பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் லால் சிங் சத்தா இந்தி திரைப்படத்தை திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நடித்து இருக்கும் லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்டு 11 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியிட உள்ளது. தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆமிர் கான், நாக சைதன்யா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினிடம், “இந்தியை எதிர்க்கும் தமிழ்நாட்டில், இந்தி படத்தை வெளியிடுவதால் வரும் எதிர்ப்புகளை எப்படி சந்திப்பீர்கள்?” என்று ஒரு செய்தியாளர் உதயநிதியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
இந்தி தெரியாது போடா என்பது எப்போதுமே இந்தி திணிப்புக்கு எதிரான ஒன்றுதான். இந்தி மொழியை கற்கக்கூடாது என்று நாம் எப்போதுமே சொன்னது கிடையாது. உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் அதை கற்றுக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் கட்டாயம் கற்க வேண்டும் என்று யாராது திணித்தால் அதை எதிர்க்க வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. இது ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் இந்தி திரைப்படம். எனக்கு அமீர் கானின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். அவருடைய அனைத்து படங்களையும் பார்த்து இருக்கிறேன். லால் சிங் சத்தா திரைப்படத்தில் நிறைய இந்திய வரலாறு பேசப்பட்டு உள்ளது. நானும் அமீர் கானும் இந்திய வரலாறு குறித்து அதிகம் பேசினோம். இதை ஒரு ரசிகருக்கான தருணமாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தெலுங்கு படத்தையும் வெளியிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.