முதல் பக்கம் » சினிமா » திரை விமர்சனம் » கழுகு

Kazhugu Movie Review

கழுகு

-

Kazhugu

Tamil Movie - Kazhugu Review - Jaya Prakash, Karunas, Krishna, Nellai Siva, Praveen, Thambi Ramiah, Bindhu Madhavi, Sujibala, Sathya, Sathyasiva, Yuvan Shankar Raja, K. K. Sekhar, K. S. Madhubala,  Tamil Movie Actor, Actress

மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் பிணங்களை மீட்கும், நான்கு பேரின் வாழ்க்கையை பற்றிய கதை.

ஹனிமூன் கொண்டாட மூணாறு செல்பவர்கள் உண்டு. இன்பச் சுற்றுலா செல்பவர்களும் உண்டு.. கணவரைக் கொலை செய்ய மனைவிகளும், மனைவியைக் கொலை செய்ய கணவன்களும், மனைவியின் கள்ளக் காதலனை கொலை செய்ய கணவர்மார்களும், கணவரின் கள்ளக்காதலியை கொலை செய்ய மனைவிமார்களும் மூணாறுக்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு.. இவர்களில்லாமல் எப்போதுமே மாதத்திற்கு ஒன்றாக தேடி வந்து விழுபவர்கள் காதலர்கள்தான்..!

இப்படி மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்பவர்களையும், கொலை செய்யப்படுவர்களையும் பிணமாகத் தூக்கி வரும் வேலையைச் செய்து வரும் கூட்டத்தில் ஹீரோவான கிருஷ்ணா, கருணாஸ், தம்பி ராமையா, மற்றொரு ஊமை கேரக்டரும் அடக்கம்..!

ஹீரோயின் பிந்து மாதவியின் தங்கை, தனது காதலனுடன் தற்கொலை செய்து கொள்ள.. அதில் ஹீரோயினின் தங்கையின் உடலை மட்டும் தேடியெடுத்து வருகிறார்கள். அதில் கவரப்பட்ட பிந்துவுக்கு ஹீரோவின் முரட்டு குணம், குடிகாரன் பட்டம் எல்லாம் வழக்கம்போல கவர்ந்துவிட ஹீரோவை லுக்கு விடுகிறார். அதற்குள்ளாக தங்கையின் உடலில் இருந்து உருவப்பட்ட மோதிரத்தையும், செயினையும் கிருஷ்ணா திருப்பிக் கொடுத்ததால் லுக்கு சைட்டாகி பின்பு லவ்வாகிவிடுகிறது.. இடையில் தேயிலை எஸ்டேட் முதலாளியான ஜெயப்பிரகாஷை ஒரு வழக்கில் இந்த டீம் சிக்க வைத்துவிட.. ஜெயப்பிரகாஷ் 1990 பட வில்லன் மாதிரி நான் வெளில வர்றதுக்குள்ள முடிச்சிரு என்று 4 பேருக்கும் சங்கு ஊதுகிறார்..! அது முடிந்ததா இல்லையா என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

'அலிபாபா', 'கற்றது களவு'க்கு பிறகு கிருஷ்ணா நடித்திருக்கும் 3-வது படம் இது. முடிந்த அளவுக்கு அவரது முகவெட்டுக்கு ஏற்ற வேடம்தான் என்பதால் சமாளித்திருக்கிறார்..! லவ்வுன்னா என்னன்னுகூட தெரியாத அப்பாவி என்ற ஸ்கெட்ச்சுதான் கொஞ்சம் ஓவரா இருக்கு.. எப்பவும் பீடியை வலித்துக் கொண்டு ஒரே பாவனையுடன் இருப்பது கொஞ்சம் சலிப்புத் தட்டுகிறது..!

ஏதோ பிந்து மாதவி இருப்பதால் பாடல் காட்சிகளில் ஒரு அட்ராக்ஷன் இருக்கு..! ஆனாலும் பல காட்சிகளில் முணுக்கென்றால் அழுக வைப்பது போல் நடிக்க வைத்திருப்பது சகிக்கவில்லை..! தங்கையிடம் கொடுத்த மோதிரத்தை கிருஷ்ணாவின் கையில் பார்த்தவுடன் அதில் தனது தலையை வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் போகும் அந்தக் காட்சி ஒரு கிளாஸ்..! பிந்துவின் திரும்பிப் பார்க்கும் அந்த ஷாட் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.. விபத்தில் சிக்கியது கிருஷ்ணாதானோ என்றெண்ணி அவருடைய பதட்டமும், ஓட்டமும், கடைசியில் அவரைப் பார்த்தவுடன் காட்டும் ஆக்சனும் அருமை..! கேமிராவும், இயக்கமும் ஏதோ ஒன்றைச் செய்கின்ற இந்த ஒரு இடத்தில். கிருஷ்ணாவின் மன மாற்றத்தை உண்டாக்கியது இதுதான் என்பதால் கனகச்சிதம்..! பிந்துவுக்கு இன்னும் சிறந்த இயக்குநர்கள் கிடைத்து ஒரு ரவுண்ட்டு வந்தால்,

படத்தில் பெரும்பாலான நேரங்களில் பேசிக் கொண்டேயிருப்பவர்கள் கருணாஸூம், தம்பி ராமையாவும்தான். மிகச் சில இடங்களில் கொஞ்சமே கொஞ்சம் நகைச்சுவை இருக்கிறது. மற்றபடி நத்திங் ஸ்பெஷல். ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல. சுஜிபாலா குண்டடித்திருக்கிறார்.

இந்த நால்வர் கூட்டணியில் கடைசி ஆள் ஊமை என்பதே இடைவேளைக்கு பின்புதான் தெரிகிறது..! இந்த சஸ்பென்ஸ் எதற்கும் உதவவில்லை என்பது சோகம்தான்..! தங்களுக்கு உதவியாக இருப்பவர்களையே போலீஸ் ஸ்டேஷனில் வைத்து வெளுத்துக் கட்டுவதும், இன்ஸ்பெக்டர் அவர்களைவிடச் சொல்லும் காரணமும் ஏற்கக் கூடியதே.. தொடர்ச்சியான காட்சிகளில் போலீஸ் திருடன் விளையாட்டு மாதிரி இருவரும் ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வதெல்லாம் ஏக பொருத்தம்தான்..!

ஜெயப்பிரகாஷ் போலீஸ் ஸ்டேஷனில் கையொப்பமிடும் அளவுக்கு குற்றவாளியாக இருக்கிறார் என்பதை முதல் காட்சிலேயே பதிவு செய்யும் இயக்குநர், அவர் மீதான பார்வையை அழுத்தமாக பதிவு செய்யவில்லை..! கடத்தல் தொழில் செய்பவராக இருக்கட்டும்..! லோக்கல் போலீஸூக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை என்பது தனுஷ்கோடியில் இருப்பவனுக்குத் தெரியும்.. அப்படியிருக்க.. ஏதோ அவர் யாருக்குமே தெரியாமல் செய்கிறார் என்பது போல் காட்டி படத்தின் முடிவுக்கு அவரை பயன்படுத்திருப்பது வீண்!

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒளிப்பதிவுதான்.. மூணாறு என்பதால் இயற்கை தந்த அழகோடு, கேமிராமேன் சத்யா படமாக்கிய விதமும் காட்சிக்கு காட்சி கவிதையாக இருக்கிறது..! இப்போது வரக்கூடிய அனைத்து படங்களிலுமே ஒளிப்பதிவை ரம்மியமாகத்தான் செய்து வைக்கிறார்கள். ஆனால் கதையில்..? இசை யுவன்சங்கர்ராஜா...! 'ஆத்தாடி மனசு'தான் பாடலும், 'பாதகத்தி கண்ணுபட்டு' பாடலும் கண்ணைத் தொடுகின்றன..! பாடல் காட்சியிலேயே காதல் காட்சிகளை வரிசைப்படுத்தி கொண்டு சென்று கொஞ்சம் மூச்சுவிட வைத்திருக்கிறார் இயக்குநர்..!

இப்போதைய டிரெண்ட்டில் படம் ஜெயிக்க வேண்டும். அதற்கு காதல் தேவை.. நண்பர்கள் தேவை.. சிறந்த ஒளிப்பதிவும், பாடல்களும் தேவை.. ஆனால் இதையும் தாண்டிய ஏதோ ஒன்று தேவை.. அது மனதிற்குள் படத்தை பதிய வைக்க இருந்த இடங்களிலெல்லாம் நகைச்சுவை போல தாவிச் செல்வது படத்தின் மிகப் பெரிய மைனஸ்.

எழுந்திரிக்க முடியாமல் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் கிருஷ்ணா ஒரு கப் தண்ணி பட்டவுடன் டி.ராஜேந்தர் அளவுக்குத் தெளிவாக, தெனாவெட்டாக பேசுவதெல்லாம் ஒட்டவேயில்லை.. அதேபோல் காரணமேயில்லாமல் பிந்துவிடம் முதலில் அலட்டிக் கொள்வதும், பின்பு நண்பர்களின் நிலைமை பார்த்து உடனுக்குடன் ஆவேசப்படுவதும் படத்தை முடிக்கும் அவசரத்தில் திரைக்கதை இருப்பதுபோல் தெரிகிறது..!

இயக்குநர் சத்யசிவா, எடுத்துக் கொண்ட கதைக்களத்தை திரையில் கொண்டு வர ப்ரயத்தனப்பட்டிருக்கிறார். ஆனால், திரைக்கதை அசுவாரஸ்யத்தால் ஒட்டாமல் போய்விடுகிறது. மூவாயிரம் நாலாயிரம் அடி பள்ளத்தில் இறங்க ஒரு பத்து அடி கயிற்றை எடுத்துக் கொண்டு போனால் போதுமா? அதுவும் ஒரே ஒருவர்?. அம்மாம் பெரிய பள்ளத்தில் இறங்கி ஏறுபவர்களை ஏதோ நடுக்காட்டில் மிகச் சுலபமாய் நடந்து போவதைப் போலவே காட்டியிருப்பதால் அத்தொழிலில் உள்ள பிரச்சினையை நமக்குள் விதைக்காமல் போய்விடுகிறார்.

நல்ல விஷயம் என்று சொல்லப்போனால் வித்தியாசமான கதைக்களன், முயன்றவரை கமர்ஷியலாய் சொல்லவந்த முயற்சி போன்றவற்றைத் தவிர ப்ளஸ்ஸாய் ஏதுமில்லை.

கழுகு - உயரப் பறக்காது...!

நடிகர்கள்
கிருஷ்ணா, பிந்து மாதவி, கருணாஸ், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ், சுஜிபாலா, பிரவீன், நெல்லை சிவா
இசை
யுவன்சங்கர்ராஜா
இயக்கம்
சத்யசிவா
தயாரிப்பு
கே.கே.சேகர், கே.எஸ்.மதுபாலா
Your Ad Here
Site Meter