அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில், அமமுகவுக்கு தலைவரை தேர்ந்தெடுப்பது, பேரறிவாளனை போல மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுவிக்க கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளதாக பழனிசாமி குறித்து மறைமுகமாக கூறினார்.
சொந்த காட்சியிலேயே பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்கும் கேவலமான நிலையில் அதிமுக உள்ளது என்றார். ஒற்றைத் தலைமை என்றால் பொதுச் செயலாளர்தான் வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய டிடிவி தினகரன், அவர் திருந்தினால் அவருடன் சேர யோசிப்பேன், ஆனால் திருந்த வாய்ப்பே இல்லை என்று மறைமுகமாக விமர்சனம் செய்தார். தலைவர் பதவியை ஏன் நிரப்பவில்லை என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியதால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் துரோகிகளை வெற்றி பெற விடாமல் செய்தது அமமுக என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அமமுக வெற்றிபெறும். அமமுகவின் வெற்றி தாமப்படுத்தலாமே தவிர, வெற்றியை தடுக்க முடியாது. தேர்தல் வெற்றி, தோல்வி என்னை பாதித்ததில்லை. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் அல்லல்பட்டு கொண்டிருப்பதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார்.