3 நிதி நிறுவன சொத்துக்களை அரசு முடக்க வேண்டும்: ராமதாஸ்

அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்களின் சொத்துக்களை அரசு முடக்க வேண்டும் என்று, டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களிடம் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதும், அத்தகைய மோசடி நிறுவனங்களை முளையிலேயே கிள்ளி எறிய காவல்துறை தவறுவதும் மிகுந்த கவலை அளிக்கின்றன. 3 நிதி நிறுவனங்களும் மோசடி செய்த தொகை இன்னும் மீட்கப்படவில்லை; அவற்றின் சொத்துகளும் முடக்கப்படவில்லை.

மோசடி நிறுவனங்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 420 போன்ற சாதாரண பிரிவுகளில் தான் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அந்நிறுவன உரிமையாளர்கள் எளிதாக தப்பிவிடக்கூடும். சொத்துகள் முடக்கப்படாத நிலையில் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் முதலீட்டை மீட்டெடுத்து வழங்குவதற்கான வாய்ப்புகளும் குறைவு ஆகும். மோசடி நிதி நிறுவனங்கள் மீது இன்னும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட வேண்டும். தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் மோசடி நிறுவனங்கள் குவித்துள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்பட வேண்டும். பொதுமக்களிடம் வாங்கிக்குவித்த முதலீடுகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காக அமலாக்கப்பிரிவின் மூலமும் விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.