அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறி இருக்கும் நிலையில், அவரை பழனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வருகின்றனர்.
பழனியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் அமெரிக்காவிற்கு சென்று உள்ளார். அமெரிக்காவில் பணி புரியும் தனது கணவருடன் சில காலம் இருந்துவிட்டு கடந்த வாரம் இந்தியா வந்துள்ளார். பழனிக்கு வந்த அந்தப் பெண் தஞ்சாவூரில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல விழாவிற்கு சென்று வந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் நான்கு தினங்கள் சிகிச்சையில் இருந்த நிலையில் பழனியில் உள்ள தனது வீட்டிற்கு உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணிற்கு கொரோனா மற்றும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பழனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணை பழனி சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அமெரிக்கா சென்று வந்த பெண்ணிற்கு பன்றிக்காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கேரள மாநிலத்தில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது பன்றிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழனிக்கு கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வரும் நிலையில் அவர்கள் மூலம் பன்றிக்காய்ச்சல் பரவியதா அல்லது அமெரிக்கா சென்ற போது பன்றிக்காய்ச்சல் பரவியதா எனவும், அவர் வசிக்கும் பகுதிகளில் வேறு யாருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்போ அல்லது அறிகுறிகளோ இருக்கிறதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.