திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது: எடப்பாடிபழனிசாமி

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது என்று,சேலம் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டைத் தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்துகிறது. சேலத்தில் இன்று தொடங்கும் இந்த மாநாட்டை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

இதுபோன்ற மாநாடுகள் மூலம் தான் விவசாயிகள் அடையாளம் காணப்படுவார்கள். விவசாயிகளைக் காக்கும் இந்த மாநாட்டில் பல முக்கிய கோரிக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மானியத்தை நிறுத்திவிட்டு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுதேசி பொருட்களுக்கு மானியத்தை வழங்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி எத்தனால் பயன்பாடு தொடர்பான திட்டங்களை அறிவித்துள்ளார். எத்தனால் பயன்பாட்டையும் நாம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சார்ந்த தொழில் தொடங்க முன்னுரிமையும் அளிக்கப்பட உள்ளது. கரும்புச் சாறு மூலமே எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எனவே, இந்த திட்டம் சரியாகச் செயல்படுத்தப்பட்டால் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீ

விவசாயத்துக்குத் தண்ணீர் உயிரானது. நீர் மேலாண்மை தொடர்பாக விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. நீர் மேலாண்மைக்கு அதிமுக ஆட்சியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஏரி,குளத்தைக் குடிமராமத்து திட்டம் மூலம் தூர்வாரப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்பட்டது. அப்போது அள்ளப்படும் மணலை கூட விவசாயிகள் பயன்படுத்தலாம் என இலவசமாகவே கொடுத்தோம். இப்படிச் செய்ததன் மூலம் 600 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட வீணாக்காமல் நீரைச் சேகரித்தோம். வேளான் மக்களுக்குப் பிரச்சினை என்றால் முதலில் சென்று உதவுவது அதிமுக தான்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரைக் கோடையில் பயன்படுத்தத் தான் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தைக் கொண்டு வந்தோம். இதன் மூலம் சேலத்தில் இருக்கும் 100 ஏரிகள் நிரப்பப்பட்டு இருக்கும். இதற்கான பணிகள் அதிமுக ஆட்சியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இப்போது இந்தத் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மழைக் காலத்தைப் பயன்படுத்தி 100 ஏரிகள் நிரப்பி இருந்தால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிருக்கும். நிலத்தடி நீர்மட்டமும் கூட உயர்ந்து இருக்கும். அரசின் செயல்பாடுகள் ஆமை வேகத்தில் இருக்கிறது. இனியாவது இந்த அரசு தூங்கிக் கொண்டு இருக்காமல் துரிதமாகச் செயல்பட வேண்டும். நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து உபரிநீரை விவசாயிகளுக்குப் பயன்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமா அத்திக் கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களைக் கூட இந்த திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.