச்சியை ரத்து செய்தார். இந்நிலையில் 24 சனி அன்று காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் அவருக்கும் அவரது மனைவி உட்பட 9 நபர்களுக்கும் விமானச்சீட்டு சிங்கள எப்.எம்.நிறுவனத்தால் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. சில முன்னணி இயக்குனர்களின் வேண்டுகோளை மீறியும் அவரது பயணம் உறுதியான நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து அவரிடம் தமிழர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய அவரிடமே முறையிட்டிருக்கலாம் என்று தெரிகின்றது. தனக்கு திரைப்பட வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் கனடா, அமெரிக்கா என்று ஈழத் தமிழர்களின் பணத்தில் பிழைப்பு நடத்திய கருணாஸ் இன்று சிங்களனின் வெற்றியைக் குறிக்கும் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க முனைந்துள்ளது மிகவும் வேதனையைத் தரும் ஒன்றாகும். அவரது இந்த இனத் துரோகச் செயலை தமிழர்கள் ஒரு பொழுதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இந்நிலையில் நேற்று காலை திடீரென்று சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். உண்மை வெளியான உடன் முன்னுக்குபின் முரணாக பேசுகின்றார். தமிழர்களுக்கு உதவி செய்வதாக அசினின் வழியில் தம்பட்டம் அடிக்கின்றார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றார். தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் நாம் தமிழர் இயக்கம் இது குறித்து அச்சம் கொள்ளாது. இதனை சட்டப்படி சந்திக்கும். தமிழர்களின் இனமானப் பணியில் தன்னைத் தொடர்ந்து அர்ப்பணிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரங்காலம் நெல்லுக்கு ஓர் அந்துப்பூச்சி!