அடித்தட்டு மக்களுக்கு உதவ மறுக்கிறது மத்திய அரசு: கனிமொழி

இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் மத்திய அரசு, சில தொழிலதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. முதல் நாள் முதலே அக்னிபாத் திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகியது. கடந்த இரு வாரங்களாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற அலுவல் பாதிக்கப்பட்டது.
இதனிடையே காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவர் குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் என இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் சூழல் இருந்தது.

இந்த நிலையில் இன்று கூடிய நாடாளுமன்றத்தில் மதியத்திற்கு பின் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் திமுக லோக் சபா உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:-

உணவுப்பொருட்களின் கடுமையான விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும், அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை. பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் மத்திய அரசு, சில தொழிலதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

சமையல் எண்ணெய் உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்கு உணவளிக்கவே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு வாங்கக் கூட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு தொழிலதிபர் மட்டும் உலகளவில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கார்ப்ரேட் தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கப்படும் அதேநேரத்தில், அடிப்படை மக்களுக்கு உதவ மறுக்கிறது இந்த அரசு. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணமதிப்பிழப்பு மூலம் கறுப்பு பணம் ஒழிந்துவிடும் என மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் கறுப்பு பணம் புழங்கி வருவது எப்படி. ஆகவே இதுநாள் வரை கறுப்பு பணம் ஒழிக்கப்படவே இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 50,000 சிறு, குறு தொழில் நிறுவங்கள் மூடப்பட்டுள்ளன. ஒற்றுமையின் சின்னத்தை உருவாக்கிவிட்டோம் என்று உலகம் முழுவதும் மார்தட்டிக் கொள்கிறீர்கள். ஆனால் மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களை பிரித்தாளுவது ஏன். இவ்வாறு கனிமொழி பேசினார்.