முதல்வர் நினைத்தால் ஒரே நாளில் போதைப்பொருள் புழக்கத்தை நிறுத்தலாம்: உதயகுமார்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட முன்வருவாரா என அதிமுக முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் எம்.எல்.ஏவுமான ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் எம்.எல்.ஏக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து கடிதம் எழுதியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது என ஆர்பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

போதைப் பொருட்களை தடுக்க தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, அனைத்துக் கட்சிகளின் எம்.எல்.ஏக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு குறித்து கடிதம் எழுதினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், போதைப்பொருள் தடுப்புப் பணியில் திமுக அரசின் செயல்பாட்டை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியார்களிட்ம ஆர்பி உதயகுமார் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒரு கோடியே 75 லட்சம் இளைஞர்கள் உள்ளனர். இதில் 90 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருந்து வருகின்றனர். இவர்கள் மனம் அழுத்தத்தால், குடும்பச் சுமையால், கூடா நட்பால் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி அமைந்த 5வது மாதத்திலே, தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் இது குறித்து சட்டமன்றத்திலும் கொலை, கொள்ளை, பாலியல் போன்ற சம்பவங்கள் போதைப் பொருட்களால் நடைபெறுகிறது என்றும் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிப் பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சரின் வார்த்தைகள் அழகாக இருந்தன. ஆனால், செயல்பாட்டில் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. போதைப்பொருள் குறித்து முதலமைச்சர், காவல்துறைக்கு கண்டிப்பாக உத்தரவிட்டாலே போதும், ஒரே நாளில் வேட்டையாடி தடுத்து நிறுத்த முடியும். ஆனால், இதுகுறித்து விழிப்புணர்வு நடத்தப்படும் என்று கூறுகிறார். இது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடையில் கூட விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத்திருப்பார்கள்.

விழிப்புணர்வு நடவடிக்கைகளில் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. சமூக அக்கறையோடு அரசு இதில் தீவிரம் காட்ட வேண்டும். குறிப்பாக, பள்ளி, கல்லூரி வாசல்களில் போதைப்பொருள் விற்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும். போதைப் பொருள் வழக்குகளில் குண்டர் சட்டத்தில் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும். அதேபோல் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களில் எத்தனை பேர் சொத்துக்கள் முடக்கப்பட்டது என்பதையும் வெள்ளை அறிக்கையாக முதலமைச்சர் வெளியிட வேண்டும்.

குற்றச் செயல்கள் தமிழகத்தில் சுமார் 50 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக போக்சோ வழக்கில் கைதானவர்களும், கூட்டு பலாத்கார வழக்கில் கைதானவர்களும் போதைமருந்து உட்கொண்டோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் வண்ணம், போதை மருந்து தடுப்பதில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.