"அரசு உயர் அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணத்தை சிறுவயது முதலே அப்பா எனக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தார். அதை இன்று நனவாக்கியிருக்கிறேன்!" -பெருமிதமாகப் பேசுகிறார், கீர்த்தி பிரியதர்ஷினி.
பெயருக்கேற்ப புகழ் பெற்றிருக்கிறார் இந்த இளம்பெண். தமிழக அரசு 'குரூப் 1' தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று டெபுடி கலெக்டர் ஆகியிருக்கிறார்.
நிதானமாக, அதேநேரம் தெளிவும், தீர்க்கமுமாகப் பேசும் கீர்த்தியின் பேட்டி...
உங்களைப் பற்றி ஓர் அறிமுகம்...
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி எங்கள் பூர்வீகம். அப்பா ராமர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கணக்குப் பிரிவில் உதவி மேலாளர், அம்மா அமுதா, திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர் மேனிலைப் பள்ளி தலைமையாசிரியை. தம்பி சிவகைலாஷ் கவுதம் பொறியியல் இரண்டாமாண்டு படிக்கிறார். நான் வளர்ந்தது, பள்ளிப் படிப்பை முடித்தது எல்லாம் திண்டுக்கல்லில்தான். பின், ஈரோட்டில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் ரோடு அண்ட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜியில் மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல் படித்தேன்.
அரசு உயர் அதிகாரி கனவு விதை உங்களுக்குள் விழுந்தது எப்போது?
இரண்டாவது வகுப்பு படிக்கும்போதே என்று கூறலாம். அரசு உயர் அதிகாரிகளுக்கு கிடைக்கும் சமூக கவுரவம், மரியாதை, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் விதம், அதில் வெற்றி பெற்றோர் குறித்து அப்பா எனக்கு அவ்வப்போது கூறி ஊக்குவித்துக் கொண்டே இருப்பார். எனவே, ஏறக்குறைய பள்ளிப் படிப்பை ஆரம்பித்த நாள் முதலே நான் இத்தேர்வுக்கு மனதளவில் தயாராகிவந்தேன் என்று கூறலாம்.
ஆரம்பம் முதலே நீங்கள் போட்டித் தேர்வுக்கு எவ்வாறு தயாரானீர்கள்?
தினம் தவறாமல் செய்தித்தாள் படிப்பேன். அதில் வரும் விஷயங்கள் குறித்து அப்பாவுடன் விவாதம் செய்வேன். சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்துகொள்வேன். எனது பொது அறிவைச் சோதித்துக்கொள்ளும் விதமாக வினாடி-வினா போட்டிகளில் பங்கேற்றேன். பொதுநலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு மேடையேறி பேச்சுப் போட்டிகளில் பேசினேன். அதன் மூலம் மேடைப் பயத்தைப் போக்கி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன். எனது சேவை எண்ணத்துக்கு, டெபுடி கலெக்டர் பதவி உறுதுணையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
சேவை செய்வதற்கு அரசுப் பதவிதான் தேவை என்பதில்லையே?
அது சரிதான். ஆனால் ஒரு தனிநபராக என்னால் சிலருக்கு மட்டுமே உதவி செய்ய முடியும். ஆனால் அரசு பதவி அதிகாரமும், வாய்ப்பும் இருந்தால் என்னுடைய சேவை எல்லை விரிவாகுமே? அரசின் உதவிக்கரங்கள் நீள வேண்டிய இடங்கள் இன்னும் எத்தனையோ உள்ளன. அதையெல்லாம் எட்ட நினைக்கிறேன்.
'குரூப் 1' தேர்வுக்கு நீங்கள் முழுமூச்சாகத் தயாரானது எவ்வளவு காலம்?
சரியாக ஒன்றரை ஆண்டுகளில் இதைச் சாதித்திருக்கிறேன். முதல் முயற்சியிலேயே, அதுவும் மாநில அளவில் மூன்றாவது 'ரேங்கிலும்,' பெண்களில் முதலிடத்திலும் தேர்வானது எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. தன்னம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது.
இந்த ஒன்றரை ஆண்டுகாலம் நீங்கள் தனியாகத் தயாரானீர்களா அல்லது பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தீர்களா?
சென்னையில் உள்ள மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகம் பற்றிக் கேள்விப்பட்டு, இங்கு வந்து விடுதியில் தங்கிப் படித்தேன். எங்கள் 'பேட்ச்'சில் 61 பேர் பயிற்சி பெற்றோம். அவர்களில் இளவயதுப் பெண் நான்தான்.
இந்த மையத்தில் பெற்ற பயிற்சி எந்த வகையில் உங்களுக்கு உதவியாக இருந்தது?
அரசு உயர் அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணம், அதற்கான பொதுவான தயாரிப்பு என்னிடம் இருந்ததே தவிர ஒரு தெளிவான திட்டமில்லை. என்னை முறைப்படுத்தி, எனது இலக்கு நோக்கிச் செலுத்தியது மனிதநேயம் கல்வியகம்தான். இங்கு பயிற்சிக்கும் மேலாக, ஒரு நேர்மையான, மனிதாபிமானமுள்ள மனிதராகத் திகழ்வது எப்படி என்று போதித்தார்கள். அதை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். நான் முதிர்ச்சி பெற்றிருப்பதையும், பிறருடன் இயைந்து போகும் தன்மை அதிகரித்திருப்பதையும் நானே உணர்கிறேன்.
புத்தகங்கள் அன்றி, வேறு எந்த வகையில் உங்களுக்கு உதவி கிடைத்தது?
மாதிரி நேர்முகங்கள் நடத்தப்பட்டு, எவ்வாறு நிஜமான நேர்முகத்தை எதிர்கொள்வது என்று விளக்கப்பட்டது. ஆளுமைத் திறன், தொடர்புத் திறனை வளர்த்துக்கொள்வது குறித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் விளக்கம் அளித்தார்கள். ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வென்ற சீனியர்கள் ஆலோசனை கூறினார்கள். பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வை நம்பிக்கையோடு எதிர்கொண்டேன். அதேமாதிரி வென்றேன்.
ஓர் அரசு அதிகாரியாக நீங்கள் எப்படி இருப்பீர்கள்?
அரசு அலுவலகங்கள் சாதாரண மனிதர்கள் நுழைய முடியாத இரும்புக் கோட்டையாக இருக்கக் கூடாது என்பது எண்ணம். அரசு உதவி நாடி வரும் அடித்தட்டு மக்களையும் பரிவோடு அணுகி உரிய ஆவன செய்வேன். என்றும் தவறாது நேர்மை காப்பேன்.
உங்களுக்குப் பிடித்த அரசு உயர் அதிகாரிகள்...?
சாந்தாஷீலா நாயர், மதுரை கலெக்டர் சகாயம் போன்றோர். இவர்கள்தான் எனக்கு 'இன்ஸ்பிரேஷன்'. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் துணிவும், தைரியமும் பிடிக்கும். இவர்களைப் போல மக்கள் சேவைப் பணியில் மங்காத தைரியத்துடன் பீடுநடை போடுவேன்.
உங்களின் இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார், யார்?
என் மீது நம்பிக்கை வைத்து ஊக்குவித்த அம்மா- அப்பா, தந்தை ஸ்தானத்தில் இருந்து வழிகாட்டிய மனிதநேயம் கல்வியகத்தின் இயக்குநர் சைதை சா. துரைசாமி, தேவையான உதவிகளை அளித்த ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன், போட்டித் தேர்வு விஷயங்களை எடுத்துக் கூறி தூண்டுகோலாய் இருந்த பெரியப்பா ராஜசங்கரன், 'பிறந்தா ஏதாவது சாதிக்கணும்' என்று சொல்லிச் சொல்லி மாரல் சப்போர்ட்டாய் இருந்த பாட்டி ராஜேஸ்வரி ஆகியோர்தான் எனது வெற்றியின் பின்னணி.
போட்டித் தேர்வில் வெல்ல நினைக்கும் இளைய சமுதாயத்துக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை?
எந்த ஒரு விஷயம் தொடர்பாகவும் ஒரு தெளிவான ஐடியாவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பொது அறிவு, தொடர்புத்திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆளுமையை மேம்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் திறனை தெளிவாக மதிப்பிட்டுக் கொண்டு பயணத்தைத் தொடங்குங்கள்.
உங்களின் வெற்றி ரகசியங்கள்...
கடின, புத்திசாலித்தனமான உழைப்பு
அர்ப்பணிப்பு
இலக்கில் கவனம்
பொறுப்புணர்வு
பயிற்சிமையப் பயிற்சி
குடும்ப உறுதுணை
படிப்பு, பயிற்சி என்று இருக்கும்போது உங்களை எப்படி 'ரிலாக்ஸ்' செய்துகொண்டீர்கள்?
நான் பரதநாட்டியம், கர்நாடக இசை கற்றிருக்கிறேன். என்னை 'ரிலாக்ஸ்' செய்வதும், சக்தி அளிப்பதும் அவைதான்.
விடைபெறும் முன், சின்னாளப்பட்டியில் இருந்துவந்து சாதனையாளர் ஆகியிருக்கிறீர்கள். உங்களைப் போல கிராமப்புறங்களில் இருந்து போட்டித் தேர்வுக் களத்துக்கு வரும் இளைஞர், இளைஞிகளுக்கு வழிகாட்டுவீர்களா என்று கேட்டோம்...
"நிச்சயமாக... அது எனது கடமை!" என்றார் கீர்த்தி, வெகு நேர்த்தியாய்.












