மேற்கு வங்கத்தில் 3ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில அமைச்சரவை வரும் 3 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை, ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், கடந்த மாத இறுதியில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதை அடுத்து, அவரது கட்சிப் பதவியை பறித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்தும் டிஸ்மிஸ் செய்தார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத்தில் புதிதாக ஏழு மாவட்டங்களை உருவாக்குவதென முடிவு செய்யப்பட்டது. மேலும், அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம், முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

மேற்கு வங்க மாநில அமைச்சரவை முற்றிலும் கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என தகவல் பரவி வருகிறது. இந்தத் தகவல் முற்றிலும் தவறானது. அப்படி எந்த திட்டமும் எங்களிடம் இல்லை. எனினும் அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். சுப்ரதா முகர்ஜி, சதன் பாண்டே ஆகிய அமைச்சர்களை கட்சி இழந்து விட்டது. பார்த்தா சாட்டர்ஜி சிறையில் உள்ளார். அதனால், அவர்கள் அனைவரின் பணியையும் கவனிக்க வேண்டி உள்ளது. இவற்றை தனியாக என்னால் கவனிப்பது என்பது சாத்தியமற்றது. அதனால், வரும் 3 ஆம் தேதி புதன்கிழமை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. அப்போது, 4 முதல் 5 பேர் புதுமுகங்களாக அமைச்சரவையில் இடம் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்க உள்ளதாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். தற்போதுள்ள 23 மாவட்டங்களுடன், புதிதாக ஏழு மாவட்டங்களை உருவாக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். சுந்தர்பன், இச்சிமதி, ராணாகாட், பிஷ்ணுபூர், ஜாங்கிபூர், பெஹ்ராம்பூர் மற்றும் ஒரு மாவட்டம் கூடுதலாக இடம் பெற உள்ளதாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.