மலிவான அரசியல் செய்தவரை மக்கள் அறிவார்கள்: அண்ணாமலை

ராணுவ வீரர் அஞ்சலி நிகழ்வில் மலிவான அரசியல் செய்தவர் யார்? என்பதை தமிழ்நாடறியும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் மூவர்ண கொடியை போற்றுவோம் என்ற அறிக்கையை படிக்க நேர்ந்தது. தங்கள் நாடக அரசியலின் அடுத்த தேசபக்தி ஸ்டிக்கர் ஒட்டும் காட்சியை நானும், தமிழக மக்களும் அறிந்துகொண்டோம். தமிழ் கூறும் நல்லுலகிற்கு தங்கள் தகுதி நன்றாக தெரியும். தாங்கள் தேசியத்தை வெறுப்பவர்கள். போலி திராவிடத்தை தூக்கிப்பிடிப்பவர்கள். எப்போதெல்லாம் உங்களுக்கு எதிர்ப்பு வலுக்கிறதோ, அப்போதெல்லாம் உங்கள் தனி திராவிட நாடு கோரிக்கையை கையில் எடுப்பீர்கள். மாநில முதல்-அமைச்சராகிய உங்கள் முன்னால் உங்கள் கட்சியின் 2ஜி ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர் “தேவைப்பட்டால் தனி திராவிட நாடு கோரிக்கையை கையில் எடுப்போம்” என்று பேசியபோது அவரை கண்டிக்காமல், புன்முறுவலுடன் ரசித்த உங்கள் நாட்டுப்பற்றும், உங்கள் தேசிய பற்றும் தெளிவாக அனைவருக்கும் புரியும்.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று தேசியத்திற்கு பெருகிவரும் ஆதரவை கண்டவுடன், தங்களுக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது. அதனால் சுதந்திர தினத்தைக் கூட சுதந்திரமாக கொண்டாட விடாமல், உங்கள் அடக்குமுறை அரசியலை வெளிப்படுத்துகிறீர்கள். எங்கள் கட்சியின் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பாரத அன்னைக்கு மரியாதை செய்ததற்காக தேசிய கொடியை ஏற்றியதற்காக கைது செய்து இருக்கிறீர்கள். இதுவா தங்கள் தேசபக்தி?.

ராணுவ வீரர் லட்சுமணன் பூதவுடலைப் பெற, மதுரை விமான நிலையத்திற்கு பா.ஜ.க. தலைவர்களும், உறுப்பினர்களும் சென்றிருந்தபோது அங்கே வந்திருந்த தமிழக நிதி அமைச்சர் அஞ்சலி செலுத்தும் அரசு நிகழ்ச்சியை அரசியலாக்கி தரம் தாழ்ந்து நடந்து கொண்டார். மறைந்த வீரர் லட்சுமணன் தி.மு.க.வுக்குகாக போராடி உயிரிழக்கவில்லை. இந்த நாட்டுக்காக போராடி வீர மரணம் எய்தி இருக்கிறார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. இதில் மலிவான அரசியல் செய்தவர் யார்? என்பதை தமிழ்நாடறியும். உங்கள் அமைச்சரின் காரின் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை நான் நியாயப்படுத்தவும் இல்லை. அதை ஆதரிக்கவுமில்லை.

ஸ்டிக்கர் ஒட்டும் கலையில் வித்தகரான நீங்களும், உங்கள் கட்சியினரும் தமிழகத்தில் நம் பிரதமருக்கு கிடைத்த ஆதரவை கண்டவுடன் தேசப்பற்று ஸ்டிக்கரை நெற்றியில் ஒட்டிக்கொள்ள தயாராகி இருக்கிறீர்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம். மூட அரசியல் தனத்தை சட்டப்படி அடக்குவோம் என்று முழங்கி இருக்கின்றீர்கள். உங்கள் அடக்குமுறையைக் கண்டு நாங்கள் யாரும் அஞ்சப்போவதில்லை. நாட்டின் இறையாண்மைக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிராக எவர் புறப்பட்டாலும், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க பா.ஜ.க.வின் ஒவ்வொரு தொண்டனும் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவர் பின்னாலும் நானும், என் மூத்த தலைவர்களும் இருக்கிறோம் என்ற உண்மையை தயவுசெய்து மறந்துவிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.