முதல் பக்கம் » சினிமா » திரை விமர்சனம் » விண்ணைத்தாண்டி வருவாயா

Vinnaithandi Varuvaya Movie Review

விண்ணைத்தாண்டி வருவாயா

-

Vinnaithandi Varuvaya

Tamil Movie - Vinnaithandi Varuvaya Review - Antony Babu, Ganesh, Sathya, Simbu, Trisha, Manoj Paramahamsa, Gautham Menon, Antony, A.R. Rehman, Udayanidhi Stalin,  Tamil Movie Actor, Actress

இளமையின் அற்புதமான தருணங்களை உணர்ந்து ரசிக்க வைக்கும் அழகிய காதல் படம்.

மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டு, திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற துடிப்புடன் அலையும் இந்து பையன் சிம்பு. ஒரு ஐ.டி. துறையில் வேலை செய்யும் மலையாள கிறிஸ்தவ பெண் த்ரிஷா. கண்டிப்பான அப்பா, அம்மா, முரட்டு அண்ணனுடன் மேல் தளத்தில் வசிக்கும் த்ரிஷா மீது, கீழ்தளத்தில் வாடகைக்கு குடியிருக்கும் சிம்புவுக்கு காதல் ஏற்படுகிறது. முதலில் காதலை மறுத்து வரும் த்ரிஷா, சிம்புவின் உருக்கமான காதலால் உருகி காதல்கொள்கிறார். தீவிரகாதலர்களாய் மாறும் இவர்களுக்கு மதமும், இனமும் தடையாய் இருக்கிறது. இந்தத் தடையை காதலர்களால் தாண்ட முடிந்ததா, இல்லையா என்பதை ஒரு வித்தியாசமான திரைக்கதை மூலம் படத்தை முடித்திருக்கிறார் கௌதம் மேனன்.

அழகாய், அமைதியாய் நிதானமாய் நடித்திருக்கும் சிம்புவிற்கு ஸ்பெஷல் பாராட்டு! நடிப்பு, ஆக்ஷன் அழுகையை வெளிப்படுத்திய விதம் அருமை.

நடிப்பில் சிம்புவை மிஞ்சும் த்ரிஷா, அழகாக நேர்த்தியாய் நடித்திருக்கிறார். காதலை வெளிப்படுத்த குழம்புவதிலும், பெற்றோரை சமாளிப்பதிலும் சரி; அற்புதமான நடிப்பு. இருவரும் உண்மையான காதலர்களை நம் கண்முன் நினைவுபடுத்துகிறார்கள்.

இவர்கள் இருவர் தவிர படத்தில் கவரும் இன்னொரு நபர் ஒளிப்பதிவாளராக வரும் கணேஷ். இயல்பாக இவர் அடிக்கும் கமெண்ட்களுக்கு ரசித்து சிரிக்கிறது திரையரங்கு. கதாநாயகனுக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டு அலையும் நண்பர்களுக்குப் பதில் இவரை இணைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம். இவரது பணத்தில்தான் சிம்பு த்ரிஷாவைத் தேடி ஆலப்புழா செல்கிறார். அந்தவகையில் படத்தின் லாஜிக்குக்கும் உதவியிருக்கிறார்.

"உன்ன பசங்கள்ளாம் விரட்டு விரட்டுன்னு விரட்டியிருப்பானுங்களே..." சிம்பு கேட்க, "அவங்கள்ளாம் உன் கண்ணால என்னை பார்க்கலையோ, என்னவோ" என்று த்ரிஷா சொல்கிற வசனங்கள் அற்புதம். படம் நெடுக இப்படி கொட்டிக்கிடக்கின்றன கவிதைகள். ரகளைக்கும் பஞ்சமில்லை.

ஆண்டனி பாபு வழக்கமான காதலை எதிர்க்கும் அப்பா. அதேபோல் வழக்கமான ஒரு அண்ணனும் த்ரிஷாவுக்கு இருக்கிறார். தவிர்த்திருக்கலாம்.

சென்னைத்தமிழின் கொச்சை வார்த்தைகளும், இடைவேளைக்கு பின் படம் மெதுவாக நகர்வதையும் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவை படத்தை ரசிப்பதற்கு தடையல்ல.

கன்னா பின்னா கலாட்டாக்கள் இல்லாமல் அழகழகான காஸ்ட்யூம்கள். சிம்புவும் த்ரிஷாவும் ஸ்பெஷலாக நன்றி சொல்லலாம் நளினி ஸ்ரீராமுக்கு. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை. குறிப்பாக ஆலப்புழா காட்சிகள். ஒருமுறை தங்கி வரலாம் என்று யாரையும் ஆசைப்பட வைக்கும்.

எடிட்டர் ஆண்டனி படத்தின் இரண்டாம் பகுதியில் ரிலாக்ஸாக இருந்திருக்கிறார். கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். திரும்பத் திரும்ப ஒரே வசனத்தை சொல்வது எரிச்சல்.

ஏ.ஆர்.ரகுமான்-கௌதம் மேனன் கூட்டணி எடுத்த எடுப்பிலேயே இதயங்களைக் கொள்ளை கொள்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் புதிய வர்ணத்தையும், வார்த்தைகளால் சொல்ல முடியாத உற்சாகத்தையும் வாரி இறைக்கிறது ரகுமானின் இசை.
இவரின் இசையில் "ஹோசன்னா", "ஓமணப் பெண்ணே", "மன்னிப்பாயோ" உள்ளிட்ட ஏழு பாடல்களும் இதம். குறிப்பாக ஹோசன்னா பாடல் இதயத்துடிப்பை சில நொடிகள் நிறுத்துகிறது.

படத்திலேயே ஒரு படம் வருகிறது. அதையும், இதையும் மிக்ஸ் பண்ணியிருக்கிற விதத்தில் கொஞ்சம் அலட்சியம் தெரிகிறது. பக்கத்து சீட் ஆசாமியிடம் "டைம்" கேட்டு திரும்புகிற நேரத்தில் கதை புரியாமல் போய்விடுகிற அபாயம் இருக்கிறது. இரண்டு பேரும் ஒன்று சேர்ந்திட்டாங்களா என்ற கேள்வியோடு வெளியேறுகிறார்கள் பல ரசிகர்கள். தவிர்த்திருக்கலாமோ?

எளிமையான கதைக் கருவை அழகாக கையாண்ட கௌதமுக்கு சபாஷ்! அலுத்துப்போன ஆக்ஷன், மசாலா படங்களுக்கு இடையில் இளமைக்கால நினைவுகளை சில, நிமிடங்கள் திரும்பிப் பார்க்க வைத்ததற்காக பாராட்டலாம்!

நடிகர்கள்
சிலம்பரசன், த்ரிஷா, கணேஷ், ஆண்டனி பாபு, சத்யா,
இசை
ஏ.ஆர். ரகுமான்
இயக்கம்
கௌதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பு
உதயநிதி ஸ்டாலின்
Site Meter