சதுரங்கப் பலகையில் சாதிக்கும் சாதனைப் பெண் பாரதி!

கூடல் - 17 April, 2010
Chess champion Bharathy achieves sucess on Chess Board! - Successful Stories of Women in Tamil

துறுதுறுவென்று ஓரிடத்தில் ஒரு நொடி கூட உட்காராமல் ஓடிக் கொண்டே இருக்கிறாள் அச்சிறுமி. அவளைச் சிறிது நேரமாவது ஓரிடத்தில் உட்கார வைக்க அவள் முன் சதுரங்கப் பலகையை வைக்கிறார்கள் அவளது பெற்றோர்.

இப்படி விளையாட்டாக ஆரம்பித்ததுதான் பாரதியின் செஸ் விளையாட்டு வாழ்க்கை. இன்று தேசிய சாம்பியனாக உயர்ந்து நிற்கிறார் இவர். இந்தியா சார்பில் வெளிநாடுகளிலும் சென்று விளையாடி வருகிறார்.

பதினோராம் வகுப்பு மாணவியான பாரதியை சந்தித்தபோது,

"சின்ன வயதில் செஸ் என்றில்லை, எனக்கு எதிலெல்லாம் ஆர்வமோ அவற்றில் எல்லாம் இறக்கிவிட்டனர் எனது பெற்றோர். நான் ஸ்கேட்டிங் கற்றேன், நீச்சலடித்தேன், பரத நாட்டியம் பயின்றேன்... ஆனால் எல்லாவற்றிலும் தற்போது எஞ்சி நிற்பது செஸ்தான். அதில் நான் சிறப்பாகவே செயல்படுகிறேன் என்பதில் எனது பெற்றோருக்கு மிக்க மகிழ்ச்சி.

ஆறு வயதில் செஸ் விளையாடத் தொடங்கிய நான், போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கியபோது இரண்டு, மூன்றாவது இடங்களைப் பெற்றேன். அப்போதுதான் எனக்குள் இருந்த செஸ் திறமை தெரிய வந்தது. செஸ் பயிற்சியாளர் சுந்தர்ராஜன் எனது திறமையைப் பார்த்துவிட்டு, நன்கு கவனம் செலுத்தினால் செஸ்சில் நிறைய சாதிக்கலாம் என்று கூறி எனக்குப் பயிற்சியளித்தார்.

தொடர்ந்து, மாவட்ட அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்றேன். மாநில அளவிலான போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க இடங்களைப் பெற்றேன்.

கடந்த 2007-ஆம் ஆண்டு மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட மகளிர் விரைவு செஸ் போட்டியில் முதலாம் இடம் பெற்றேன். அதே ஆண்டு மகளிர் "சப்- ஜூனியர்" போட்டியில் பட்டம் வென்றேன். 2007-ஆம் ஆண்டிலேயே 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் என்னை விட பல வயது மூத்த வீராங்கனைகளுடன் போட்டியிட்டு இரண்டாவது இடம் பெற்றேன். 2009-ஆம் ஆண்டு மாநில போட்டியிலும் 2-வது இடம் கிடைத்தது. மேலும் பல மாநில அளவிலான போட்டிகளில் மூன்றாவது இடம் பெற்றிருக்கிறேன்.

தேசிய அளவில் பார்த்தால், கடந்த 2008-ஆம் ஆண்டு தேசிய சப்-ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றேன். 2006-ல் 13 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய போட்டியில் ஐந்தாவது இடமும், 2008-ல் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தேசிய போட்டியில் நான்காவது இடமும் பெற்றேன்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இரு தேசிய போட்டிகளில் மூன்றாவது, நான்காவது இடங்களைப் பெற்றேன். செஸ் போட்டி நடைபெறும் நாட்களுக்கு முன்பிருந்தே அதே கவனத்தில் இருக்க வேண்டும். கொஞ்சம் "ரிலாக்ஸாக" இருந்து அரைப் புள்ளி அளவுக்குக் குறைந்தாலும் இடங்கள் தாழ்ந்துவிடும்.

தேசியப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம், வெளிநாடுகளில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

கடந்த 2008-ஆம் ஆண்டில், பெண்களுக்கான நான்காவது ஆசிய குழந்தைகள் சர்வதேச விளையாட்டு மற்றும் சதுரங்கப் போட்டி ரஷ்யாவின் யாகுட்ஸ்க்கில் நடைபெற்றது. அதில் வெண்கலப் பதக்கத்தைத் தட்டி வந்தேன். கடந்த 2008-ஆம் ஆண்டு ஆசிய ஜூனியர் செஸ் போட்டியில் பங்கேற்றேன்.

கடந்த ஆண்டு ஸ்பெயினின் பெனாஸ்கினிவில் நடைபெற்ற சர்வதேச ஓபன் போட்டியில் "சிறந்த சதுரங்க வீராங்கனை", "சிறந்த ரேட்டட் பிளேயர்" ஆகத் தேர்வு பெற்றதுடன், "மகளிர் சர்வதேச மாஸ்டர்" ("டபிள்யூ.ஐ.எம்.) நார்ம்-மும் பெற்றேன். கடந்த ஆண்டிலேயே நடைபெற்ற இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் நான் பங்கேற்ற இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

எனது பின்னணியாக பெற்றோர் (அப்பா ராமராஜ், ஐ.சி.எப். பொறியாளர், அம்மா உஷா ரிசர்வ் வங்கி அதிகாரி) இருந்து உறுதுணையாகச் செயல்படுவதால்தான் என்னால் இந்தளவு வெற்றிகளைப் பெற முடிகிறது. அம்மா- அப்பா இருவரும் பணிபுரிபவர்களாக இருந்தாலும் எனக்காக முடிந்தளவு நேரம் ஒதுக்கி, போட்டிகளின்போது விடுப்பு எடுத்து கூடவே இருந்து ஊக்குவித்திருக்கிறார்கள். தாத்தா, பாட்டி காலமான வேளைகளில் நாங்கள் குடும்பத்துடன் போட்டிக்காக தொலைதூர இடங்களில் இருந்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நான் தற்போது பயிலும் முகப்பேர் வேலம்மாள் பள்ளியிலும் நல்ல ஊக்கம், உதவியும், சலுகைகளும் அளித்து வருகிறார்கள். தொடக்கத்தில் எனக்குப் பயிற்சியளித்த பயிற்சியாளர் சுந்தர்ராஜன், தற்போது பயிற்சி அளிக்கும் கணேசன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் நடைபெற்ற தேசிய சதுரங்கப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றில் "டபிள்யூ.ஜி.எம்" கிருத்திகா நாடியை வென்றதை நான் முக்கியமான வெற்றியாகக் கருதுகிறேன்.

எனக்குப் பிடித்த சர்வதேச சதுரங்க வீரர்கள், உலக சாம்பியன்களான அமெரிக்காவின் பிஷர், ரஷ்யாவின் பெட்ரோசியன் ஆகியோர். பிஷரின் கடைசி வரை போராடும் உறுதியும், எல்லா பாணிகளிலும் ஆடும் திறனும் எனக்குப் பிடிக்கும். மெதுவாக வியூகத்தை வலுப்படுத்தி எதிராளியை வீழ்த்தும் பெட்ரோசினின் திறமை பிடிக்கும்.

இந்திய வீரர்களைப் பொறுத்தவரை கேட்கவே வேண்டியதில்லை, விஸ்வநாதன் ஆனந்துதான். ஒரு முறை அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதை பெறும் பேறாகக் கருதுகிறேன். பிடித்த இந்திய வீராங்கனை ஹரிக்கா. நம் நாட்டின் ஹம்பி போல அடுத்த 5 ஆண்டுகளில் "ஜி.எம்" ஆக வேண்டும்.

விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்தாலும், படிப்பிலும் கோட்டை விட்டு விடாமல் இருக்கிறேன். 9-ம் வகுப்பு வரை பள்ளி முதல் மாணவி நான்தான். கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வில் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றேன். வழக்கமான துறைகள் என்றில்லாமல், "நானோ டெக்னாலஜி", "ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்" போன்ற ஒன்றில் மேல்படிப்புப் பயில விரும்புகிறேன்.

செஸ் எனக்கு ஏழாவது பாடம் போன்றதுதான். அதை நான் கூடுதலாக நினைப்பதில்லை. அது தவிர, ஸ்கேட்டிங்கில் 6 வயதில் மாந’ல சாம்பியனாகி இருக்கிறேன். செஸ்சில் கவனம் செலுத்துவதற்காக அதை விட்டேன். நீச்சல் நன்கு தெரியும். பரதநாட்டியம் எனக்கு நல்ல உடற்பயிற்சியாகவும், ரிலாக்ஸ் செய்யும் விஷயமாகவும் இருக்கிறது. சென்னையின் பிரபல சபாக்களில் ஆடியிருக்கிறேன்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகள் எழுதப் படிக்கத் தெரியும். பொழுதுபோக்குகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. அதனால்தான் இந்த நிலையை எட்டியிருப்பதாக நினைக்கிறேன். எனது அதிகபட்ச பொழுதுபோக்கு, அவ்வப்போது கொஞ்ச நேரம் இசை கேட்பதும், புத்தகம் வாசிப்பதும்தான்.

போட்டிகளுக்கு முன் "என்னால் இது முடியும்... நான் ஒரு சாம்பியன்" என்று பத்து முறை எழுதுவேன். அது எனக்குள் சக்தியைப் பாய்ச்சும். "அனைத்து சக்தியும் உனக்குள்ளே இருக்கிறது. உன்னால் எதையும், எல்லாவற்றையும் சாதிக்க முடியும். அதில் நம்பிக்கை கொள்" என்ற விவேகானந்தரின் வாசகமே எனது தாரக மந்திரம். அதன்படி சாதித்துக் காட்டுவேன்!" புன்னகை மாறாத முகத்துடன் முடிக்கிறார் பாரதி.


சாதனைப் பெண்கள்