சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு பிரியங்கா ஆதரவு!

சஞ்சய் ராவத், சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது அமலாக்கத்துறை காவல் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது மனைவி வர்ஷா ராவத்திடம் விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது மராட்டிய மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் சஞ்சய் ராவத்துக்கும், அவரது குடும்பத்துக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப்பதிவில் அவர், “பா.ஜ.க.வின் ஒரே குறிக்கோள், அச்சுறுத்தல்கள், வஞ்சகம், ஜனநாயகத்தை நசுக்குதல் ஆகியவற்றின் மூலம் அதிகாரத்தை பறிப்பதுதான். சஞ்சய் ராவத்தும், அவரது குடும்பமும் குறிவைக்கப்படுவதின் காரணம், அவர் பா.ஜ.க.வின் வஞ்சக அரசியலுக்கு பயப்படுவதில்லை, அதை உறுதியுடன் எதிர்த்து போராடுகிறார் என்பதுதான். அச்சமும், பயமுறுத்துதலும் கோழைகளின் ஆயுதங்கள். அவை சத்தியத்தின் வலிமை முன் நிற்க முடியாது” என கூறி உள்ளார்.