டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற பவானியாவை பாராட்டிய கி.வீரமணி!

புதுக்கோட்டை மாவட்டத்தின் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த பவானியா, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்குத் தேர்வாகி உள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, கல்லூரியிலும் தமிழ் வழியில் படித்த கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவி பவானியா டிஎஸ்பி பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற சாதனைப் பெண் பவானியாவை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பலரும் பாராட்டி வருகின்றனர். பஸ் வசதி கூட இல்லாத குக்கிராமத்தில் பிறந்து டிஎஸ்பியாக பொறுப்பேற்கும் சாதனை பெண்.

கிராமத்து மாணவி பவானியா புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடவாளம் ஊராட்சியின் கிழக்கு செட்டியாப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரர் வீரமுத்துவின் மகள் பவானியா சமீபத்தில் குரூப் 1 முதன்மைத் தேர்வு எழுதினார். இவர் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகி உள்ளார். அடிப்படை வசதிகள் குறைந்த கிராமத்தில் வசித்து வந்தாலும், தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று டிஎஸ்பி-யாக பொறுப்பேற்க இருக்கிறார் பவானியா. பவானியாவையும் சேர்த்து அவரது பெற்றோருக்கு 4 பெண் குழந்தைகள். பவானியாவின் மூத்த சகோதரிகள் குடும்பச் சூழலால் படிப்பை நிறுத்திவிட்டு, திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையிலும், போராடி கல்லூரி படிப்பு வரை சென்றுள்ளார் பவனியா. இவர் தான் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ள பவானியாவுக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் மட்டுமல்லாது பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பவானியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வில், புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு செட்டியாப்பட்டியில் – எளிய குடும்பத்தைச் சார்ந்த பவானியா என்ற பெண், தமிழில் படித்து எந்தவித சிறப்பு வகுப்புகளுக்கும் செல்லாமல், தானே வகுப்பறையில் படித்து முன்னேறி, முதல் முயற்சியிலேயே நேரடியாக டி.எஸ்.பி ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது, அதுதான் சனாதன தர்மம் என்று கல்விக்குத் தடை போட்ட ஒரு சமூகத்தில், இப்படி ஒரு அரிய சாதனை செய்து, அறிவுக் கூர்மையும், அதனை மூலதனமாக்கிய உத்தியோகமும் அடைய எம்மால் முடியும் என்று காட்டிய பவானியாவிற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்று காட்டிய பவனியாக்களைப் போல, பலரும் கிராமம், தமிழ் வழி படிப்பு எதுவும் உயருவதற்கு எங்களுக்குத் தடையில்லை என்று காட்டியவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.