பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.

மமதா பானர்ஜி 4 நாட்கள் பயணமாக நேற்று டெல்லி வருகை தந்தார். டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார் மமதா பானர்ஜி. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான வியூகம் உள்ளிட்டவை தொடர்பாக எம்.பி.க்களுடன் மமதா ஆலோசித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவது குறித்தும் எம்.பி.க்களுடன் மமதா விவாதித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மமதா பானர்ஜி சந்தித்தார். இச்சந்திப்பின் போது, மேற்கு வங்க மாநிலத்துக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்டவை தொடர்பாக மமதா பேசியதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்புக்குப் பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மமதா பானர்ஜி நேரில் சந்திக்கிறார். திரவுபதி முர்மு, ஜனாதிபதியாக தேர்வான நிலையில் நடைபெறும் முதல் சந்திப்பு இது. இச்சந்திப்பின் போது திரவுபதி முர்முவுக்கு மமதா வாழ்த்து தெரிவிக்கிறார். மேலும் டெல்லியில் ஆகஸ்ட் 7-ந் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திலும் மமதா பானர்ஜி பங்கேற்க உள்ளார்.