ரிலையன்ஸ் குழும அதிபரான முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளைக்க் சொந்தமான Reliance Foundation’s Harskisandas Hospital மருத்துவமனைக்கு இன்று காலை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் தம்மை தீவிரவாதி என்று கூறிக் கொண்டு, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக டிபி மார்க் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது. இன்று மட்டும் மருத்துவமனை எண்ணுக்கு 8 முறை இதேபோன்ற கொலை மிரட்டல் தொலைபேசிகள் அழைப்பு வந்திருக்கின்றன. இப்புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டு அருகே வெடிபொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கார், தொழிலதிபர் மான்சுக் ஹிரனுக்கு சொந்தமானது. இந்த கார் பிடிபட்ட சில நாட்களில் மான்சுக் ஹிரன், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். ஆனால் மான்சுக் ஹிரனின் காரை போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சச்சின் வாஸ், தேசிய புலனாய்வு ஏஜென்சியால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போதே இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்நிலையில் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரே நாளில் ஒரே எண்ணுக்கு 8 முறை மிரட்டல் வந்திருப்பதால் போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணையைத் தீவிரப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே முகேஷ அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.