தமிழர்களின் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கை அதிபராக பதவியேற்ற பின் ரணில் விக்கிரமசிங்கே தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையர்தான். நான் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருந்தாலும் இலங்கை குடிமகன் தான். இலங்கை இதுவரை எதிர்கொள்ளாத பொருளாதார பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வு காண அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுதல் அவசியமாகும்.
இலங்கையின் அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம் என கருதுகிறேன். இலங்கையில் அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்த விவாதங்களை தொடங்கி வைக்கிறோம். அனைவரும் இணைந்து பங்கேற்கக் கூடிய ஒரு அரசாங்கத்தின் மூலம் நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்ல முடியும். ஆகையால்தான் அனைத்து கட்சி அரசாங்கம் அவசியமானதாக கருதப்படுகிறது. இன்று மக்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்படும். மக்களின் முன் உள்ள எரிபொருட்கள் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை நிலைத்ததாக உருவெடுக்க செய்ய வேண்டும். இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மை ஆக்கப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு கிடைக்க உள்ளது. இலங்கை மீண்டும் அரிசி ஏற்றுமதி நாடாக உருவாகும். இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வருவார்கள். நமது தேசத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களின் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கப்பட வேண்டும். இதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஊழலை ஒழிக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது நாட்டுக்காக ஆற்றும் கடமை. அதனால்தான் சவாலை ஏற்றேன். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.