தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்று பொய்களைப் பரப்பி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார்.
விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு கெலோ இந்தியா எனப்படும் விளையாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் அதிகபட்சமாக குஜராத்திற்கு 608 கோடி ரூபாய், உத்தர பிரதேசத்திற்கு 503 கோடி ரூபாய், அருணாச்சல பிரதேசத்துக்கு 183 கோடி ரூபாய், கர்நாடகாவிற்கு 128 கோடி ரூபாய், மகாராஷ்டிராவுக்கு 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு 33 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கெலோ இந்தியா (Khelo India) திட்டத்தின் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், விளையாட்டு உள் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாநில அரசின் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல், தெரிந்து கொள்ள எந்தவித முயற்சியையும் எடுக்காமல் பொய்களைப் பரப்பி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு.
இது ஒரு டிமாண்டு டிரைவன் (Demand Driven) திட்டம். மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தி மத்திய அரசிடம் நிதி பெற்று தங்களது மாநில விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளனர். மாநில பட்டியலில் உள்ள விளையாட்டுத் துறைக்கு நமது மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறி விட்டது என்பதே நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.