பாஜகவுடன் கூட்டணி என முடிச்சு போடுவது அர்த்தமற்றது: கனிமொழி எம்பி

தமிழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். அதற்குள், பாஜகவுடன் கூட்டணி என முடிச்சு போடுவது அர்த்தமற்றது என, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்து உள்ளார்.

சென்னை ராணி மேரி கல்லூரியில், மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம், திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:-

நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் மத்திய அரசு தவறான நடவடிக்கையாக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாங்கள் போராட்டத்தில் பின்வாங்கப் போவதில்லை.

தமிழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். முதலமைச்சர் பிரதமரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை வைத்து கட்சியின் நிலைப்பாட்டை சந்தேகிப்பதா? இதை வைத்து பாஜகவுடன் கூட்டணி என முடிச்சுப் போடுவது அர்த்தமில்லாதது. 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மூலம் உலக நாடுகளின் கவனம் தமிழகம் பக்கம் திருப்பி இருக்கிறது. இதனால் தொழில் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.