இமாச்சல பிரதேசத்தில் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் சிபிஐஎம் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.
இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜகத் சிங் நேகி, ராம் லால் தாக்கூர், ஹர்ஷ்வர்தன் சவுகான், சுக்விந்தர் சுகு மற்றும் சிபிஐஎம் எம்எல்ஏ ராகேஷ் சிங்ஹா ஆகியோர் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து சட்டப்பேரவையில் பேசினர். ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்தனர். ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இமாச்சல பிரதேச மாநிலத்தில் இதுவரை 354 கொலைகள், 1,574 கற்பழிப்புகள் மற்றும் 7,406 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன எனக் குற்றம்சாட்டினர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் அமைச்சர்கள் முதல்வர் தாக்கூர், அவரது அமைச்சரவை சகாக்கள் ராகேஷ் பதானியா, பிக்ரம் சிங் தாக்கூர், சுக் ராம் சவுத்ரி பேசினர். அப்போது, எதிர்க்கட்சிகள் உறுதியான பிரச்சனைகளை கொண்டு வரத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினர். இந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பேசும்போது எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபையில், பாஜகவுக்கு 43 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 22 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளனர். இவர்கள் தவிர 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இணைந்த நிலையிலும் அவர்கள் இன்னும் சுயேச்சை எம்.எல்.ஏக்களாகவே தொடர்கின்றனர்.