பீகாரில் புதிய ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரினார்!

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ஆளுநர் பாகு சவுகானை ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் சந்தித்தார். இச்சந்திப்பின் போது 160 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தமக்கு இருப்பதால் புதிய ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் நிதிஷ்குமார்.

பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிட்டது. பாஜகவுடனான உறவை ஜேடியூ முறித்துக் கொண்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார். அம்மாநில ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் நிதிஷ்குமார். இதனைத் தொடர்ந்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை, லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் நிதிஷ்குமார். இதன்பின்னர் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள், ஜேடியூ எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணியின் தலைவராகவும் சட்டசபை தலைவராகவும் – பீகார் முதல்வராகவும் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டம் முடிவடைந்ததும் தேஜஸ்வி யாதவுடன் ஆளுநரை மீண்டும் சந்தித்தார் நிதிஷ்குமார். இச்சந்திப்பின் போது ஆர்ஜேடி, ஜேடியூ,காங்கிரஸ்,இடதுசாரி கட்சிகளின் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்.

புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் அழைப்பு விடுத்த உடன் பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார். பாட்னாவில் நாளையே நிதிஷ்குமார் பதவியேற்பு விழா நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது. நிதிஷ்குமாரின் புதிய ஆட்சியில் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் பதவி மற்றும் உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்படும். ஆனால் காங்கிரஸ் கட்சி தமக்கு 4 அமைச்சர்கள் பதவி ப்ளஸ் சபாநாயகர் பதவி கேட்பதாக கூறப்படுகிறது. பாட்னாவில் முதல்வராக பதவியேற்ற பின்னர் டெல்லி செல்லும் நிதிஷ்குமார் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்திக்கிறார். இச்சந்திப்பின் போது பீகார் அமைச்சர் பதவிகள் குறித்தும் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்துவார் என்று தகவல்கள் கூறுகின்றன.