நிதிஷ்குமாருடன் கூட்டணிக்கு நாங்க ரெடி: லாலுவின் ஆர்ஜேடி!

பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை விட்டு பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் விலகினால் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் அறிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் சட்டசபைக்கு கடந்த 2020-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேநேரத்தில் பாஜகவுக்கு சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆதரவு தந்தது. மேலும் ஜேடியூவுக்கு எதிராக லோக் ஜனசக்தி வேட்பாளர்களையும் நிறுத்தியது. இன்னொரு பக்கம் லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் ஒரு அணியாக களம் கண்டன. அத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 125 இடங்களில் வென்றது. பீகாரில் ஆட்சி அமைக்க தேவை மொத்தம் 122 எம்.எல்.ஏக்கள். பாஜக 74; ஜேடியூ 43; விஐபி கட்சி 4; ஹிந்துஸ்தான் ஆவாம் கட்சி 4 இடங்களில் வென்றிருந்தன. ஆர்ஜேடி கூட்டணி மொத்தம் 110 இடங்களைப் பெற்றிருந்தது. ஆர்ஜேடி 75 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 16 இடங்களில் வென்றனர். ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 5 இடங்களில் வென்றது. தற்போது ஓவைசி எம்.எல்.ஏக்கள் ஆர்ஜேடியில் இணைந்ததால் அக்கட்சிக்கு மொத்தம் 80 இடங்கள் உள்ளன.

பீகார் சட்டசபை தேர்தலின் போதும் சரி, தேர்தலுக்கு பின்பு கூட்டணி ஆட்சி அமைந்தாலும் சரி ஜேடியூ-பாஜக இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பீகாரில் உறவாடி கெடுக்கும் பாலிசி அடிப்படையில் ஜேடியூவை இல்லாது ஒழிப்பதில் பாஜக மும்முரமாகவே இருக்கிறது. இதனால்தான் தேர்தலின் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தியை, ஜேடியூவுக்கு எதிராக இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்தது பாஜக. அக்கட்சி எதிர்பார்த்தபடியே ஜேடியூ குறைவான இடங்களில்தான் வென்றது. கடந்த 2 ஆண்டுகளாக முட்டல் மோதலுடன் கூட்டணி அரசு ஓடிக் கொண்டிருக்க, இப்போது ஜேடியூ-பாஜக கூட்டணி முறியும் நிலை உருவாகிவிட்டது. இதனால் பாஜக-ஜேடியூ ஆட்சி கவிழும் நிலை உள்ளது. 2024 லோக்சபா தேர்தலை கணக்கில் போட்டு இப்போதே பாஜகவிடம் இருந்து விலகுகிற முடிவுக்கு வந்துவிட்டார் நிதிஷ்குமார் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுக்கு நட்புக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறார் நிதிஷ்குமார்.

இது தொடர்பாக ஆர்ஜேடியின் தேசிய துணைத் தலைவர் சிவானந்த் திவாரி கூறுகையில், “பீகார் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தில் இருப்பது தெளிவாகி உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை நிதிஷ்குமார் தூக்கி எறிந்தால், அவரது ஜேடியூவுடன் கூட்டணி அமைக்க ஆர்ஜேடி தயாராகவே உள்ளது” என்றார். தற்போதைய நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 125; ஆர்ஜேடி அணிக்கு 115 இடங்கள் உள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகி ஆர்ஜேடி அணியில் இணைந்தால் ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ்- இடதுசாரிகள் இணைந்து எளிதாக புதிய ஆட்சியை அமைத்துவிட முடியும் என்பது கள நிலவரமாகும்.

அண்மைக்காலமாகவே, பாஜக – ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையேயான உறவு சரியில்லாமல் இருந்து வருகிறது. சமீபகாலமாக பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்திருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டதை நிதிஷ் குமார் காரணம் காட்டினாலும், பாஜகவுடன் கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் மத்திய அரசின் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வகையில், சுமார் 5 கூட்டங்களை நிதிஷ் குமார் இதுவரை புறக்கணித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொலைபேசியில் அழைத்து பேசிய நிதிஷ் குமார், அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அதேசமயம், ஐக்கிய ஜனதாதள கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.,க்கள் கூட்டத்துக்கும் நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும், இது வழக்கமாக நடைபெறும் கூட்டம் எனவும், தேவையற்ற யூகங்கள் தேவையில் எனவும் ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ளார். அதேசமயம், பாஜகவுடனான கூட்டணி முறியும் அளவுக்கு உள்ளதாக ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தகவல் தெரிவிக்கின்றனர்.