தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகைக்கு மாற்றிவிடலாம் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்து இருக்கிறார்.
75 வது சுதந்திர தின விழா தொடர்பாக மத்திய அரசு அமைத்த குழுவில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றார். அங்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காஷ்மீர் பைல்ஸ் படத்தில் நடித்த அனுபம் கேர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களுடன் ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் டெல்லியிலிருந்து திரும்பிய ரஜினிகாந்த் நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் சனாதனம் குறித்தும் பேசி வருகிறார். அவரது பேச்சுக்களுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மரியாதை நிமித்தமாக ஆளுநர் 20 முதல் 25 நிமிடங்கள் சந்தித்து பேசினேன். ஆளுநர் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் அதிகம் நேசிக்கிறார். இங்குள்ள மக்களின் ஆன்மீக உணர்வு அவரை கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நண்மை செய்ய தயாராக உள்ளதாக அவர் சொன்னார்” என்றார்.
ஆளுநரிடம் அரசியல் குறித்து விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், “அரசியல் பற்றி விவாதித்தோம். இப்போது அதுபற்றி சொல்ல முடியாது” என்றார். ஜி.எஸ்.டி. வரி உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது “நோ கமெண்ட்ஸ்” என்று கூறி “அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை” என்று கூறினார்.
ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியதாக ரஜினி தெரிவித்ததற்கும், ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியதற்கும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, “தமிழக பாஜக அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகைக்கு மாற்றிவிடலாம்!” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி மூலமாக பாஜக அரசு தமிழக ஜன நாயகத்தை, உரிமைகளை பறிக்க முயல்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து விலைவாசியும் விண்ணை தொட்டுள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கை உலக சந்தையில் கச்சா எண்ணெய் 108 டாலருக்கு விற்ற போது, இந்தியாவில் மன்மோகன் சிங் 70 ரூபாய்க்கு பெட்ரோல் கொடுத்தார். தற்போது 60, 70 டாலருக்கு விற்கும் நிலையில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் தருகிறார்கள். இதைவிட வெளிப்படையாக எதை கூறுவது. விலைவாசி உயர்வுக்கு ஏழை மக்கள்தான் அதிகம் பாதிப்படைகின்றனர். இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல் அரிசிக்கு 5 ரூ ஜிஎஸ்டி வரி என்பதால் 2 முதல் 3 ரூபாய் விலை ஏற்றம் ஏற்படுகிறது. சாதாரண இந்திய மக்களுக்கு தீமையான செயல்களையே செய்வதால் பண வீக்கம் வரலாறு காணாமல் உள்ளது. இதை எல்லாம் விவாதிக்க அறிஞர்களையோ, எதிர்கட்சியையோ அழைப்பதில்லை. எனவே தான் இந்தியாவின் நிலை மோசமாகி வருகிறது. சிறந்த விவசாய கொள்கை இல்லை. விவசாயத்திலும் அம்பானி, அதானியை கொண்டு வர நினைக்கிறார்கள்.
தமிழகத்தை பொருத்த வரை ஆளுநர் ரவி அவர்கள் ஜன நாயக முறைப்படி செயல்படும் தமிழக அரசை துன்புறுத்தும் வகையில் சிரமம் கொடுக்க வேண்டும் என கருதுகிறார். துணை வேந்தர்களை தன்னிச்சையாக அழைத்து பேசுகிறார். உயர்கல்வி அமைச்சருக்கு தெரியாது, தமிழக அரசுக்கு தெரியாது. ஆளுநர் மாளிகையில் கல்விக்கொள்கை பற்றி கருத்தரங்கு நடத்துகிறார். மரபுகளுக்கு விரோதமாக நடந்து கொள்கிறார்.
ஆளுநர் ரவி மூலமாக பாஜக அரசு தமிழக ஜன நாயகத்தை, உரிமைகளை பறிக்க முயல்கிறது. அதனை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. தமிழத்தில் ரஜினி அவர்களை ஆளுநர் ரவி சந்தித்துள்ளார். தமிழக மக்களுக்காக ஆளுநர் உழைக்க தயாராக உள்ளதாகவும் ரஜினி அவர்கள் கூறியதாக தகவல். ஆனால் தமிழக மக்களுக்காக சொல்லியிருக்க வேண்டியது நீட் தேர்வை விலக்கு செய்ய வேண்டும் என ரஜினி கூறியிருக்க வேண்டும். அது தமிழக மக்களுக்கு உதவியாக இருக்கும். இந்தியாவில் அதிகமான வரி வருவாய் 6 சதவீதம் தமிழகம் தரும் நிலையில், திட்டங்கள் மூலமாக தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுப்பது 1.2 சதவீதம் தான். அதை உயர்த்தி கொடுக்க வேண்டும் என கேட்டிருந்தால் தமிழக மக்களுக்கு அவர் செய்த கைமாறாக இருந்திருக்கும். கேட்டாரா என தெரியவில்லை.
மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பொதுமக்களுக்கு விரோதமாக சிந்திக்கிறது. மின்சார கட்டணம் உயர்கிறது. விவசாய மின் கட்டணம் என்பது ராணுவத்திற்கு இலவச நிதி ஒதுக்கிட்டை போன்றது. இந்தியா முழுவதும் இலவச விவசாயம் வந்ததால் தான் அதிக தானிய உற்பத்தி கிடைத்துள்ளது. இதனால் இறக்குமதிக்கான செலவு குறைந்துள்ளது. இதனால் தான் நாம் தானிய ஏற்றுமதியில் உள்ளோம். இலவசம் பற்றி படித்தவர்களிடம் கூட தவறான கருத்து நிலவுகிறது. அதை மாற்ற வேண்டும். மின்சார வசதி பெற வாய்ப்பிலாதவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது வரவேற்கத்தக்கது. உதய் திட்டத்த்தை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.