மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 800 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
ஈரோடு புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டு உள்ள புத்தக அரங்குகளையும், தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள இல்லம் தேடி கல்வி அரங்கையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பள்ளியறை பூங்கொத்து திட்டம் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. அதை மீண்டும் நல்ல முறையில் செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம். மாணவ-மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு ஆர்.பி.எஸ். திட்டம் மூலமாக 413 ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு மனநல ஆலோசனை முக்கியம் என்பதால், 3 மாதங்களுக்கு ஒருமுறை டாக்டர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று ஆலோசனை வழங்க உள்ளார்கள். இதற்காக 800 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது. வழக்கம்போல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களின் கோரிக்கைகள் நியாயமானதாக உள்ளது. அவர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் போதை பொருட்கள் பழக்கத்தை தடுக்க கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. போதை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கல்வித்துறை, போலீஸ் துறை, சமூக நலத்துறை உள்பட பல்வேறு துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.