குற்றால அருவியில் குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு கலெக்டரின் டிரைவராக பணி!

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் 50 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த 4 வயது சிறுமியை துணிச்சலாக காப்பாற்றிய கார் டிரைவர் விஜயகுமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கார் டிரைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் அருவி சீசன் தொடங்கும். தொடர்ந்து 6 மாதங்கள் தண்ணீர் கொட்டும். இடையில் மழை இல்லாத மாதங்களில் தண்ணீர் இருக்காது. எனினும் மழை அதிகமாக பெய்யும் இந்த 6 மாத காலத்தில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் நன்றாகக் கொட்டும். அந்த சீசனில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குளிக்க வருவார்கள். அப்படித்தான் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி, கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் குற்றாலத்துக்குக் குளிப்பதற்காக வந்தார்கள். அவர்கள் பழைய குற்றாலத்தில் குளிக்க சென்றிருக்கிறார்கள். கிருஷ்ணன் தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அருவியில் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அவர்களது 4 வயது மகள் ஹரிணி, தண்ணீரைப் பார்த்ததும் ஆர்வத்தில் அருவியின் முன்புறமுள்ள சிறிய தடாகத்தில் இறங்கி இருக்கிறார். அப்போது தண்ணீரின் இழுவை வேகம் அதிகமாக இருந்தது. இதனால் சிறுமி ஹரிணி தடாகத்திலிருந்து ஆற்றினுள் தண்ணீர் விழுவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாய் வழியாக விழுந்தார். தொடர்ந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து கூச்சலிட்ட மக்கள் தடாகத்தின் அருகில் சிறுமியை பிடித்து தூக்க முயற்சித்தார்கள் ஆனால், அதற்குள் 50 அடி ஆழமுடைய பள்ளத்தில் தூக்கி விசப்பட்டு ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார்.

மக்களின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கு வந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் கார் டிரைவர் விஜயகுமார், சற்றும் யோசிக்காமல் 50 அடி ஆழப் பள்ளத்தில் துணிச்சலுடன் இறங்கினார். ஆற்றுக்குள் வெள்ளத்திற்கு நடுவே வேகமாக சென்ற விஜயக்குமார் சிறுமி ஹரிணியை பத்திரமாக மீட்டார். இந்த விபத்தில் லேசான காயத்துடன் சிறுமி உயிர் தப்பினார். சிறுமியைக் காப்பாற்றிய கார் டிரைவர் விஜயகுமாருக்கு பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். சுற்றியிருந்த பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.

இதனிடையே கார் டிரைவர் விஜயக்குமார், ஆற்றில் விழுந்த சிறுமியை துணிச்சலுடன் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் விஜயக்குமார் பலராலும் பாராட்டப்பட்டார். இதனையடுத்து விஜயகுமாரை நேரில் அழைத்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மணிகண்டன் வசிக்கும் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ மார்கண்டேயனும் பாராட்டினார். இதனிடையே பாராட்டுடன், வேலையும் கொடுத்தார் கலெக்டர் செந்தில்ராஜ். ஆரம்பத்தில் விஜயகுமாருக்கு சிப்காட் நில அளவை பிரிவில் தற்காலிக ஓட்டுநர் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கி இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்காலி பணி என்ற அடிப்படையில் அவருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.