மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தால், கொஞ்ச நாளில் தாய்ப்பாலுக்கு கூட ஜி.எஸ்.டி வரி விதிப்பார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
பால், தயிர், உருளைக்கிழங்கு, கோதுமை மாவு, அரிசி உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஜிஎஸ்டி விலை உயர்வை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஈரோட்டில் பாஜக நெசவாளர் பிரிவின் சார்பில் தேசிய கைத்தறி தின விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். ஈரோட்டில் ஊர்வலம் செல்ல போலீசார் தடை விதித்தபோதும் தடையை மீறி அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஊர்வலமாகச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூரில் காமராஜ் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி வரி விதிப்பை விமர்சித்ததோடு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் கடுமையாகச் சாடினார். செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தான் செல்லும் இடங்களில் எல்லாம் சட்டத்தை மீறுகிறார். போலீசார் கூறுவதை கேட்பதும் கிடையாது. ஈரோட்டில் ஊர்வலமாகச் செல்ல காவல்துறையினர் தடை விதித்தபோதும், தடையையும், சட்டத்தையும் மீறி அவர் ஊர்வலமாக சென்றுள்ளார். ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு இது அழகா?
பால், நெய், தயிர் மீது ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தால், இன்னும் கொஞ்ச நாளில், தாய்ப்பாலுக்கு கூட ஜி.எஸ்.டி வரி விதிப்பார்கள். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, நெசவாளர்களை தெருவில் இறங்கி போராடத் தூண்டுவதை விட அங்கு ஓடும் சாக்கடைகளை சுத்தம் செய்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.