புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழக அரசு காயமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சரும், அதிகாரிகளும், திருக்கோயில் தேர்களின் தரத்தை பரிசோதிக்க வேண்டிய பொதுப்பணித் துறையினரும், இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசின், அக்கறையற்ற, மெத்தனப் போக்கினால் தான் தேர்களின் விபத்தும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் திருக்கோயில் தேர் திருவிழாவின்போது, தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது கவலை அளிக்கிறது.
தமிழக மக்கள் பெருவாரியாக கூடும் ஆன்மீக திருவிழாக்களில் அதிலும் குறிப்பாக தேர் திருவிழாக்களில் இந்துசமய அறநிலையத்துறை எடுக்க வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க தொடர்ந்து தவறி வருகிறது. திருக்கோவில் வருமானம் மீது தீவிர அக்கறை காட்டி வரும் தமிழக அரசு சொத்துக்களைப் பராமரிப்பதில் காட்ட தொடர்ந்து தவறி வருவது இதன் மூலம் அப்பட்டமாக தெரிய வருகிறது. புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட தலைவர் செல்வன் அழகப்பன் காயமடைந்த சகோதர, சகோதரிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து நேரில் விசாரித்தபோது, பொதுப் பணித்துறை தேரின் நிலை குறித்து நற்சான்றிதழ் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அச்சு முறிந்து கவிழ்ந்து விபத்து ஏற்படும் நிலையில் இருந்த தேருக்கு மாநில பொதுப்பணித் துறை எப்படி நற்சான்றிதழ் கொடுத்தது என்ற விபரம் புரியவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கும், அமைச்சர் காட்டும் அலட்சியமும், தி.மு.க. அரசின் திறனற்ற செயல்பாடும், இது போன்ற தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு காயமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.